அதிமுக இயக்கத்தை காட்டி கொடுத்து விட்டு படுகுழியில் தள்ளும் எண்ணத்தில் தலைமை கழகத்தை சூறையாடியவர்களை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், அண்ணா தொழிற் சங்க பேரவை செயலாளர் கமலக் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்மகன் உசேன், “அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்.-ன் 106வது பிறந்த நாள் விழா இந்தியா முழுவதும் எம்.ஜி.ஆர்.மன்றத்தினர் மற்றும் கட்சி தொண்டர்கள் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எங்களுடைய தலைமை கழகமும், இடைக்கால பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் நல்ல முடிவு எடுத்து இந்த கால கட்டத்தில் நல்ல வேட்பாளரை அறிவித்தால் நிச்சயமாக அ.தி.மு.க. ஈரோடு இடைத் தேர்தலில் வெற்றி வாகை சூடும்.
சசிகலா அ.தி.மு.க. தலைமையை சந்திக்க உள்ளதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதையும் கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும், ஆனால் அதிமுக இயக்கத்தை காட்டிக் கொடுத்துவிட்டு, இயக்கத்தை படுகுழியில் தள்ளலாம் என எண்ணி தலைமை கழகத்தை சூறையாடியவர்களை இந்த கட்சியில் சேர்ப்பது என்றால் கட்சி தொண்டர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள்” எனக் கூறினார்.