spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - நானும் தி.மு.க.வும்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – நானும் தி.மு.க.வும்!

-

- Advertisement -

எஸ்.வி.ராகதுரை

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - நானும் தி.மு.க.வும்!

“என் அப்பா அடிப்படையில் ஒரு காந்தியவாதி. ‘காந்தி நலமன்றம்’ என்ற அமைப்பின் மூலம் அன்று ‘தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும் ‘தீண்டத்தகாதவர்கள்’ என்றும் சொல்லப்பட்ட தலித் சமூகத்தினரைச் சேர்ந்த 45 மாணவர்களுக்கான உண்டி உறைவிட விடுதியொன்றை நடத்திவந்தார். நான் பிறந்த தாராபுரம் தாலுகாவைச் சேர்ந்த கிராமங்கள் சாதிய இறுக்கம் நிறைந்தவை. அருந்ததிய மக்களேஅங்கு பெரும்பாலும் ஒடுக்கப்பட்டவர்கள்.

we-r-hiring

கல்வி, பொருளாதாரம், அரசியல் உணர்வு, அமைப்பு பலம் என எல்லாவற்றிலும் பின்தங்கியிருந்த அவர்களை நான் எந்த சாதியில் பிறந்தேனோ, அந்த சாதியைச் சேர்ந்த பலரும் ஒதுக்கியும் ஒடுக்கியும் வந்தனர். எங்கள் வீட்டுக்குள் அவர்கள் சரளமாக வர முடிந்தாலும் சமையலறைக்குள் நுழைய முடியாது. முற்போக்குச் சிந்தனை கொண்ட எங்கள் வீட்டிலேயே இதுதான் நிலை என்றால். ஒட்டுமொத்த தாராபுரத்தின் நிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

என் அப்பா காங்கிரஸ்காரராக இருந்தபோதும் எனக்கு சாதிஒழிப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றை முன்வைத்த திராவிட இயக்கத்தின் மீதே ஆர்வம் ஏற்பட்டது. என் தந்தை கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும் காங்கிரஸ்காரராகவும் இருந்தாலும் அவர் முருகன் படம் மாட்டி வைத்திருந்த அதே அறையில் தந்தை பெரியார் மற்றும் தி.மு.க.வின் ஐம்பெரும் தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்களின் படங்களையும் மாட்டுவதற்கு அனுமதித்தார்.

1957ஆம் ஆண்டில், தாராபுரம் நகர தி.மு.க. பொருளாளராகச் செயல்பட்டேன். நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன், கே.ஏ.மதியழகன், அவரது சகோதரர் கே.ஏ.கிருஷ்ணசாமி. என்.வி.நடராசன், சத்தியவாணி முத்து, கோவை மு.ராமநாதன், அறிவுடை நம்பி, இளமுருகு பொற்செல்வி, பொற்செல்வி இளமுருகு, கோவை செழியன் முதலியோரை வைத்து பொதுக்கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம். அந்தக் கூட்டத்துக்கான அறிவிப்புத் தட்டிகளை நானே எழுதுவேன். பொதுக்கூட்டத்துக்குப் பேச வரும் தலைவர்கள் எங்கள் வீட்டிலேயே தங்குவார்கள். அண்ணாவும் கலைஞரும் எங்கள் ஊரில் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - நானும் தி.மு.க.வும்!

பெரியாரிடமிருந்து பிரிந்து தி.மு.க. உருவானதால்,பொதுவாக, தமிழ்நாடு முழுவதும் இரு இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் விலகல் மனநிலையும் சுசப்புணர்வும் இருந்தன. ஆனால், எங்கள் ஊர் தாராபுரத்தைப் பொறுத்தவரை இரு இயக்கங்களுக்கும் இடையில் எந்த உரசலும் இருக்கவில்லை. அப்போது, திராவிடர் கழகத்தின் நகரச் செயலாளராக இருந்தவர் இஸ்லாமியரான சர்க்கரை என்பவர். தி.மு.க.வின் நகரச் செயலாளராக இருந்த அப்துல் ரஷீத் என்பவரும் தமிழ் பேசும் இஸ்லாமியரே. அதுமட்டுமின்றி, நான் படித்த பள்ளியில் இரு முறை மாணவர் சங்கத் தலைவராக இருந்தவரும் இஸ்லாமியரே. ஆனால், உருது பேசும் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பு முடிந்து சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும்போது, அவர் கம்யூனிஸ்ட் ஆதரவளாராக மாறியிருந்தார்.

 

அன்றைய ஒன்றிணைந்த தி.மு.க.வின் முக்கிய பிரமுகராக இருந்த கோவை செழியன் என் உறவினர். ஆனால், இன்றுவரை மக்கள் தொகையில் 1000-2000 பேருக்கு மிகையில்லாத ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த உடுமலை நாராயணனும் கோவை செழியனும் இருமுறை கோவை மாவட்டச் செயலாளருக்கான தேர்தலில் போட்டியிட்டபோது, நான் உடுமலை நாராயணனைத்தான் ஆதரித்தேன். அவர் தீவிர களச் செயற்பாட்டாளர்.

1959ல் எனக்கு நீலகிரி மாவட்டத்தில் அரசாங்க வேலை கிடைத்ததால் தாராபுரத்தை விட்டுச் செல்லவேண்டிய சூழல், நான் முதன் முதலில் நடுவட்டம் என்ற ஊரிலிருந்த அலுவலகத்தில் பணியில் அமர்த்தப்பட்டேன். அங்கு செல்வதற்கான பேருந்தைத் தவறவிட்டதால், பொருட்களை ஏற்றிச் செல்லும் ஒரு லாரியில் பெட்டி படுக்கைகளோடு ஏறி நடுவட்டத்தில் இறங்கினேன். நான் இறங்கிய இடத்திலேயே ஒரு முடி திருத்தகம் இருந்தது. அங்கு, தி.மு.க. தலைவர்களின் படங்கள் இருந்தன. முடிதிருத்தும் கலைஞர் தி.மு.க.காரர் என்பதைக் கேட்டு அறிந்துகொள்ளும் தேவை இருக்கவில்லை.

ஏனெனில், அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பெரும்பாலான முடி திருத்தகங்கள் தி.மு.க.வின் கொள்கைகளைப் பரப்பும் மையங்களாக இருந்தன. நான் நடுவட்டத்திலிருந்த அரசாங்கத் தோட்டத்தில் பணியில் நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்றும் கோவை செழியனின் உறவினன் என்றும் சொன்னவுடன், அவர் என்னை இருக்கையில் அமரவைத்து தேநீர் வாங்கித் தந்ததுடன் நான் வேலை செய்யப் போகும் தோட்டத்தில் தொழிலாளியாக இருந்தவரும் முடிதிருத்தகத்திற்கு அடிக்கடி வந்துபோனவருமாக இருந்த பூங்கான் என்பவரிடம் என்னை ஒப்படைத்து, என்னை அந்தத் தோட்ட அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லும்படி கூறினார்.

பூங்கானும் தி.மு.க. ஆதரவாளர்தான். அந்த அலுவலகத்தில் ஆறு மாதம் வேலை செய்த பிறகு, எனக்கு ஊட்டிக்கு இட மாறுதல் கிடைத்தது. அங்கு, சேரிங் கிராஸில் அப்போது இருந்த ஜெயா கஃபே என்ற ஓட்டலில்தான் என்னைப் போன்ற குறைந்த வருமானமுள்ளவர்கள் ‘கணக்கு வைத்து மாதமொருமுறை ஓட்டல் உரிமையாளருக்குரிய பணத்தைக் கொடுக்கும் வசதி இருந்தது. சாமானிய மக்கள் உணவருந்தக்கூடிய ஓட்டல் அது. அங்குதான் அப்போது தி.மு.க.வின் ஊட்டி நகரச் செயலாளராக இருந்த நஞ்சுண்டன் என்பவரைச் சந்தித்தேன். கோவை செழியனின் உறவினன், தி.மு.க. அனுதாபி என்ற என் அடையாளங்கள் அவருடனும் பிற தி.மு.க. உறுப்பினர்களுடனும் நட்பு பேண உதவி புரிந்தன.

நஞ்சுண்டன், பல தலைமுறைகளுக்கு முன்பு மைசூர் பகுதியிலிருந்து கூலி வேலை செய்ய வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். பழைய உதகை என்றும் பழைய ஒத்தை என்றும் அழைக்கப்பட்ட, இன்றும் ஏழை மக்களே அதிகம் வாழ்கின்ற பகுதியில் வசித்துவந்த அவர், கொத்து வேலை செய்யும் தொழிலாளி. அன்று ஊட்டியில் தி.மு.க.வில் இருந்தவர்கள் தாராபுரத்தில் இருந்தவர்களைப் போலவே ஒடுக்கப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். ஆனால், நீலகிரி மாவட்டத்தில் அரசாங்கப் பணிகளில் ஏராளமான தலித்துகள் இருந்தனர். பெரும்பாலும் அவர்கள் ‘எழுத்தர்கள்’, அதைவிடக் குறைந்த பதவியில் இருந்தவர்களில் பெரும்பாலானோரும் தலித்துகளே. திராவிடர் கழகம் குன்னூரில்தான் அதிக செல்வாக்குடன் இருந்தது. அதிலும் தலித்துகளும் சலவைத் தொழில் செய்யும் சாதியினர் போன்றவர்களுமே பெரும்பான்மையான உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாவும் இருந்தனர். ஆக, மிகவும் பிற்பட்ட வகுப்பினர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களும் நிறைந்த இயக்கமாகவே பொதுவாக, திராவிட இயக்கமும் குறிப்பாக தி.மு.க.வும் இருந்தன.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - நானும் தி.மு.க.வும்!

எனக்குத் தெரிய தந்தை பெரியார் 1952ல் நடந்த பொதுத் தேர்தலின் போது, காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட ஒரு சுயேச்சை வேட்பாளரை ஆதரித்துப் பேசினார். அப்போது, தி.மு.க. தாராபுரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றிராமல் இருந்தபோதும்கூட பல தி.மு.க. தலைவர்களும் அதே சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்ய வந்திருந்தனர். எம்.ஆர்.ராதாவும் தன் நாடகங்களின் மூலம் அதே வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

தாராபுரத்தில் நான் என் தந்தையின் இறப்புக்குப் பிறகே தி.மு.க.வில் நகரக் கிளையின் பொருளாளராகவும் இருந்தேன். என் அண்ணன் இன்டர்மீடியட் வகுப்பில் தேர்ச்சிபெற்ற பிறகு, கல்லூரிப் படிப்பைத் தொடராமல் என் தந்தை ஆசிரியராகப் பணிபுரிந்த அதே உயர்நிலைப் பள்ளியிலேயே எழுத்தர் வேலைக்குச் சேர்ந்து, என் குடும்பத்தைப் பராமரித்துவந்தார். எனக்கு ஒரு தம்பியும் இரு தங்கைகளும் இருந்தனர். நானும் இன்டர்மீடியட் வகுப்பு முடிந்ததும் ஏதோ ஒரு வேலைசெய்து கொண்டு, என் குடும்பத்திற்கு உதவியாக இருந்தேன்.

தாராபுரத்தில் தி.மு.க. வளர்ச்சி பெற்று, மாவட்ட அளவிலான தலைவர்களும் மாநில அளவிலான தலைவர்களும் பொதுக்கூட்டங்களில் பேச வரும்போது எங்கள் வீட்டில்தான் அவர்கள் தங்குவதற்கான வசதி இருந்தது என்றால், அப்போது தி.மு.க, எந்த அளவிற்கு ஏழைகளின் கட்சியாக இருந்தது என்பதை ஊகித்துக்கொள்ளலாம். எங்கள் வீட்டில் தங்கி உணவருந்தி, இரவுத் தூக்கம் முடிந்து புறப்பட்டுச் சென்றவர்களில் கோவை மு.ராமனாதன், சி.டி.தண்டபாணி, கோவை செழியன், அறிவுடை நம்பி. பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார், அவரது துணைவியார் அலமேலு அம்மாள், நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன். கே.ஏ கிருஷ்ணசாமி, பேராசிரியர் க.அன்பழகன், சத்தியவாணி முத்து அம்மையார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சத்தியவாணி முத்து அம்மையார் என் தாயாருக்கு மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார். என்.வி.நடராசனை தாராபுரத்திலிருந்து இரு கிராமங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறேன்.

1965ஆம் ஆண்டு, இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஊட்டியில் நான் வசித்துவந்த அறையில் அடைக்கலம் கொடுத்ததாகப் பொய்க் குற்றச்சாட்டைப் புனைந்து பதவியிறக்கம் செய்தனர், பார்ப்பனர்களான என் உயரதிகாரிகள். அது ஓர் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை என்பதை உணர்ந்த நான் பணி விலகல் கடிதம் கொடுத்தேன். ஆனால், அந்தக் கடிதம் ஏற்கப்படாமல் அப்படியே இருந்தது.

ஈ.வெ.கி.சம்பத் தி.மு.க.விலிருந்து விலகியபோது, அவரது ஆதரவாளனான நானும் தி.மு.க.விடமிருந்த உறவை முறித்துக்கொண்டேன். ஈ.வெ.கி.சம்பத் சோவியத் ரஷியாவுக்குச் சென்றுவந்த பிறகு. இந்தியாவிலுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு எல்லா தேசிய இனங்களுக்கும் பிரிந்துபோகும் உரிமையுடன்கூடிய சுய நிர்ணய உரிமை வேண்டும். அந்த அடிப்படையிலேயே தேசிய இனங்களின் கூட்டாட்சியாக இந்தியா உருவாக வேண்டும் என்று கூறிவந்தது எனக்கு உவப்பாக இருந்தது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - நானும் தி.மு.க.வும்!

ஆனால், பின்னாளில் காங்கிரஸில் சேர்ந்தது எனக்கு மனவேதனையைத் தந்தது. அதன் பிறகு, மார்க்சியக் கொள்கைகளில் என் கவனம் திரும்பியது. ரஷ்ய இலக்கியங்களையும் மார்க்சிய நூல்களையும் படித்து மார்க்சிஸ்ட்டாக மாறினேன். அந்த மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள், நான் காச நோயால் பாதிக்கப்பட்டு, பெருந்துறையிலுள்ள ஒரு சானடோரியத்தில் சிகிச்சை பெற்று வந்தபோது. என் சக நோயாளிகளாக இருந்த ஆலைத் தொழிலாளிகள்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, நான் பொள்ளாச்சியில் உரக் கம்பெனியொன்றில் வேலை செய்யத் தொடங்கியபோதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தேன். 1967 ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்ததால் மீண்டும் எனக்கும் தி.மு.க.வுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அப்போது, பொள்ளாச்சி நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட உடுமலை நாராயணன், “என்னடா, கிளாமரே இல்லாத கட்சியில் இருக்கியே?” என்று அவருக்கே உரிய கிண்டலுடன் கேட்டார். “தி.மு.க.விலேயே இருந்திருந்தா எம்.பி, அல்லது எம்.எல்.ஏ ஆகியிருக்கலாம். அமைச்சராகவும்கூட” என்றார்.

1967ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் தி.மு.க. வெல்லும் என்பதில் அவ்வளவு உறுதியுடன் இருந்தார் உடுமலை நாராயணன். அவர், அப்போது உடுமலைப்பேட்டையில் வாடகைக்கு சைக்கிள் கொடுத்து வருமானம் ஈட்டும் குடுப்பத்தைச் சேர்ந்தவராக இருந்தார். அவரது மாமனாரோ, பொள்ளாச்சி துணைக் கலெக்டர் அலுவலகத்தில் இரவு நேரக் காவலாளி 1967,1972 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்றார்.

பிறகு, நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் இயக்க ஆதரவாளன் ஆனேன். 1971ல் சாரு மஜும்தார் கொல்லப்படுவதற்கு முன்பே நக்சலைட் இயக்கம் பிளவுபடத் தொடங்கியிருந்ததால் அரசியலில் விரக்தி ஏற்பட்டது. நல்வாய்ப்பாக, என் அரசாங்கப் பணி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படாததால் மீண்டும் 1971ல் அப் பணியில் சேர முடிந்தது. 1972ல் உதகையில் பெரிதும் தி.மு.க., தி.க. ஆதரவாளர்களே உறுப்பினர்களாக இருந்த ‘நண் சங்க’த்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் உரையாற்ற தந்தை பெரியார் இசைவு தந்திருந்தார். 1972 ஜூன் 16 அன்று திரையரங்கொன்றில் நடந்த கூட்டத்தில், அக்கூட்டத்துக்குத் தலைமைதாங்கி உரையாற்றும் பேறு கிடைத்தது.

உதகையில் ஆண்டுதோறும் நடைபெறும் மலர்க் கண்காட்சியின் போது, அங்கிருந்த எல்லா அரசாங்கத் துறைகளும் தங்கள் சாதனைகளை விளக்குவதற்கான ‘ஸ்டால்கள்’ அமைக்கும். 1974ல் நடந்த மலர்க் கண்காட்சியின்போது, நான் பணி செய்துவந்த துறையின் சார்பில் ஒரு ‘ஸ்டாலை’ வடிவமைப்பதுடன், அங்கு வருபவர்களுக்கு அத்துறையின் சாதனைகளைப் பார்வையாளர்களுக்கு வழங்கும் பொறுப்பும் எனக்குத் தரப்பட்டிருந்தது.

அப்போது முதல்வராக இருந்த கலைஞர், எங்கள் ‘ஸ்டாலு’க்கும் வருகைதந்தார். எங்கள் துறையின் தலைவராக இருந்தவர், தாவரவியல் அதிகாரி ஆகியோருடன் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அவரை நான் புகைப்படம் எடுத்தேன்.

1981ல் நான் வேலை செய்துவந்த அரசாங்கத் துறையிலிருந்து சென்னையிலிருந்த ‘டிட்கோ’வின் பொறுப்பிலிருந்த ஓர் அரசாங்கத் துறைக்கு இடமாற்றல் செய்யும் ஓர் ஏற்பாட்டின் விளைவாக நானும் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். என் இணையர் சில மாதங்களுக்கு முன்பே சென்னையில் ஒரு முக்கியமான மருத்துவமனையில் பணி செய்துகொண்டிருந்தார். சென்னை வாழ்க்கையின்போது மனித உரிமை செயற்பாடுகளில் நான் கவனம் குவிக்கத் தொடங்கியிருந்தேன்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கவிஞர் இன்குலாப், அப்போது சட்டக்கல்லூரி மாணவராக இருந்த அருள்மொழி, கவிஞர் மு.மேத்தா, பொன். செல்வகணபதி முதலியோருடன் இணைந்து, ‘ஈழத்தமிழர் பாதுகாப்புக் கூட்டமைப்பை’த் தொடங்கினோம். இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த ‘இந்திய அமைதிப் படையை’ ஒன்றிய அரசாங்கம் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அந்த அமைப்பு 1988 ஆம் ஆண்டு இறுதியில், ‘மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்த முடிவுசெய்தது.

அந்த எண்ணத்துடன் அன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞரை அணுகியபோது, அதற்கு முழு ஆதரவு அளித்ததுடன், ‘மனித சங்கிலி’க்கு வேண்டிய ஆள் பலத்தைத் திரட்டும் பணியை மதுராந்தகம் ஆறுமுகம், வை.கோபால்சாமி (பின்னாளில் வை.கோ.). ஆகியோரிடம் ஒப்படைத்தது மட்டுமின்றி, அறிவாலயத்தின் வாயிலருகே அந்த மனிதச் சங்கிலியில் ஆற்காடு வீராசாமி போன்ற தலைவர்களுடன் இணைந்து கைகோத்து, ஒரு மணி நேரத்துக்கு மேல் நின்றார்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - நானும் தி.மு.க.வும்!

13ஆண்டுகளுக்குப் பிறகு 1989ல் உருவான தி.மு.க. ஆட்சி, ஒன்றிய அரசாங்கத்தால் கலைக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவும் காங்கிரஸும் இணைந்து, ராஜீவ் காந்தி படுகொலைக்கு தி.மு.க. காரணமாக இருந்ததாக அவதூறு பிரசாரம் செய்ததன் விளைவாக, தி.மு.க. பெரும் தோல்வியைச் சந்தித்தது. அப்போது, நானும் வ.கீதாவும் இணைந்து தி.மு.க.வின் ஆக்கபூர்வமான வரலாற்றுப் பாத்திரத்தைச் சுட்டிக்காட்டி 19.6.1991 ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி’ இதழில் ‘Dravidian Politics: End of An Erd’ என்னும் கட்டுரையை எழுதினோம். முரசொலி மாறன் அந்தக் கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்க்க, ‘முரசொலி’ இதழில் வெளியானது.

திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் என் நண்பர். அவர் கலைஞரின் அதிகாலை நடைப்பயிற்சி நண்பரும்கூட. 1996ல் நானும் வ.கீதாவும் எழுதிய ‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்’ நூலைப் படித்த கலைஞர், ஒரு நாள் காலை மு.நாகநாதனிடம், “உங்கள் நண்பர் எஸ்.வி.ராஜதுரை நன்றாக எழுதியுள்ளார் என்று அவரிடம் சொல்லுங்கள்” பாராட்டியிருக்கிறார். நாகநாதன் இதை என்னிடம் தெரிவித்தபோது, “கலைஞரே என்னிடம் இதைத் தொலைபேசி வழியாகத் தெரிவித்திருக்கலாமே” என்று ஆதங்கத்துடன் கூறினேன்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்ட நால்வருக்கு, அந்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்னும் கோரிக்கை பல தரப்புகளிலிருந்து எழுந்தது. 1999ல் நீதிநாயகம் வீ.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமையில், என்னை அனைத்திந்திய ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு, ‘மரண தண்டனை ஒழிப்பு இயக்கம்’ சென்னையில் தொடங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ‘மரண தண்டனை என்ற முறையே ஒழித்துக்கட்டப்பட வேண்டும்’ என்னும் உறுதியான கருத்தை பகிரங்கமாக அறிவித்த ஒரே மாநில முதலமைச்சர். ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவர் கலைஞர் மட்டுமே.

என்மீது கலைஞருக்கு மிகுந்த மரியாதை வரக் காரணம், 2001ல் ஜெயலலிதா அரசு கலைஞரைக் கைது செய்ததைக் கண்டனம் செய்து நான், கவிஞர் இன்குலாப், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வெளியிட்ட அறிக்கைதான். கலைஞரின் கைது பற்றி காலஞ்சென்ற நீதிநாயகம் வீ.ஆர்.கிருஷ்ணய்யரிடம் தொலைபேசியில் விரிவாக எடுத்துரைத்து, அவரது கண்டன அறிக்கையை ‘தி ஹிந்து’ நாளேட்டில் வெளியிடச் செய்ததும் அதைத் தமிழாக்கம் செய்து பல தமிழ் ஏடுகளில் வெளியிடச் செய்ததும் நான்தான். வயதில் முதிர்ந்த, நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அரசியல் தலைவரான கலைஞர், கொஞ்சமும் மனிதநேயமற்று கைது செய்யப்பட்ட விதம், எங்களுக்கு ஏற்படுத்திய வேதனையும் கோபமும் எங்களைவிட அதிகமாக நீதிநாயகம் வீ.ஆர்.கிருஷ்ணய்யரிடம் இருந்தன.

சென்னை மெரினா கடற்கரையிலுள்ள கண்ணகி சிலை ஜெயலலிதாவின் ஆணவத்தால் அகற்றப்பட்டபோது, கண்ணகி சிலை மீண்டும் அதேஇடத்தில் நிலைநாட்டப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான முயற்சியாக, ‘அறிவாலய’த்தில் 22.12.2001 அன்று ஒரு கூட்டத்தை நடத்தினார் கலைஞர். அந்தக் கூட்டத்தில் நான் கலந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு கடிதத்தில் தாமே கையொப்பமிட்டு, காலஞ்சென்ற தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் சா.கணேசனிடம் கொடுத்து, என்னிடம் நேரடியாகக் கொடுக்கும்படி அறிவுறுத்தியிருந்தார் கலைஞர். அந்தக் கடிதத்தைப் படித்த நான். கவிஞர் இன்குலாபையும் பேராசிரியர் சுப.வீரபாண்டியனையும் உடனடியாகத் தொடர்புகொண்டபோது, அவர்களும் இதேபோன்ற கடிதம் தங்களுக்கும் வந்திருப்பதாகக் கூறினார்கள்.

அடுத்த நாள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அங்கு குழுமியிருந்த மூத்த அரசியல் தலைவர்களும் அறிஞர் பெருமக்களும் எடுக்கும் முடிவு என்னையும் கட்டுப்படுத்தும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - நானும் தி.மு.க.வும்!‘பெரியாரிய ஆதரவாளரான எஸ்.வி.ராஜதுரை கண்ணகி ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கலாமா?’ என்ற விமர்சனங்கள் எழுந்தன. ‘கண்ணகியைக் கற்பின் அடையாளமாக அல்ல; மாறாக, அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் அறத்தின் அடையாளமாகப் பார்க்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி, ‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்னும் தலைப்பிலான கட்டுரையைத் ‘தினமணி’யில் எழுதினேன்.

கண்ணகி சிலை தொடர்பாக சீரணி அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றவும் கலைஞர் அழைப்பு விடுத்திருந்தார். அந்தக் கூட்டத்தில் பேசிய நான், இந்துத்துவவாதிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் ஜெயலலிதாவால் கண்ணகி சிலை அகற்றப்பட்டதையும் ஒப்பிட்டுப் பேசினேன். எனக்குப் பின் பேசிய பலரும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவரும், சமீபத்தில் மறைந்தவருமான பா.ஜ.க. தலைவர் இல.கணேசனுக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தினாலும் ‘ஒரு பொதுப்பிரச்சினைக்காக அனைவரும் கூடியிருக்கிறோம்’ என்று தன் பேச்சில் குறிப்பிட்டார்.

அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருந்த தீர்மான வரைவின் நகல்களை,அங்கு உரையாற்ற அழைக்கப்பட்டிருந்த 26 பேருக்கும் முன்கூட்டியே வழங்கி, அவர்களது கருத்தைக் கேட்டறிந்த பின்னரே இறுதித் தீர்மானம் நிறைவேற்றச் செய்தார் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, திருவாரூர் தங்கராசுவுக்கு நடந்த பாராட்டு விழா கூட்டமொன்றில் கலந்துகொண்டு கலைஞர் பேசி முடித்த பின், ‘பெரியார் உயராய்வு மையமொ’ன்றை தமிழகப் பல்கலைக்கழகங்களிலொன்றில் அமைக்க வேண்டும் என்று திருவாரூர் தங்கராசு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் அடிப்படையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அந்த உயராய்வு மையத்தை நிறுவ கலைஞர் ஆணைபிறப்பித்திருந்தார்.

கலைஞர் காலத்தில் அந்த உயராய்வு மையத்தின் தலைவராக, பெரியாரிய சிந்தனையாளர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்களின் இணையர் சக்குபாய் இருந்தார். பிறகு, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அந்த ‘உயராய்வு மையம்’ முடக்கப்பட்டது.

கலைஞர் ஆட்சி 2006ல் மீண்டும் அமைந்ததும் அந்த உயராய்வு மையம் மீண்டும் செயல்பட, பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தராக அப்போது இருந்த முனைவர் சி. தங்கமுத்து அவர்களின் முயற்சியின் காரணமாக, அந்த ஆண்டு இறுதியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலுள்ள ‘பெரியார் உயராய்வு மைய’த்தின் தலைவராக நான் நியமிக்கப்பட்டேன். எனக்கு அதற்கான கல்விப்புலம் சார்ந்த தகுதிகள் இல்லையென்றாலும், பல்வேறு அறிஞர்களிடம் ஒப்புதல் பெற்று என்னை அப்பதவியில் அமரவைத்தார் அத் துணைவேந்தர். அந்த உயராய்வு மையம் தோன்றுவதற்கான முழுமுதல் காரணமாக இருந்த கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற பிறகே திருச்சிக்குச் சென்று அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடிவுசெய்திருந்தேன்.

என்னைக் கலைஞரிடம் அழைத்துச்செல்ல விரும்பிய முனைவர் நாகநாதனால் போக்குவரது நெரிசலின் காரணத்தால் உரிய நேரத்தில் அறிவாலயத்துக்கு வந்து சேர இயலவில்லை என்பதால், ‘முரசொலி’ ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவரும் என் நண்பருமான க.திருநாவுக்கரசு, கலைஞரைச் சந்திக்கவைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

எப்போதும் குறித்த நேரம் தவறாமல் வந்துவிடும் கலைஞர், ஏனோ அன்று வருவதற்குத் தாமதம் ஏற்பட்டுவிட்டது. வீட்டிலிருந்து கலைஞர் புறப்பட்டுவிட்டாரா என்பதை அறிந்துகொள்ள க.திருநாவுக்கரசு ‘அறிவாலயத்தில் கலைஞரின் அறையிலிருந்த தொலைபேசிக் கருவியை எடுத்ததுதான் தாமதம், அந்த அறையின் இன்னொரு கதவைத் திறந்து கலைஞர் உள்ளே நுழைந்தார். “என்ன திருநாவுக்கரசு, என் அறையில் என் தொலைபேசியை என்ன பண்றே?” என்று அவருக்கே உரிய நகைச்சுவையுணர்வுடன் க.திருநாவுக்கரசின் முதுகைத் தட்டிக்கொண்டே கேட்டார்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - நானும் தி.மு.க.வும்!

பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராக நான் நியமிக்கப்பட்டதையும் கலைஞரின் வாழ்த்தைப் பெற வந்திருப்பதையும் கதிருநாவுக்கரசு கலைஞரிடம் தெரிவித்தார். தனக்கு அருகில் என்னை அமரவைத்து வாழ்த்து தெரிவித்த கலைஞரும் உடனிருந்த ஆற்காடு வீராசாமி அவர்களும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு குறித்து வீரியத்துடன் உரையாடியது எனக்கு ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மேலும், பொது நூலகங்கள் செயல்படுவது பற்றியும் நூலகத்தில் 1000பிரதிகள் வரை ஒரு புத்தகத்தை வாங்க வழிசெய்யும் ஆணை பிறப்பித்ததைப் பற்றியும் கலைஞர் கூறினார்.

நான் பெரியார் உயராய்வு தலைவராக மையத்தின் இருந்தபோது… தோழர் நல்லகண்ணு, திருச்சி சிவா (அப்போதும் அவர் மாநிலங்களவை உறுப்பினர்), ஆராசா (அப்போது அவர் ஒன்றிய அமைச்சர்) ஆகியோரையும் அழைத்து சொற்பொழிவாற்ற வைத்திருக்கிறேன். திருச்சி சிவாவும் ஆ.ராசாவும் என்மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். ‘அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் இன்றைய பொருத்தப்பாடு’ என்ற தலைப்பில் மிகச் சிறப்பான உரை நிகழ்த்தினார் ஆ.ராசா அவர்கள். அங்கு ஆ.ராசா அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி, அப்போது பரவலாகப் பகிரப்பட்டது. அது சிறுநூலாகவும் வெளியாகி, பரவலான வரவேற்பைப் பெற்றது.

தி.மு.க.வில் தொடங்கிய என் அரசியல் பயணம், மார்க்சிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி, மனித உரிமை அமைப்புகள், பெரியார் ஆய்வு என்று வெவ்வேறு திசைகளுக்கு விரிந்திருக்கிறது. தி.மு.க.வின் தொடக்க காலத்தில் அதனுடன் பயணித்தவன் என்ற முறையில் 75 ஆண்டுக்கால தி.மு.க.வின் அரசியல் பயணம் குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன்.

ஆகஸ்ட் 15 சுதந்திரதின’த்தைப் பெரியார் ஏன் துக்கநாள் என்று சொன்னார் என்னும் புள்ளியில் தொடங்கி விரியும் புத்தகம்தான் ‘பெரியார் : ஆகஸ்ட் 15. அண்ணா பெரியாரிடமிருந்து பிரிந்து தி.மு.க.வை ஆரம்பிப்பதற்கான தொடக்கப் புள்ளியும் அதுதான். அதுகுறித்து ‘ஆகஸ்ட்15: துக்கநாள் – இன்ப நாள்’ என்னும் நூலையும் வெளியிட்டேன்.

ஒரு மார்க்சியவாதியாக, பெரியாரியச் சிந்தனையாளனாக இருக்கும் எனக்கு தி.மு.க.வின்மீது விமர்சனங்கள் இல்லாமலில்லை. அதே நேரம் தி.மு.க.வின் வரலாற்றுப் பாத்திரத்தையும் அதன் பணிகளையும் உணர்ந்திருக்கிறேன்.

அண்ணா, கலைஞர் என்னும் இரு வரலாற்று ஆளுமைகள் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களும் நிகழ்த்திய சாதனைகளும் மதிக்கத்தக்கவை. அண்ணா எழுதிய நூல்களிற் பல இன்று பெரும் பொருத்தப்பாடு உடையவையாக உள்ளன. இன்றைய தி.மு.க. தலைவர், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்துத்துவப் பாசிசம் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் சூழலில், அதற்கு எதிராக ஒரு ஒரு வலிமையான அணியை உருவாக்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – 1986 இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்ட நினைவுகள்!

MUST READ