அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டிருக்க வேண்டும் – த வெ க தலைவர் விஜய் கூறியது போல கூட்டணி கட்சிக்குள் அழுத்தம் இருப்பதே காரணம் என உணர்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக.,வின் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய அவர் கூறுகையில்..
அம்பேத்கர் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு இருக்க வேண்டும், அவர் கலந்துகொள்ள முடியாத ஒரு சூழல் வருகிறது என்றால் தவெக தலைவர் விஜய் கூறியது போல் அழுத்தம் இருப்பதாகவே நாங்களும் உணர்கிறோம் என்றார். வாரிசு அடிப்படையில் தான் ஸ்டாலின் முதல்வராகி உள்ளார், தனிப்பட்ட முறையில் உழைத்து அந்த இடத்திற்கு வரவில்லை, கருணாநிதியின் மகன் என்ற காரணத்தால் தான் இன்று கட்சியின் தலைவராகவும், முதல்வராகவும் அந்த இடத்தில் ஸ்டாலின் உள்ளார்.
அதை தொடர்ந்து மன்னர் ஆட்சி போல் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் அந்த கட்சிக்கு தலைமை ஏற்க்கவும் ஆட்சி தொடர்ந்தால் முதலமைச்சர் ஆக்கவும் மகனை துணை முதலமைச்சர் ஆக்கி உள்ளார். வாரிசு முறையில் இருக்கும் இந்த ஆட்சியை நீண்ட காலமாக அதிமுக எதிர்க்கிறது அதைத்தான் ஆதவ் அர்ஜுன் அவர்களும் கூறியுள்ளார் என்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆனவ பேச்சை விட வேண்டும், ஊடங்களில் ஆனவத்துடன் பதில் சொல்கிறார், அதிமுக பொது செயலாளர் ஆட்சியின் செயல்பாடுகளை அறிக்கையாக வெளியிட்டால் அந்த அறிக்கையை மதிப்பது இல்லை என பதில் சொல்கிறார், அனுபவமிக்க முதன்மையான தலைவர் ராமதாஸ் அவர்கள் கருத்து கூறினால் அவருக்கு வேறு வேலை இல்லை என முதிர்ந்த அரசியல் தலைவரை விமர்சனம் செய்கிறார். அந்த ஆனவ போக்கில் தான் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் சொல்கிறார். இந்த ஆனவத்துக்கு 2026ல் சரியான பதிலடியை மக்கள் வழங்குவார்கள். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மக்களை ஏமாற்ற ஊத்தங்கரைக்கு மாலை 8 மணிக்கு வந்து இரண்டு பேருக்கு நலத்திட்டம் கொடுத்து விட்டு யாரிடமும் பேசாமல் மக்களை சந்திக்காமல் செல்கிறார்.
இந்த செயல் விஜய் சொன்ன போட்டோ ஷூட் கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் உடன்படுகிறார். அதே சமயம் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களையும், மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், ஊடகங்கள் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்துகொண்டார். மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்ற போது தான் மக்களின் துயரமும், துன்பமும் தெரியும்.
வெள்ள பாதிப்பு குறித்து தோராயமாக 2,000 கோடி வெள்ள நிவாரணம் வேண்டும் என ஸ்டாலின் கூறுகிறார். அதிமுக ஆட்சியில் பாதிப்பை கணித்து முதல் தவனை, இரண்டாம் தவனை என பிரித்து நிவாரணம் கேட்டோம். ஸ்டாலின் அவர்களால் அதிகாரிகள் இடம் ஆலோசித்து எவ்வளவு நஷ்டம் என உடனடியாக கனிக்க முடியவில்லை. தற்போது 944.18 கோடி மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கொடுத்து உள்ளது. ஆட்சியாளர்கள் தன்னுடன் இருப்பவர்களுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கின்றனர்.
மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்யும் பொழுது உரியவர்கள் இடத்தில் அழுத்தம் கொடுக்க முடியவில்லை பயந்து ஒதுங்கி கொள்கிறார்கள். புதுசேரியில் 5,000 நிவாரணம் கொடுக்கிறார்கள் இங்கு 2,000 தான் கொடுக்கிறார்கள், எதிர்கட்சியாக இருக்கும் பொழுது இறந்தால் 25 லட்சம் கொடுக்க வேண்டும் என சொன்னார் இப்பொழுது எவ்வளவு கொடுத்து உள்ளார் எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு. திமுக தலைவர் ஸ்டாலின் நிறம் மாறும் அரசியல் தலைவராக இருக்கிறார், மக்களை நேசிக்கும் தலைவராக இல்லை.
ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் வருண்குமார் ஐ.பி.எஸ் அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு அரசியல் கட்சி குறித்து விமர்சனம் செய்து உள்ளார், இது குறித்து மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என்றார்.