ப.திருமாவேலன்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிரிகள் யார் என்றால், திராவிடத்தின் எதிரிகளும் திராவிடர்களின் முன்னேற்றத்துக்கு எதிரிகளும் தான்!
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாளிலேயே அதன் கொள்கையைப் பேரறிஞர் அண்ணா தெளிவுபடுத்தினார்.

“திராவிட முன்னேற்றக் கழகம் – போட்டிக் கழகம் அல்ல. திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது. திராவிடர் கழகத்துக்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான் திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதே தான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில் கருத்துகளில் மாறுதல், மோதுதல் எதுவும் கிடையாது.
சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் குறிக்கோள், அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலை ஆகிய கொள்கைகள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும். திராவிட முன்னேற்றக் கழகம் தனியாய் பெரியார் வகுத்துச் சென்ற அதே பாதையிலே தீவிரமாய்ச் செல்ல முனைந்திருக்கிறது..இதோ, நம் கண்முன் வடநாட்டு ஏகாதிபத்தியம், மக்களைப் பாழ்படுத்தும் பாசிசம், பதுங்கிப் பாய நினைக்கும் பழைமை; இவை ஒழிய வேண்டும். பழைமையும் பாசிசமும் முறியடிக்கும் வரை ஓயமாட்டோம்; உழைப்போம். உருவான பலனைக் காண்போம்..” என்று 17.9.1949 அன்று நடந்த முதல் கூட்டத்திலேயே பேரறிஞர் அண்ணா அறிவித்தார்.
பெரியாரை விட்டு அண்ணா பிரிந்த மகிழ்ச்சியை எதிரிகள் ஒரே ஒரு நாள்கூட அனுபவிக்கவில்லை. விடவில்லை அண்ணா, அன்றைய தினமே, பெரியாரின் கொள்கைதான் என் கொள்கை’ என்று சொன்னதன் மூலமாக, ‘பெரியாரின் எதிரிகள்தான் என் எதிரிகள்’ என்பதைத் தெளிவுபடுத்தினார், அண்ணா. அதனால்தான் பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்ததை ரசித்த பலராலும் பின்னர் சிரிக்க முடியவில்லை. பெரியாரின் கொள்கைகளை மென்மையாக, தன்மையாகப் பேசினார் அண்ணா. பெரியார் பேசியதை சட்டம் ஆக்கினார்கள், அண்ணாவும் கலைஞரும். கனவு கண்ட நாட்டை உருவாக்கிவருகிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
இவர், வெறும் முதலமைச்சராக இருந்திருந்தால் இந்த எதிர்ப்பு இருக்காது. தனது ஆட்சிக்கு, ‘திராவிட மாடல் ஆட்சி’ என்றார். ஈராயிரம் ஆண்டுப் பகையின் தொடர்ச்சி, திராவிட இயக்கத்தின்மீது தனது படையெடுப்பை நடத்திவருகிறது.
திராவிடத்தின் எதிரிகள்
‘திராவிடம்’ என்ற சொல்லை ஆரியத்தின் எதிர்ப்பதமாக, தந்தை பெரியார் உருவாக்கினார். ஒரு காலத்தில் இடப் பெயராக, மொழிப் பெயராக, இனப் பெயராக இருந்தாலும் 1900 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ‘திராவிடம்’ என்பது ஒரு அரசியல் சொல்லாகவே நமது முன்னோர்களால் சொல்லப்பட்டது. பண்டித அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர், மருத்துவர் நடேசனார். தந்தை பெரியார், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், பாவேந்தர் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர் போன்றோரால் இது முன்மொழியப்பட்டது. இதனை அரசியல் தேர்தல் களத்தினுள் கொண்டுவந்தது திராவிட முன்னேற்றக் கழகம்.
யாரெல்லாம் அனைத்திலும் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்களோ அவர்கள் அனைவரையும், ஒதுக்கிவைக்கப்பட்ட வாசலை உடைத்து உள்ளே கொண்டுவருவதே ‘திராவிட’ அரசியல் ஆகும். இதனை விரும்பாத, திராவிட அரசியல் உருவாகும் வரை ஏகபோகத்தை அனுபவித்துவந்த கூட்டம், திராவிட முன்னேற்றக் கழகத்தை அன்றும் எதிர்த்தது. இன்றும் எதிர்க்கிறது.
சமூக நீதியின் எதிரிகள்
வகுப்புரிமை, இடஒதுக்கீடு, வகுப்புவாரி உரிமை, சமூக நீதி, ரிசர்வேஷன் ஆகிய அனைத்தும் ஒன்றைத்தான் சொல்கிறது, ‘யார் எவ்வளவு இருக்கிறார்களோ, அவ்வளவை அவர்களுக்கு பங்கிட்டுக் கொடு’ என்பதுதான். கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் பொருந்திய பதவிகள், கோயில், நிலங்கள், அனைத்து வகையான மரியாதைகளிலும் முன்னுரிமை ஆகியவை ஆரிய, பார்ப்பன, வர்ணாசிரம, வருண சக்திகளின் கையில் இருந்தது. இவை அனைத்தும் அவர்கள் நீங்கலான மற்ற மக்களை அடக்கிஒடுக்கும் பூச்சாண்டியாகப் புனையப்பட்டன.
இதனை அநீதி என்றது நீதிக்கட்சி. அரசியல் கட்சிகள் அனைத்தினுள்ளும் இதனை நுழைத்தார். தந்தை பெரியார். எந்தக் காங்கிரஸ் இந்தக் கொள்கையை ஏற்கவில்லை என்று சொல்லி பெரியார் வெளியேறினாரோ அதே காங்கிரஸின் முதலமைச்சர்களான ஓமந்தூர் குமாரசாமி ராஜாவும், பெருந்தலைவர் காமராசரும் ஏற்றுக்கொள்ளும் நிலையை பெரியார் உருவாக்கினார். திராவிட முன்னேற்றக் கழகக் காலம், இந்த சமூக நீதியை 69 விழுக்காடு வரைக்கும் உயர்த்திக் காட்டியது. 50 விழுக்காட்டுக்கு மேல் போகக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தாலும் 69 விழுக்காட்டை வைத்திருக்கிறது தமிழ்நாடு.
இதைப் பார்த்து, அனைத்து மாநிலங்களும் அகில இந்தியக் கட்சிகளும் சமூக நீதியைப் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றன. எனவேதான் சமூக நீதியின் எதிரிகள் தி.மு.க.வை எதிரியாகப் பார்க்கிறார்கள்.’
தமிழின் எதிரிகள்
தமிழ் ‘நீஷ பாஷை’ குளித்து முடித்த பிறகு காதில் தமிழ் விழுந்தால், மீண்டும் குளிக்க வேண்டும். ‘ஸ்நானம் பண்ணின பிறகு நீஷ பாஷையைக் கேட்க மாட்டா’ என்பது பெருமையாகச் சொல்லப்பட்ட காலத்தில் தமிழை வேலாகப் பயன்படுத்தியது, தி.மு.க. தமிழைக் கேடயமாகக் காத்தது. தி.மு.க.
‘தீக்குறள் ஓதோம்’ என்ற காலத்தில், திருக்குறளைத் தமிழ் வேதம் ஆக்கியது. திருக்குறள் மாநாடு நடத்தியது. வள்ளுவர் கோட்டம் கட்டியது. திரும்பும் திசைதோறும் திருக்குறளை எழுதியது. திருவள்ளுவர் ஆண்டை அரசின் ஆண்டாக அறிவித்தது. தமிழ்நாட்டின் தலைச் சின்னமாக 133 அடியில் திருவள்ளுவரை வைத்தது. சங்க இலக்கியத்தை மீட்டெடுத்தது. சிலம்பும் மேகலையும் இலக்கிய மேடைகளில் ஆடியது. தமிழில் அனைத்தும் வந்தது. தமிழ் படிப்பதைப் பெருமைக்குரியதாகவும் தகுதிக்குரியதாகவும் மாற்றியது. இதனால், தமிழின் எதிரிகளும் தி.மு.க.வை எதிர்க்கத் தொடங்கினார்கள்.
தமிழர் பண்பாட்டின் எதிரிகள்
‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்பது தமிழர் தம் பண்பாடு ஆகும். ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று நம்பிக்கைக்கு அல்ல, பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தமிழர் பண்பாடு ஆகும். ‘அந்தணர் என்போர் அறவோர்’ என சாதியை அல்ல குணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது, தமிழர் பண்பாடு ஆகும். ‘சாதி யிரண்டொழிய வேறில்லை’, ‘இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்’ என்கிறார் அவ்வை மூதாட்டி. இந்த நெறி, தமிழர் பண்பாடு ஆகும்.

“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர் அலைந் தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே!” என்கிறார்,
வள்ளலார் இராமலிங்கர். இவைதான் தமிழர் தத்துவ மரபின் தொடர்ச்சியும் நீட்சியும் ஆகும். இதனை ஒலிக்கிறது, திராவிட முன்னேற்றக் கழகம். இது யாருக் யாருக்கெல்லாம் கசப்பாக இருக்கிறதோ அவர்கள் தி.மு.க.வை எதிரியாகப் பார்க்கிறார்கள்.
தமிழினத்தின் எதிரிகள்
சாதியால், மதத்தால் பிளவுபடுத்தப்பட்டது தமிழினம். சாதி வேறுபாடுகள் அற்ற, மத மாறுபாடுகள் அற்ற தமிழ்ச் சமுதாயமாக இதனை ஆக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் எடுத்துவருகிறது. திராவிட முன்னேற்றக் கழகம். தமிழினம் என்ற ஓர்மைப்பட்ட இனமாக. ஒடுக்கப்பட்ட சமூகங்களை ஒன்றிணைப்பதை இன எதிரிகள் விரும்பவில்லை.
‘நாம் இனமாக ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, சாதியால் பிரித்தார்கள். நாம் இனமாகப் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக, மதத்தால் இணைக்கப் பார்க்கிறார்கள்’ என்று எழுதினார், எழுச்சிக் கவிஞர் அறிவுமதி. தமிழின மேன்மையை, முன்னேற்றத்தை, ஒற்றுமையை வலியுறுத்துகிறது, கழகம். அதனால், இன எதிரிகளால் எதிர்க்கப்படுகிறது.
இந்தி வெறியர்கள்
இந்தியாவை ‘இந்தி’யாவாக ஆக்க நினைக்கும் சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது திராவிட இயக்கம். ‘இந்தியால் தமிழ் அழிந்துவிடாது. தமிழை எந்த மொழியும் அழித்துவிடாது. ஆனால், இந்தி ஆதிக்கத்தால் தமிழர் பண்பாடு அழிந்துபோகும். எனவே, இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது மொழிப்போராட்டம் அல்ல, இனப் போராட்டம், பண்பாட்டுப் போராட்டம்’ என்றார் தந்தை பெரியார். 1938ஆம் ஆண்டு, அவர் ஏற்றிய இந்தி எதிர்ப்பு தீப்பந்தம் இன்றும் எரிந்துகொண்டு இருக்கிறது. மொழி காக்கும் போராட்டத்தைத் தொடங்கிவைத்தார் பெரியார். இந்தியைக் காக்கும் சட்ட எரிப்புப் போராட்டமாக மாற்றினார்கள், அண்ணாவும் கலைஞரும். உயிரை உடலை இந்திக்கு எதிராக 1965ஆம் ஆண்டு, தின்னத் தந்தார்கள் தி.மு.க. தியாகிகள். இன்றைக்கு வரை ‘1965’ அச்சம் இந்தி வெறியர்களுக்கு இருக்கிறது.
மும்மொழித் திணிப்பை எந்த வகையில் நடத்தினாலும் திராவிட நாயகன் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்த்துவருகிறார். இந்தி திணிப்பு என்பது தமிழ்க் காப்பாக இருக்கிறது. ‘இந்தி படித்தால் வேலை கிடைக்கும்’ என்று இப்போது யாரும் சொல்வது இல்லை. இந்திக்காரர்களே இங்கு வேலைக்கு வந்து தமிழ் கற்கத் தொடங்கிவிட்டது, உள்ளூர் இந்தி திணிப்பு வெறியர்களுக்கு வேர்த்துவருகிறது.
சமஸ்கிருத மோகிகள்
உயிரற்ற உடலுக்கு பவுடர் அடிப்பதும் சமஸ்கிருதத்துக்கு சாமரசம் வீசுவதும் ஒன்றுதான். யாருக்கும் தாய்மொழி என்று சொல்லப்படாத சமஸ்கிருதம் இன்று, தேவ பாஷையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த சமஸ்கிருதம் கோயிலில் வேண்டாம். சடங்குகளில் வேண்டாம். திருமணத்தில் வேண்டாம். தீபாராதனையில் வேண்டாம். இசையில் வேண்டாம். கலையில் வேண்டாம். அந்த மொழியே வேண்டாம்… என்று சொல்லியது திராவிட இயக்கம். ஆனாலும் தமிழர்களை விரட்ட, மிரட்ட சமஸ்கிருதம் தேவைப்படுகிறது சிலருக்கு. தேவபாஷை புனிதத்தைக் கேள்வி கேட்டது, திராவிட இயக்கம்.
கோயில்களில் தமிழில் வழிபாடு. திருமணங்களில் சுயமரியாதை வகைமுறை, இசையில் தமிழிசை. கலையில் தமிழ்க் கலை, என மாற்றுப் பண்பாட்டை மாற்றியவர்கள், திராவிட இயக்கத்தினர். எப்படி ஏற்பார்கள் சமஸ்கிருத கோஷ்டிகள்?
ஆரியச் சார்புடையோர்
துக்ளக் குருமூர்த்தி, திருச்சி கல்யாணராமன் வகைப்பட்ட கோஷ்டிக்கு தி.மு.க. எப்படிப் பிடிக்கும்? இவர்களுக்குத் தமிழ் ஆகாது. தமிழர் ஆகாது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவது ஆகாது. கல்லூரிக்குள் எல்லாரும் வந்து படிப்பது ஆகாது. பல்கலைக்கழகப் பட்டங்கள் தனக்கு மட்டுமே சொந்தம் எனச் சொல்வார்கள். வேத நாகரிகமே சிறந்தது என்பார்கள். கீழடியைக் கேட்டால், அவர்களது கீழ் மடி காந்தும். இராஜாஜிக்குப் பிறகு அறிவாளியாக அவர்கள் யாரையும் ஒப்புக்கொள்வது இல்லை. அவர்களுக்கு சங்கராச்சாரியாரைத் தவிர சாமியார் யாருமில்லை. புத்திசாலித்தனம் தனக்கு மட்டுமே சொந்தம் எனக் கொண்டாடுவார்கள். இவை அனைத்தையும் மாற்றி, ஒவ்வொரு துறையிலும் தமிழர்களை முன்னேற்றி, அவர்களைக் கொண்டாடிவரும் தி.மு.க.வைப் பார்த்தால் ஆரியச் சார்புடையோருக்கு அடிவயிறு எரியாதா?
பன்முக இந்தியாவை மறுப்பவர்கள்
இந்தியா பன்முக நாடு. பல்வேறு இனம், மொழி, மதம், பண்பாடு கொண்டவர்களின் சேர்க்கைதான் இந்தியா. தனது தனது ஆளுகைக்குக் கொண்டுவந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், ஓட்டுமொத்த பரப்பையும் ஒன்றாக ஆக்கினார்கள். இத்தகைய வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இந்தியாவின் ஒருமைப்பாடு ஆகும்.
எந்த இந்திய நிலப்பரப்பை பிரிட்டிஷார் ஒன்றாக்கினார்களோ, அதே பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டம்தான் ‘இந்தியர்’ என்ற ஒற்றுமையை உருவாக்கியது. ஒன்றுபட்டுப் போராடினோம். ஆனால், விடுதலை இந்தியாவை அனைவர்க்குமான இந்தியாவாக வைத்திருக்காமல் ஒற்றை மொழி, ஒற்றை இனம், ஒற்றை மத மக்களுக்கான இந்தியாவாக மாற்ற முனைகிறார்கள் சிலர். இந்த சர்வாதிகாரத்தை, எதேச்சதிகாரத்தை தி.மு.க எதிர்க்கிறது. அதனால், அவர்கள் தி.மு.க.வை எதிர்க்கிறார்கள்.
வர்க்கம் -வருணம் வேறுபாடு புரியாதோர்
இந்தியாவில் வர்ண வேறுபாடுதான் மிக முக்கியமான பிரிவினையாக இருக்கிறது. இதற்கு, திராவிட இயக்கம் முக்கியத்துவம் கொடுப்பதை சில பொதுவுடமை இயக்கங்கள் விமர்சிக்கின்றன. இனவாதம் பேசுவதாகவும் வகுப்புவாதம் பேசுவதாகவும், கொச்சைவாதம் என்றும் வறட்டு வாதம் என்றும் விமர்சிக்கின்றன. 200 ஆண்டுகளுக்கு முன்னால் மாமேதை கார்ல் மார்க்ஸ் சொன்னதே இவர்களுக்குப் புரியவில்லை.
‘இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் எவ்வாறு மாறியபோதிலும் சமுதாய நிலை மாறவில்லை. இந்தியாவின் முன்னேற்றத்துக்கும். இந்தியாவின் அறிவாற்றலுக்கும் மிக முட்டுக்கட்டையாக இருக்கும் சாதிகளுக்கு அடிப்படையாக இருப்பது, பரம்பரைக் குலத் தொழில்கள்தான். சிறு சமூகங்கள் சாதி வேறுபாடுகளாலும், அடிமை முறையாலும் களங்கமடைந்திருக்கின்றன. இயற்கையின் எஜமானன் ஆன மனிதன், விலங்குகள் முன் மண்டியிட்டு வணங்குகிறான். அவை மனிதனது சிந்தனையைக் குறுகிய வட்டத்தில் சுழலச்செய்து, அதனை மூடநம்பிக்கைக்கு ஏற்ற கருவியாகவும் மரபின் அடிமையாகவும் செய்து, அதன் மேன்மை முழுவதையும் வரலாற்றுப் படைப்பாற்றல் அனைத்தையும் இழக்கச் செய்துவிட்டன.
இந்தியக் கிராமச் சமூகங்கள் மனித மூளையைச் சின்னஞ்சிறு கூட்டுக்குள் அடைத்து, அதைவிட மூடநம்பிக்கையின் சுலபமான கருவிகளாகவும் பரம்பரைச்சம்பிரதாய விதிகளின் அடிமையாக ஆக்கியதையும், அனைத்து வகைப்பட்ட சிறப்புகளையும் வரலாற்றுப்பூர்வமான சக்திகளையும் மனித மூளை பெறமுடியாமல் செய்ததையும் நாம் மறக்க முடியாது.
இந்தியாவில் இரண்டு கடமைகளை இங்கிலாந்து ஆற்றவேண்டியிருக்கிறது. ஒன்று அழிக்கும் வேலை, மற்றொன்று புத்துயிரளிக்கும் வேலை. பழைய ஆசிய சமுதாயத்தை அழிக்க வேண்டும். அத்துடன், ஆசியாவில் மேற்கத்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கான அடிப்படைகளை அமைக்க வேண்டும். ஆசியாவின் சமூகநிலையில் அடிப்படையான புரட்சி ஏற்படாமல் மனிதகுலம் தன் லட்சியத்தில் நிறைவு எய்துமா என்பதே கேள்வி’ என்றார் மார்க்ஸ். இது குறித்து ஆழமாக திராவிட இயக்கம் பேசுவதை கம்யூனிஸ்ட்டுகள் சிலர் விமர்சிக்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எதிர்ப்பு இப்போது இல்லை என்றாலும், ‘திராவிட ஒவ்வாமை’ இன்னும் சிலருக்கு ஓட்டிக்கொண்டே இருக்கிறது.
தமிழ்த் தேசியப் போலிகள்
ஆரியத்தின் கள்ளக் குழந்தைதான் இது. இவர்களின் மூலவர் என்று சொல்லப்படும் ம.பொ.சி. குறித்து இராஜாஜி சொன்னார், ‘நான் செல்லமுடியாத இடத்துக்கு சக்கர வியூகத்தை உடைத்துச்செல்லும் அபிமன்யூ என்று உருவகப்படுத்தினார். இத்தகைய ம.பொ.சி. தான் தி.மு.க, உருவானபோது, ‘திராவிட இயக்க எதிர்ப்பு’ மாநாடுகளை நடத்தினார். அழிக்கப்பட்ட இந்தி எழுத்துகளைத் தார் கொண்டு மீண்டும் உயிரூட்டினார். சமஸ்கிருதந்தைத் தாய்மொழி என்றார். தமிழைவிட இந்து என்ற சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதுதான் இன்று ‘தமிழ் இந்து’ என்ற சொல்லாக மணியரசன் வகையறாக்களால் சுட்டப்படுகிறது. இராஜாஜியைக் கொண்டாடுகிறார், சீமான். பெரியாரைச் சிதைத்து வேலை பார்ப்பதுதான் தமிழ்த் தேசியமாகச் ஆரியத்துக்கு அடிவருடி சிதைந்துவிட்டது. இந்தப் போலிகளை சாதிய, மதவாத, பார்ப்பன சக்திகள் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வருகிறார்கள்.
பெரியார் பிம்பத்தை உடைப்பதன் மூலமாகத் தமிழினத்தைச் சாய்க்க நினைப்பவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகமே இடைஞ்சலாக இருக்கிறது.
சாதியவாதிகள்
‘சாதியை ஒழித்துவிடலாம். ஆனால், சாதிப் பெருமையை ஒழிக்க முடியாது’ என்றார் பெரியார். அந்தப் பெருமை, ஒருவிதமான மனநோயாக இருக்கிறது. ‘நான் வேறு, நீங்கள் வேறு என்று இல்லாமல், ‘நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன்’ என்பதாகச் சாதி இருப்பதால்தான் இது பெருமையாக இருக்கிறது. ரத்த பேதம் இல்லை என்கிறது திராவிட இயக்கம். அனைவரும் சமம் என்கிறது திராவிட இயக்கம். அனைவரையும் ஒரே நிலைக்கு உயர்த்த நினைக்கிறது திராவிட இயக்கம். இதை அனைத்துச் சாதியினரும்’ விரும்பவில்லை. ‘தான் மட்டும் உயர வேண்டும்’ என்று நினைக்கிறார்கள். ‘தன்னைப் போல மற்றவர் உயர்ந்துவிடக் கூடாது’ என்று நினைக்கிறார்கள். அனைவரையும் தமிழர்களாக ஓர்மைப்படுத்துவதும், அனைவரும் சமம் என்பதும், அனைவரும் ஒன்றாக உயர வேண்டும் என்பதும் சாதிய வாதிகளால், ஆதிக்க சாதியவாதிகளால் ஏற்க முடியவில்லை. அதனால்தான் விமர்சனங்களை வைக்கிறார்கள்.
மத வகுப்புவாதிகள்
‘பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன்’ என்றார் அண்ணா. ‘கோவில் கூடாது என்பதல்ல அது, கொடியவர் கூடாரமாக ஆகிவிடக் கூடாது’ என்றார் கலைஞர். ‘எந்த மதத்தவர் உணர்வுக்கும் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல. மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவதற்கு, ஆதாயத்துக்குப் பயன்படுத்துபவர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகள்’ என்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ‘வேற்றுமைகள் கற்பிக்கும் சனாதனத்துக்குத்தான் நாங்கள் எதிரிகள்’ என்கிறார், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இவை அனைத்தும் மதவாத அமைப்புகளுக்குக் கசக்கிறது.
பொதுவாக, எந்த மதமாக இருந்தாலும் அது நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்டது. அந்த நம்பிக்கையை இன்றைய காலகட்டத்து முற்போக்கு எண்ணங்களுக்கு ஏற்ப கேள்வி கேட்பதை, மாறுதலை வலியுறுத்துவதை மதவாதிகள் ஏற்பது இல்லை. பல்லாயிரம் கோடி மதிப்பிலான கோயில் சொத்துகளை மீட்டாலும், கோடிக்கணக்கில் செலவுசெய்து, மூவாயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், 24 பிற வகுப்பினரை அர்ச்சகராகப் போட்டதுதான் அவர்களது கண்ணை உறுத்தும் என்றால், கோயில் யாருக்கானது? இந்தக் கேள்வி ஒரு ஆத்திகன் கேட்கவேண்டிய கேள்விதானே?
பொறாமைக் குணம் கொண்டோர்
தி.மு.க.வைப் பார்த்தால் பலருக்கும் பொறாமை. அண்ணா தொடங்கி பெரும்பாலான தம்பிமார்கள் அழகாகப் பேசினார்கள். சுவையாக எழுதினார்கள். கதை வசனத்தில் தூள் கிளப்பினார்கள். பத்திரிகை நடத்தினார்கள். இளைஞர்கள் அந்த அமைப்பை நோக்கி வந்தார்கள். அதுவும் படித்தவர்களாக வந்தார்கள். இன்னும் சொன்னால், குடும்பம் குடும்பமாக வந்தார்கள். நகரவாசிகள் வந்ததைப் போல கிராமவாசிகள் வந்தார்கள். ‘நான் எந்த ஊருக்குப் போனாலும் ஈசல் மாதிரி வந்து தொல்லை தருகிறார்கள்’ என்றார் இராஜாஜி. ‘தி.மு.க.வுக்கு கிடைத்த தொண்டன், சிங்கிள் டீ குடிச்சிட்டு வேலை பார்ப்பான்’ என்று பொறுமினார், பெரியவர் பக்தவத்சலம். பலரையும் இழுத்துப்பார்த்த பிறகும் கட்சி இருந்தது. செங்குத்தாக உடைத்தபோதும் மீண்டும் எழுந்தது. எம்.ஜி.ஆர் மூன்றாவது முறை வென்றபோது, முடிவுரை எழுதினார்கள். இராஜீவ் மரண அனுதாபத்தால் ஜெயலலிதா வென்ற போது, இத்தோடு குளோஸ் என்றார்கள். ‘கருணாநிதி இருக்கும்வரை தான் இவர்கள் ஆட்டம் எல்லாம்’ என்று எழுதினார்கள். வஞ்சக எண்ணம் கொண்ட வசவாளர்கள் அனைவரையும் உண்டு செறித்து உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறது, கழகம்.
அக்கிரமத் தெருத் திண்ணைகளில் அழுக்குத் தேய உருண்டவர்கள், சோசியல் மீடியாக்களில் சோம்பலை முறித்துக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து, மனசுக்குள் சிரித்துக்கொண்டிருக்கிறான் உடன்பிறப்பு.
நடுநிலை நடிகர்கள்
தாங்கள் நடுநிலை என்பதைக் காட்டிக்கொள்ள தி.மு.க.வைச் சீண்டுவது சிலருக்கு வாடிக்கை. யாரையாவது குறை சொல்லும்போது, தி.மு.க.வையும் இந்தப் பக்கமாக ஒரு குத்து குத்தாவிட்டால் சிலருக்கு இருக்க முடியாது. அப்படிச் செய்வதன்மூலமாகத் தங்களை நடுநிலையாளர்களாகக் காட்டிக்கொள்வார்கள். காய்க்கும் மரம் கல்லடி படும் என்பதைப் போல கழகமும் கல்லடி பட்டுவருகிறது.
பிம்பம் மிரட்டுகிறது…

பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர், திராவிட நாயகன் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பிம்பம் பலரையும் மிரளவைக்கிறது. இவர்கள், தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்திகளாக இருக்கிறார்களே என்பதுதான் ஆத்திரம். அண்ணாவுக்கு சொல்லப்படாத அவதூறுகளா? கலைஞர் சந்திக்காத கசப்புகளா? அதைத்தான் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும் சந்தித்துவருகிறார். அண்ணாவுடன் அனைத்தும் போய்விடும் என்று நினைத்தார்கள். அண்ணாவின் வலிமையையும் சேர்த்துக்கொண்டு நிமிர்ந்தார் கலைஞர். அவரோடு முடிந்துவிடும் என்று நினைத்தார்கள். அண்ணா, கலைஞர் ஆகியோரையும் தூக்கிக்கொண்டு உயர்த்திக்காட்டி வருகிறார். மாண்புமிகு முதலமைச்சர். இது, அவர்கள் எதிர்பாராதது. திராவிட மாடல் ஆட்சி என்று சொன்னதும், பெரியார் பெயரில், அம்பேத்கர் பெயரில் உறுதிமொழி எடுக்கவைத்ததும் கலைஞர் காலத்திலும் பார்க்காதவை. இதை அவர்களால் சகிக்க முடியவில்லை.
அவர்கள் பார்வைக்கு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி இன்னும் எரிச்சலாகத் தெரிகிறார். அவர் சாதாரணமான ‘ஒரு அமைச்சராக’ இருந்தால், ‘இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று நினைப்பார்கள். கொள்கை பேசுகிறார், அதுவும் நேரடியாகப் பேசுகிறார். மிரட்டினால் பயப்பட மறுக்கிறார். பின்வாங்காதவராக இருக்கிறார். அவருக்குப் பின்னால் இளைய பட்டாளம் அணிவகுக்கிறது. அந்த இளைஞர்களைக் கொள்கைவாதிகளாக மாற்றிக்கொண்டிருக்கிறார். இதைத்தான் ஆபத்தாகப் பார்க்கிறார்கள்.
கருப்புக் குடையைப் பார்த்தால் மாடு மிரளுவதைப் போல’ கருப்பு சிவப்பு பார்த்தால்… இன எதிரிகள், மொழி எதிரிகள் மிரள்கிறார்கள். இவர்களை மிரட்டவே திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. இவர்களிடம் இருந்து தமிழ் மக்களைக் காக்கவே திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது.
பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்.டி.ஏ கூட்டணி! தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது பாஜக!



