Homeசெய்திகள்அரசியல்பாஜக அரசின் புருடா… வஞ்சிக்கப்படும் தமிழகம்... காந்திதேசமே இது நியாயமில்லையா?

பாஜக அரசின் புருடா… வஞ்சிக்கப்படும் தமிழகம்… காந்திதேசமே இது நியாயமில்லையா?

-

- Advertisement -

”வெளியுலகத்துக்கு இந்தியாவின் பெயர் ‘காந்தி தேசம்’. ஆனால் இங்கு காந்தி பெயரிலான திட்டத்துக்கே முறையாக நிதி வழங்குவது இல்லை” என முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.

காந்தி தேசமே நியாயமில்லையா என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த தலையங்கத்தில், ”காந்தி பெயரிலான 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 4,034 கோடி ரூபாயை ஒன்றிய பா.ஜ.க. அரசு தரவில்லை. இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுக்க மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார்.

பா.ஜ.க. அரசு வறுமை ஒழிப்பு திட்டங்களை நிறைவேற்ற உரிய நிதியை ஒதுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 1,170 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றுள்ளது. பாதிக்கப்படும் ஏழை எளிய கிராமப்புற ஆண்கள் – –பெண்கள் அதிகம் இதில் இடம் பெற்று இருக்கிறார்கள். இந்த மக்களின் உழைப்பைத்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு சுரண்டிக் கொண்டிருக்கிறது. ஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருப்பது ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்கு எதிரான மாபெரும் எழுச்சியைக் காட்டுகிறது.

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கான எந்தத் திட்டமும் இல்லை என்பதைக் கண்டித்து தி.மு.க. சார்பில் நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அடுத்து ஒன்றிய அளவில் ஆயிரம் இடங்களுக்கு மேல் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் எந்த அவுக்கு வஞ்சிக்கிறது என்பதை மக்கள் மன்றம் அறிந்து வருகிறது.

தி.மு.க. ஆதரவுடன் அமைந்த பிரதமர் மன்மோகன் சிங் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வழங்கிய மகத்தான திட்டம் இது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டமானது 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. கோடிக்கணக்கான கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலை கிடைத்தது. ஏப்ரல் 2008 இல், இந்தத் திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA) என பெயர் மாற்றப்பட்டது. இன்று வரை கோடிக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்தை இந்தத் திட்டம் உறுதி செய்து வருகிறது.

கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒரு நிதியாண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் அதிகபட்சம் நூறு நாட்கள் உடலுழைப்பை வழங்கும் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். 2014 ஆம் ஆண்டு ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல் இந்தத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவது இல்லை. அதற்கான நிதியை தாமதமாகவே வழங்குகிறார்கள்.

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஜனவரி 13-ஆம் நாள் பிரதமருக்குக் கடிதம் எழுதினார் முதலமைச்சர். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து வலியுறுத்தினார். தி.மு.க. உறுப்பினர்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இதனை எழுப்பினார்கள். ஆனாலும் பணம் வழங்கவில்லை பா.ஜ.க. அரசு.

“ஒன்றிய அரசு வழங்காவிட்டாலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்புக்குரிய நிதியின் மூலம் ஊதியத்தை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. எனினும், ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பே இதில் முதன்மையானது என்பதால் உழைக்கும் ஏழை – எளிய மக்களுக்கு முழுமையான அளவில் ஊதியம் வழங்கிட இயலவில்லை. தமிழ்நாட்டைப் போலவே கேரளா, மேற்கு வங்கம் போன்ற பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கவில்லை என்ற முறையீடுகள் வைக்கப்பட்டுள்ளன”என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்கள்.

இப்படியும் ஒரு பிரதமரா? சமூக வலைதளங்களில் விவாதம்

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்குரிய நிலுவைத் தொகையான 4,034 கோடி ரூபாயை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்றும், 5 மாதங்களாக இந்தத் தொகை விடுவிக்கப்படாமல் இருப்பதால் கிராமப்புற ஏழைத் தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். ரூ.4,034 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று சொன்னால், “உத்தரப் பிரதேசத்தைவிட தமிழ்நாட்டிற்குக் கூடுதல் நிதி விடுவிக்கப்பட்டிருக்கிறது” என்று ‘தினத்தந்தி’யில் போட வைக்கிறார்கள். அது உண்மையாக இருந்தால் ரூ. 4,034 கோடியை விடுவியுங்கள் என்று நாம் ஏன் கேட்கப் போகிறோம்?

2021 ஆம் ஆண்டும் இதே போல் தான் நடந்தது. 2021 நவம்பர் மாதம், பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதினார்கள். உடனடியாக நிலுவைத் தொகையினை மாநிலத்திற்கு விடுவிக்கக் கோரி அதில் சொல்லி இருந்தார் முதலமைச்சர்.

“2021-–2022 ஆம் நிதியாண்டில் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ரூ.3524.69 கோடியில் மொத்தத் தொகையும் 15.09.2021வரை தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைத்து முழுமையாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதன்பிறகு இத்திட்டத்திற்கு நிதி ஏதும் விடுவிக்காத காரணத் தால், 1-.11-.2021 அன்றுள்ளவாறு 1178.12 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் வழங்கப்படாமல், நிலுவையாக உள்ளது”என்பதை அப்போது சொல்லி இருந்தார் முதலமைச்சர். உடனே ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், ‘அனைத்து நிதியையும் தந்துவிட்டோம். நிலுவை ஏதும் இல்லை’ என்று சொன்னார்.அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு - சோனியா

சில நாட்களில் தான், 1336 கோடி ரூபாயை ஒன்றிய அரசு விடுவித்தது. எல்.முருகன் வாய்க்கு வந்ததைச் சொன்னார். அதைப் போலவே இப்போதும், ‘உ.பி.யை விட அதிகம் கொடுக்கிறோம்’ என்று பரப்புகிறார்கள். இது போன்ற பொய்ச் செய்திகளை பரப்புவதை விடுத்து, நிதியை விடுவிப்பதில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும்.

“உங்களுக்கு வேண்டப்பட்ட கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் பணமில்லையா? மனமில்லையா?” என்று முதலமைச்சர் எழுப்பியுள்ள கேள்வியைத்தான் தமிழ்நாடு கேட்கிறது.

MUST READ