தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை புகழாரம் சூட்டியுள்ளார்.

பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது சொந்த ஊர் சென்னைக்கு சென்று இருக்கும் புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை, மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாளில் சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “நல்ல நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர் – ஆல் உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். அதிமுக ஒன்றானால் சிறப்பாக இருக்கும். ஆளுநராகச் சொல்லவில்லை, தமிழகத்தின் ஒருவராகச் சொல்கிறேன். எம்ஜிஆர் எந்த நோக்கத்திற்காக கட்சியை உருவாக்கினாரோ அதுமெய்பட வேண்டுமானால் அதிமுக ஒற்றுமையுடன் இருந்து செயல்படவேண்டும்” எனக் கூறினார்.