கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல என்று பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதால் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஆனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, ‘’திமுக ஆட்சிக்கும் அறத்திற்கும் சம்பந்தமே இல்லை. தமிழகத்தில் அறம் சார்ந்த ஆட்சி அமையப் போகிறது என்பது மட்டும் உறுதி’’என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.
மதுரையில் தாமரை சங்கமம் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை, மேற்கண்ட ஆவேசத்தை கொட்டியிருக்கிறார். அண்ணாமலை பேசத் தொடங்கியதுமே மழை கொட்டி தீர்த்து இருக்கிறது. அந்த மழையிலும் நனைந்தபடியே தனது ஆத்திரத்தை எல்லாம் கொட்டி தீர்த்து இருக்கிறார் அண்ணாமலை. தொண்டர்களும் மழையில் நனைந்தபடியே அண்ணாமலையின் பேச்சை கேட்டு நின்று இருக்கிறார்கள்.
அண்ணாமலை தொடர்ந்து திமுகவின் ஊழல் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருகிறார். இந்த மேடையிலும் அதே புகார்தான். ’’ஒரே முகவரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் உதயநிதி அறக்கட்டளை இருக்கிறது. அமைச்சர் அன்பில் மகேஷ்தான் அந்த அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் துபாய்க்கு சென்ற போது ஆயிரம் கோடி ரூபாய்க்கு நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் நடந்தது. இந்த நிறுவனத்தை தான் தற்போது அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி சீல் வைத்து முடக்கி இருக்கிறது.
நோபல் ஸ்டீல் நிறுவனத்தில் ஒப்பந்தம் என்கிற பெயரில் ஆயிரம் கோடி ரூபாய் கொண்டு சென்று திரும்பக் கொண்டு வரும் திட்டம் தான் என்று சொன்னோம். அதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டார்கள். இதோ இருக்கிறது. நோபல் பிரிக்ஸ் நிறுவனத்தின் முகவரி 53/ 22 கே.ஜி. நடராஜா பேலஸ், சரவணா தெரு, தி. நகர், சென்னை. அதே போன்று உதயநிதி அறக்கட்டளையின் முகவரி 53/ 22 கே.ஜி. நடராஜா பேலஸ், சரவணா தெரு, தி. நகர், சென்னை.
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் முகவரியும், நோபல் குழுமத்தின் நோபல் பிரிக்ஸ் நிறுவனத்தின் கதவு எண் மற்றும் முகவரியும் ஒன்றுதான். இந்த ஆதாரம் போதாதா? இந்த அறக்கட்டளையில் 2009 ஆண்டில் உதயநிதி ஸ்டாலின் தனி இயக்குநராக இருந்து உள்ளார். இதே முகவரி இருக்கும் நிறுவனத்தின் பெயரில் 2022 ஆம் ஆண்டில் துபாய் சென்று ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் . இது மாதிரி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டே இருக்கலாம்’’என்று மழையில் நனைந்து கொதித்திருக்கிறார் அண்ணாமலை.