தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் தனி கூட்டணி?
அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தனி கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய நிலையில், பாஜக கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அத்துடன், 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக உடன் கூட்டணி இல்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சித் தலைமைத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கேசவ விநாயகம், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அடுத்த 7 மாதங்களுக்கு திமுக அரசுக்கு எதிராக பாஜக போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும், பெண்களை அதிகளவில் பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும், மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த மக்களை அழைத்து பேச வேண்டும் என அண்ணாமலை அறிவுறுத்தினார். அதேசமயம், அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தனி கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுகும் முழுநேர தேர்தல் பொறுப்பாளர்களை விரைவில் நியமிக்க பாஜக முடிவு செய்துள்ளது. கூட்டணி முடிவை டெல்லி மேலிடம்தான் முடிவெடுக்கும் என்றும் எனது கருத்தை நான் ஆழமாக தேசிய தலைமையிடம் கூறிவிட்டேன், முடிவை அவர்கள்தான் எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் அண்ணாமலை கூறினார்.