பொள்ளாச்சி மா.உமாபதி
தி.மு.க. இளைஞர் அணியின் கோவை மாவட்ட அமைப்பாளர், மாநிலத் துணைச் செயலாளர், தி.மு.க. தொண்டர் அணியின் மாநிலச் செயலாளர் ஆகிய பொறுப்புகளைக் கடந்து, தற்பொழுது தி.மு.க. கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் மாநிலச் செயலாளர் ஆகப் பணியாற்றும் பொள்ளாச்சி மா.உமாபதி ஆகிய நான், 73ஆம் அகவையைக் கடந்து கொண்டிருக்கிறேன். மாறாத இந்தி திணிப்பு எதிர்ப்பு உணர்வு என்பது என் குருதியோடு கலந்த உணர்வு.
பொள்ளாச்சியில் எங்கள் வீட்டின் கூப்பிடு தூரத்தில் இருந்தது திருவள்ளுவர் திடல். அங்குதான் திராவிட இயக்கப் பொதுக்கூட்டங்கள் நடக்கும். கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் கழக கொள்கைப் பாடல்கள் ஒலிபரப்பப்படும். “அழைக்கின்றார் அண்ணா”, “ஓடி வருகிறான் உதயசூரியன்,” “எங்கள் திராவிடப் பொன்னாடே” “அச்சம் என்பது மடமையடா” போன்ற பாடல்கள் சிறுவர்களாகிய எங்களுக்கு கற்பனைக் குதிரைகளை ஓட்டி மகிழ உதவியதுடன், திராவிட இயக்க உணர்வுகளை ஊட்டியும் வளர்த்தன. பொதுக்கூட்ட மேடைகளில் தந்தை பெரியார் முதல் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர், நாவலர் நெடுஞ்செழியன், இளம் பெரியார் ஆசைத்தம்பி, விடுதலை விரும்பி, கோவை மு.ராமநாதன் உள்ளிட்ட பலரும் ஆற்றிய உரைகள் எங்களைப் பக்குவப்படுத்தி வளர்த்தன.
அத்துடன், ‘பலகுரல் அரசு’ திருவாரூர் முருக பாண்டியன், சிவகங்கை சேதுராசன், ராஜபாளையம் மணிசாமி குழு,முரசொலி முகிலன் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். எல்லா நிகழ்ச்சிகளிலும் தலைவர் கலைஞர் அவர்களின் கல்லக்குடி போராட்டம் பற்றியும் இந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளித்த மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் சின்னச்சாமி, விருசும்பாக்கம் அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம், துப்பாக்கிக் குண்டுக்கு இரையான மாணவன் சிவகங்கை இராசேந்திரன் போன்றோரின் தியாக வரலாறுகளை விளக்கும் காட்சிகள் இடம்பெறும். அவை அனைத்தும் இந்தி எதிர்ப்பு உணர்வுகளையும் தமிழ் உணர்வுகளையும் எங்கள் குருதியோடு கலக்கச் செய்தன.

1965ல் உயர்நிலைப் பள்ளி மாணவனாக இருந்தபோது நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றதும் பொள்ளாச்சியில் நடைபெற்ற ராணுவ துப்பாக்கிச் சூடும் எங்கள் நெஞ்சில் ஆறாத வடுக்களை உருவாக்கி இருந்தன.
இந்தப் பின்னணியில், 1986 செப்டம்பர் பத்தாம் நாள், தினகரன் நாளிதழின் தலைப்புச் செய்தியில், ‘மதுரையில் இந்தி வெறி எம்பி.க்கள் அட்டூழியம் ! தமிழ் பெயர்ப்பலகைகளைத் தூக்கி எறிந்தனர்’ என்ற செய்தி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது மதுரை வந்த நாடாளுமன்ற இந்தி அமலாக்கக் குழுவினர், மதுரை ரயில் நிலைய அலுவலகத்தில் அலுவலர்களின் பெயர்களும் பதவிகளும் எழுதிய முப்பட்டைப் பலகையில் தமிழும் ஆங்கிலமும் மட்டும் இருந்து, இந்தி இல்லாதது கண்டு சினம் கொண்டு, அப்பலகைகளைத் தூக்கி எறிந்தனர்.
தமிழ்நாட்டில் தமிழ் பெயர்ப்பலகைகளைத் தூக்கி எறியும் துணிச்சல் அவர்களுக்கு வந்தது சுண்டு, எங்கள் குருதி கொதிப்பேறியது. அப்போது, நான் கோவை மாவட்ட தி.மு.க. இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர் அந்த இந்தி வெறி எம்பி.க்களின் செயலினைக் கண்டித்து ஏதாவது செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்து, இளைஞர் அணி நண்பர்களையும் திராவிடர் கழகத் தோழர்களையும் அழைத்துப் பேசி, அன்று இரவே பொள்ளாச்சி தொடர்வண்டி நிலையம், அஞ்சல் நிலையம், தொலைபேசி நிலையம், வருமான வரி அலுவலகம் உள்ளிட்ட ஒன்றிய அரசு அலுவலகங்களின் பெயர்ப்பலகைகளில் இருந்த இந்தி எழுத்துகளைக் கறுப்பு பெயின்ட் கொண்டு அழிக்க முடிவெடுத்து செயலில் இறங்கினோம்.
அத்துடன் பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், அஞ்சல் நிலையம், தொலைபேசி நிலையம் ஆகியவை அனைத்தும் ஒரே வளாகத்தில் இருந்ததால், அதன் மிக நீண்ட சுற்றுச்சுவர் முழுவதும் இந்தி எதிர்ப்பு வாசகங்களை இரவோடு இரவாக எழுதினோம். இந்தித் திணிப்பு எதிர்ப்பு குறித்து, பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்துகள், தலைவர் கலைஞரின் கருத்துகள், பேராசிரியரின் கருத்துகள் போன்றவற்றை அச்சுவரில் எழுதினோம். மதுரையில், இந்திவெறி எம்பிக்களின் அடாத செயல்களைக் கண்டித்தும் சுவரில் எழுதினோம்.

அதே சமயம், கழகத் தலைமையின் முறையான அனுமதி பெறாமல், இம்மாதிரி போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர் அண்ணன் கண்ணப்பன் அவர்களிடம் அனுமதி கேட்டபோது, தலைமையின் அனுமதி இல்லாமல் இது மாதிரி போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. ஆனாலும் அந்த இந்தி வெறி எம்பிக்கள் செயலுக்கு எதிர்வினை ஆற்றத்தான் வேண்டும். அப்படிச் செய்யும்போது, தி.மு. கழகப் பெயர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். எனவே, சுவர் எழத்துகளில் தி.மு.க. பெயரைப் பயன்படுத்தாமல் ‘தமிழர் தானை’ என்ற கற்பனை அமைப்பின் பெயரினைக் குறிப்பிட்டோம்.
மறுநாள் விடிந்தபோது.. அஞ்சல் நிலையம், தொலைபேசி நிலையங்களில் இருந்த இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டு இருப்பதையும் சுற்றுச்சுவர்களில் இந்தி எதிர்ப்பு முழக்கங்களையும் பார்த்த மக்களிடம் பரபரப்பு ஏற்பட்டது. அன்றைய மாலை முரசில், பொள்ளாச்சியில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது!” என்று தலைப்புச் செய்தி வெளியானது.
‘மாலைமுரசு’ செய்தியைக் கண்ட கோவை, திருப்பூர், உடுமலை, பழனி உள்ளிட்ட நகரங்களில் இருந்த தமிழ் உணர்வு படைத்த தி.மு.க. இளைஞரணித் தோழர்கள் மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் எங்களோடு தொடர்புகொண்டு பேசி, ஆங்காங்கே இந்தி எழுத்து அழிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். மாலை முரசு செய்தியால் ஊக்கம் பெற்ற நாங்கள், போராட்டத்தைத் தொடர முடிவெடுத்து, மறுநாள் இந்தி வெறி எம்பிக்களின் கொடும்பாவிகளை சப் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த புளியமரங்களில் தூக்கில் தொங்கவிட்டோம்.
மறுநாள், தொடர்வண்டி நிலையத்தில் இருந்து ஊர்வலமாக இந்தி எதிர்ப்பு முழக்கங்களை முழங்கிவந்து, வடவர் கடை முன் மறியல் செய்தோம். கடை வீதியில் இருந்த குஜராத் ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்கள் எங்களைக் கண்டதும் கடையைப் பூட்ட முயன்றனர். “நீ கடையை மூடிவிட்டால், நாங்கள் எதன் முன் மறியல் செய்வது?” என்று கூறி அவர்களைக் கடையைத் திறக்கச் சொல்லி மறியலைத் தொடர்ந்தோம்.

கைவிலங்குகளுடன் பொள்ளாச்சி உமாபதி உள்ளிட்டோர்
அன்று முழுவதும் எங்களைக் கடந்துசென்ற மக்களிடம் இந்தி வெறி எம்பி.க்களின் அடாத செயல் பற்றிக் கூறி, இந்தி எதிர்ப்பு பற்றிய விளக்கங்களைப் பிரச்சாரம் செய்தோம்.இந்தப் போராட்டங்கள் அனைத்தும் தமிழர் தானை என்ற பெயரில் நடைபெற்றது. யாருடைய பெயரும் முன்னிறுத்தப்படவில்லை. அப்போது, தங்கள் பெயர் பத்திரிகைகளில் இடம்பெற வேண்டும் என்று கருதிய தென்றல் செல்வராஜ், கார்த்திகேயன், திப்பம்பட்டி ஆறுச்சாமி உள்ளிட்ட சில இளைஞரணித் தோழர்கள் தனியாகப் போராட்டம் நடத்த விரும்பினர். அவர்களுக்கும் ‘தமிழ் இளைஞர் புரட்சிப் படை Tamil Youths Revolutionary Army – “TYRA” எனப் பெயரிட்டு அனுப்பினேன். அவர்கள் இந்தி வெறி எம்பி.க்களின் கொடுப்பாவியைத் தீயிட்டுக் கொளுத்துகின்ற நேரத்தில், ‘ராஜீவ் காந்தி கொடும்பாவி’ என்று கூறிவிட்டனர்.
பிரதமரின் கொடும்பாவியைக் கொளுத்தியதோடு, அவர்களின் அமைப்பின் பெயர் இளைஞர் புரட்சிப் படை Youths Revolutionary Army என்றிருந்தது. புலனாய்வுத் துறையின் கண்களை உறுத்த போராடிய இளைஞர்களைச் சிறைப்பிடித்தனர். இளைஞர் புரட்சிப் படைக்கு விளக்கம் கேட்டு துளைத்து எடுத்தனர். அது, முழுக்க முழுக்க ஒரு கற்பனை அமைப்பு. தமிழ் உணர்வையும் இந்தி எதிர்ப்பையும் தவிர, வேறு எந்த புரட்சிக்கும் அடித்தளம் இல்லை; படை அமைக்கும் எண்ணமும் இல்லை என்பதை எடுத்துக் கூறி, அவர்களை விடுவித்தேன்.
ராஜீவ் காந்தி கொடும்பாவி எரித்ததால், காங்கிரஸ் கட்சியில் வைஜெயந்திமாலா பாலி ரசிகர் மன்றத்தினர், தலைவர் கலைஞர் மற்றும் ஆசிரியர் வீரமணி கொடும்பாவிகளை கோவை டவுன்ஹாலில் எரிக்கப்போவதாக அறிவித்தனர். அங்கு, அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது. காங்கிரசார், கலைஞர் கொடும்பாவியை எரிக்கத் துணிந்ததால், கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர் அண்ணன் கண்ணப்பன் அவர்களும் ஈரோடு மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தி அவர்களும், இரண்டு மாவட்டங்களிலும் ராஜீவ் காந்தி கொடும்பாவியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தனர். அதில், ஆயிரக்கணக்கானோர் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதான கழகத் தோழர்களைக் காண தலைவர் கலைஞர், கோவை சிறைக்கு வந்தார். அண்ணன் சுண்ணப்பன் அவர்களிடம் நடந்த நிகழ்ச்சிகளைக் கேட்டுவிட்டு, தலைவர் கலைஞர் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாட்டினை அக்டோபர் 23ஆம் நாள் கோவையில் நடத்த அறிவித்தார்.
அந்த மாநாட்டில்தான் அன்றைய இளைஞரணிச் செயலாளர் ஆருயிர்த் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியை எதிர்த்துத் தீக்குளித்த தியாகிகளின் திருவுருவப்படங்களைத் திறந்துவைத்து எழுச்சி உரையாற்றினார்.
அத்துடன், நவம்பர் 17 தொடங்கி டிசம்பர் ஒன்பதாம் நாள் வரை தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில், ‘இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி எனக் கூறும் அரசியல் சட்டத்தின் 17-வது பிரிவை’க் கொளுத்தும் போராட்டத்தினை தலைவர் கலைஞர் அறிவித்தார்.
சென்னையில் நவம்பர் 17ஆம் நாள், இனமானப் பேராசிரியர் தலைமையில் பலரும் அரசியல் சட்ட நகலை எரித்து சிறை சென்றனர்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான கழக அடலேறுகள் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றனர். அவர்களில் இனமானப் பேராசிரியர் அவர்களுடன் கோவை மு.ராமநாதன், துறைமுகம் செல்வராசன், பரிதி இளம்வழுதி. கூ.பாலன், பொன்னுரங்கம், தர்மபுரி சின்னச்சாமி உள்ளிட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க அரசு பறித்து மகிழ்ந்தது. அவர்களின் பதவி நீக்கத் தீர்மானத்தை முன்னாள் இந்தி எதிர்ப்புத் தளபதிகளில் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை முன்மொழியச் செய்தார், முதல்வர் எம்.ஜி.ஆர்.
அரசியல் சட்ட நகலை எரித்தது குற்றம் என்று கூறி, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க அரசு பறித்து மகிழ்ந்தது. ஆனால், அதே செயலைச் செய்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வைகோ மீது ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தின் நிறைவாக டிசம்பர் 9ஆம் நாள், சென்னையில் கழகத் தலைவர் கலைஞர் சட்ட நகலை எரித்துக் கைதானார்.
கலைஞர் கைதுசெய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தும் எதிர்ப்பைப் பதிவுசெய்யவும் கடலூர் சிறையில் இருந்த கலியபெருமாள், போடியில் முருகன், திருச்சி அல்லூர் காளிமுத்து, நீடாமங்கலம் கோவிந்தராசு, குளித்தலை சீனிவாசன், கூடுவாஞ்சேரி சுப்பிரமணியன், சேலம் அருணாசலம், மருதூர் மூக்கன், சென்னை கலைஞர் பித்தன் ஆகியோர் உயிரை அர்ப்பணித்தனர்.
தலைவர் கலைஞர் அவர்களுக்கு 10 வாரம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இச்செய்தி கேட்டு, அரியலூர் புகழேந்தி, உளுந்தூர்பேட்டை பன்னீர் செல்வம், மேலூர் ஜெகஜீவன்ராம், அருப்புக்கோட்டை மாரியப்பன், சத்திரப்பட்டி வேதமாணிக்கம், பால சமுத்திரம் அப்துல் ரசாக், முள்ளிப்பட்டு ஏ நடராசன் ஆகியோர் தீக்குளித்து மாண்டனர்.
தண்டனை விதிக்கப்பட்ட பின், தலைவர் கலைஞர் அவர்களுக்கு சிறையில் கைதிகளுக்கான சீருடையும் அலுமினியத் தட்டும் குவளையும் வழங்கப்பட்டது. இச்செய்தி நாடு முழுவதும் பரவி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், மூன்றாவது நாளில் தலைவர் கலைஞர் அவர்களை மட்டும் விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. தான் மட்டும் விடுதலையாவதைத் தலைவர் கலைஞர் ஏற்கவில்லை. பின்னர், முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தலைவர் கலைஞருடன் கைதான அனைவரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்தார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது கண்டு அஞ்சிய எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க அரசு, போராட்டத்தில் தீவிரமாக உழைத்த கழக முன்னணியினர், இளைஞர் அணி தோழர்கள்மீது வெடிகுண்டுச் சதி வழக்குகளைப் புனைந்து, அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அதில் திருச்சி முத்தரசநல்லூரில் தொடர்வண்டிப் பாதையில் வெடிகுண்டு வைத்ததாக ஒரத்தநாடு எல்.கணேசன், திருச்சி மலர்மன்னன், நாமக்கல் பழனிவேலன், வழக்கறிஞர் தினகரன் உள்ளிட்ட பலர்மீது வழக்குத் தொடுத்து, கைதுசெய்து காவல் நிலையத்தில் கடுமையாகச் சித்ரவதை செய்தனர். அதுபோலவே, கோவை சிங்காநல்லூர் தொடர்வண்டிப் பாதையில் வெடிகுண்டு வைத்ததாகக் கூறி, கோவை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொள்ளாச்சி மா.உமாபதி, துணை அமைப்பாளர் தம்புராஜ், கோவை கார்த்திக், உடையாம்பாளையம் நவமணி, காட்டூர் ராமமூர்த்தி, சிங்காநல்லூர் தங்கவேலு ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, மிகக் கடுமையாகக் காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டோம். காவல் நிலைய சித்ரவதைகளை எவ்வாறு எதிர்கொண்டோம்? எங்கள் அன்புத் தளபதி மிசா சிறையில் பட்ட துன்பங்களை எல்லாம் நினைத்துக்கொண்டோம். எங்களுக்கான தாங்கும் சக்தி தானாக வந்தது.
கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் நீதிமன்ற விசாரணைக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை எங்களின் கைகளில் விலங்கு மாட்டி, தெருக்களில் காவலர் புடைசூழ அழைத்துச் செல்லும்போது, நாங்கள் வெட்கப்படுவோம்; வேதனைப்படுவோம்; கூனிக்குறுகி கூச்சப்படுவோம் என்று ஆட்சியில் இருந்தவர்கள் ஆசைப்பட்டனர். ஆனால், அன்னை மொழி காக்க சிறைப்படுவதும் சித்ரவதைக்கு உள்ளாவதும் எங்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பு என்று கருதி, நாங்கள் பீடுநடை போட்டோம்.
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!
நாங்கள் கை விலங்குகளோடு கைகளை உயர்த்தி, கோவை நகர வீதிகளில் நடந்துவரும் காட்சியைப் படம்பிடித்து, தலைவர் கலைஞர் அவர்களுக்கு சிலர் அனுப்பிவைத்தனர். அதனைக் கண்ட தலைவர் கலைஞர் அவர்கள், “என் தம்பிமார்கள் வெட்கப்பட வேண்டும்; வேதனைப்பட வேண்டும் என்று கருதிய ஆட்சியாளர்களுக்கு முன்னால் அவர்கள், மணமேடையில் மணமகள் கையைப் பிடித்துக்கொண்டு வலம்வரும் மணமகனைப் போன்று உற்சாகத்துடன் வருவது கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறி, ‘சிங்கள ஜெயவர்த்தனா சிரித்து மகிழ்ந்திடுவான்’ என்று தலைப்பிட்டு நாங்கள் கை விலங்கோடு நடந்து வரும் புகைப்படத்தையும் சேர்த்து, உடன்பிறப்புக் கடிதம் எழுதினார். இதனைக் கண்ட நாங்கள், காவல் நிலைய சித்ரவதை வேதனைகள் அத்தனையும் மறந்து, எங்களுக்குத் தலைவர் கையால் மகுடம் சூட்டப்பட்டதாக உணர்ந்து மகிழ்ந்தோம்.
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் எளிய தொண்டர்களால் செப்டம்பர் பத்தாம் நாள், பொள்ளாச்சியில் சிறு பொறியாகத் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் ஆகியோர் முன்னெடுத்து, பெரும் போராட்டமாக வடிவெடுக்கச் செய்தனர். கழக வரலாறு கற்றுத்தந்த பாடங்கள் கைகொடுத்தன.
“தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?” என்று கேட்ட முண்டாசுக் கவிஞர் பாரதியாரின் வைர வரிகளை நடைமுறையில் கண்டோம்.
பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்.டி.ஏ கூட்டணி! தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது பாஜக!



