spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சவால்களைச் சந்தித்த எதிர்ப்பின் இயக்கம்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சவால்களைச் சந்தித்த எதிர்ப்பின் இயக்கம்!

-

- Advertisement -

கோவி.லெனின்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சவால்களைச் சந்தித்த எதிர்ப்பின் இயக்கம்!

“நீங்க இந்து விரோதிங்க. உங்களுக்கு தேசபக்தி கிடையாது. முஸ்லிம் பண்டிகைகளுக்கு குல்லா போட்டு கஞ்சி குடிப்பீங்க. தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல மாட்டீங்க. அந்த பெரியார் ஈ.வெ.ரா. சொன்னதைக் கேட்டுட்டு ஆட்சி நடத்துறீங்க…”-வயதில் மூத்தவரான அவர், தன் வீடு தேடி வந்த தி.மு.க.வினரை நோக்கி சரமாரியாகப் பேசிக்கொண்டிருந்தார். இடம் மேற்கு மாம்பலம்.

we-r-hiring

ஓரணியில் தமிழ்நாடு‘ எனும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பு என்பது, கட்சிக்கான உறுப்பினர் சேர்ப்பு மட்டுமல்ல. 2021 முதல் தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் ஆட்சிக்கான உரைகல்லும்கூட ஏறத்தாழ நான்கரை ஆண்டுக்காலம் ஆட்சி செய்தபிறகு, வீடுவீடாகச் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து ஆதரவு கோருவது என்பது மிகவும் சவாலானது. ஆட்சியின் திட்டங்களும் அது உருவாக்கிய பலன்களும் மக்களுக்கானவை என்பதால், நம்பிக்கையுடன் அந்தச் சவாலை சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம்.

பொதுமக்களிடம் பரவலான வரவேற்பையும், முதலமைச்சரை கட்சியின் தலைவர் என்பதைக் கடந்து, தமிழ்நாட்டின் தலைவராக அவர்கள் கருதுவதையும் நேரடியாகக் காண முடிந்தது. தியாகராயர் தொகுதிக்குட்பட்ட மேற்கு மாம்பலத்தில் ஓரிடத்தில், காலம்காலமாகத் தி.மு.க சந்திக்கும், தொடக்கத்தில் சொன்ன எதிர்ப்புக் குரலையும் கேட்க முடிந்தது.

அந்தப் பெரியவர் தொடர்ந்து பேசினார், “எங்க ராஜாஜி சொன்னதுக்காகத்தான் 1967ல் அண்ணாதுரையோட டி.எம்.கே.வுக்கு ஓட்டு போட்டேன். ராஜாஜியும் நாங்களும் இல்லேன்னா டி.எம்.கே. ஆட்சிக்கு வந்திருக்காது. நீங்க பெரியாரைத்தான் சப்போர்ட் பண்ணுறீங்க. சீமான் ஒரு ஆள்தான் பெரியாரை எதிர்க்கிறார். அவரைத்தான் சப்போர்ட் பண்ணுவோம்” என்று அவர் பேசி முடித்தபோது, தி.மு.க. மீதான எதிர்ப்பு-வன்மம் – அதை அழிக்க யாரையாவது கையில் எடுத்து, ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து, தி.மு.க.வுக்கு எதிராகப் பயன்படுத்தும் முனைப்பு இவ்வளவு செய்தும் தி.மு.க. 75 ஆண்டுகளைக் கடந்த மாநிலக் கட்சியாக இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றிருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத கோபம் எரிச்சல்-விரக்தி, இவை அத்தனையையும் ஒரு கேப்சூலுக்குள் அடைத்தது போல இருந்தது அவரது பேச்சு.

மேற்கு மாம்பலத்துப் பெரியவரின் குரல்தான் தி.மு.க. தொடங்கப்பட்ட நாளிலிருந்து அதை எதிர்க்கும் ஊடகங்களின் குரல். நேரடியாக எதிர்க்க முடியாதவர்களின் குரல். மக்களைத் தி.மு.க.வுக்கு எதிராகத் திருப்பிவிட நினைப்பவர்களின் குரல். இந்தத் திசைதிருப்பல்கள் பாதகமான பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க.வை குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கிறது. அவற்றை தி.மு.க. தொடர்ந்து எதிர்கொண்டு முறியடித்து, தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது என்பதுதான் அதன் முக்கால் நூற்றாண்டுக்கால அரசியல்.

தி.மு.க. இந்து விரோதக் கட்சியல்ல. இந்து மதத்திற்குள் இருக்கின்ற பெரும்பான்மை மக்களின் உரிமைகளை மீட்டெடுத்து, நிலைநாட்டும் சவாலான போராட்டக்களத்தில் துணிச்சலாக எதிர்ப்புக்குரலை முன்னிறுத்திய இயக்கம் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்ற இராபின்சன் பூங்காவில், கொட்டும் மழையில் அண்ணா பேசியபோதே சொன்னார்,”திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது. திராவிடர் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அரசியல்-சமுதாய-பொருளாதாரத் துறைகளில் ஒரே கொள்கைதான். கோட்பாடும் ஒன்றேதான்” என்று முழங்கினார். பெரியாரை வீழ்த்த அண்ணாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைத்த ஆரிய சூழ்ச்சிக்கு அண்ணா இடம்தரவில்லை. திராவிடத்தின் தன்மானத்தை நிலைநாட்டுவதே அவரது எண்ணமாக இருந்தது. அதில் அவர் உறுதியாகப் பயணித்தார்.

நீதிதேவன் மயக்கம்’ நாடகத்தில் கடவுளர்களைக் கூண்டில் ஏற்றி விசாரித்தவர், அண்ணா. ஆரியம் அரக்கனாகச் சித்திரிக்கும் இராவணனை. ‘திராவிடத்தின் மூதாதை-அவன் எங்கள் பாட்டன்’ என்று கவிதை பாடினார் கலைஞர். ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்று புராணக் கதையை திருத்தி எழுதினார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். காலம்காலமாகச் சொல்லப்பட்டுவந்த கற்பிதங்களைத் திராவிட இயக்கம் தகர்த்தது. பாமர மக்களிடம் புதிய சிந்தனைகளை விதைத்தது. அதை அரசியல் தளத்தில் ஆரியத்திடமிருந்து இனம்-மொழியைக் காக்கும் போராட்டமாகத் தி.மு.க. முன்னெடுத்தது. இந்தியாவில் முதன் முதலாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சி அமைக்க முடியும் என்பதை ஜனநாயக வழியில் நிரூபித்துக் காட்டியது.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சவால்களைச் சந்தித்த எதிர்ப்பின் இயக்கம்!

தமிழ்நாட்டில் உள்ள இந்து சமயத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள்தான். அவர்களால் தங்கள் திருமணத்தைத் தமிழில் நடத்த முடிந்ததா? இந்த எதிர்க்குரலை எழுப்பியதுடன், ஆரிய வேதப் பண்பாட்டின் அடிப்படையிலான சடங்குகளுடன் சமஸ்கிருத மந்திரம் ஓதப்படும் திருமணங்கள் மட்டுமே இந்து திருமணங்கள் என்று நீதிமன்றங்களே தீர்ப்பளித்த நிலையில், 1967ல் சுயமரியாதைத் திருமணச் சட்டம் எனும் தமிழ்நாடு அரசு இந்து திருமண திருத்தச் சட்டம் எனும் சவாலான புரட்சியைச் சட்டமன்ற ஜனநாயகத்தின் வழி நிறைவேற்றியது அண்ணா தலைமையிலான தி.மு.க. அரசு. தமிழ்நாட்டு இந்துக்களில் பெரும்பான்மையானவர்கள் பேசும் மொழியான தமிழில் பெரியோர்களால் வாழ்த்துரைக்கப்பட்டு, சடங்குகள்-அணிகலன்கள் ஏதுமின்றி, மணமக்கள் தமிழில் உறுதிமொழி எடுக்கும் திருமணங்கள், இந்து திருமணச் சட்டப்படியான திருமணங்கள்தான் என்கிற தி.மு.க. அரசின் சாதனை, சனாதனத்தின் ஆணிவேரை அசைத்தது.

கலைஞரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், இந்து சமயத்தில் உள்ள எந்தச் சாதியினராக இருந்தாலும் அவர்கள் முறைப்படி ஆகமப் பயிற்சி பெற்றால், கோயில் கருவறையில் அர்ச்சகராக முடியும் என்ற சட்டம், சனானதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்றி, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற கோட்பாட்டை நிலைநிறுத்தக்கூடியதாகும். அதனால்தான், 1970, 2006 என கலைஞர் அரசு தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. 2021 ஆகஸ்ட் 14 அன்று திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் தனது ஆட்சியின் நூறாவது நாளில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் கீழ் பணியாணைகளை வழங்கியபோது, இந்து மதம் அப்படியேதான் இருந்தது-தமிழில் அர்ச்சனையைக் கேட்டு கடவுள் சிலை மகிழ்ந்தது. சனாதனம்தான் அலறியது.

நீதிக்கட்சி காலத்தில் அரசாணை இயற்றப்பட்ட வகுப்புவாரி உரிமையில் தொடங்கி, இன்றைய 69சதவிகித இடஒதுக்கீடு வரை கல்வி, வேலைவாய்ப்பு, முதன்மைத் துறைகளில் பயன்பெறுபவர்கள் இந்து மதத்தினர்தான். சனாதனம் யாரையெல்லாம் புறக்கணித்து ஒதுக்கி-ஒடுக்கி வைத்ததோ, அவர்களை உயர்த்தின திராவிட முன்னேற்றக் கழக அரசின் சட்டங்கள், அதனடிப்படையிலான திட்டங்கள்.

வெள்ளத்தில் சிக்கி ஆற்றோடு போன நரி, ‘ஐயோ… உலகம் போச்சே’ என்று கதறியதை உவமையாக முத்தமிழறிஞர் கலைஞர் பல முறை சொல்லியிருக்கிறார். தி.மு.க.வை இந்து மத விரோதி-தேசப் பற்று இல்லாத பிரிவினைவாதிகள் என்கிற நரிகளின் கதையும் அதுதான். நரிகளின் ஆதிக்கம் தகர்ந்து, எல்லாருக்கும் எல்லாம் என்கிற சமத்துவத்தை சமூக நீதி வழியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் சாதித்துக் காட்டி வருவதால்தான், ‘ஐயோ. உலகம் போச்சு’ என்கிற நரியின் கதறலைப்போல, ‘தி.மு.க இந்து விரோதி- பிரிவினைவாத இயக்கம்’ என்கிற கூப்பாடும்.

அரசியல் தளத்தில், குறிப்பாக தேர்தல் களத்தில் இந்தக் கூப்பாடுகள் பயன்தரவில்லை என்பதைத்தான் தி.மு.க. ஆறு முறை ஆட்சிக்கு வந்தது காட்டுகிறது. தேசப்பற்று கொண்ட குடிமக்கள், இந்து மதத்தினர் இவர்களின் வாக்குகள் இல்லாமல் தி.மு.க. எப்படி வெற்றிபெற்றிருக்க முடியும்? அவர்கள், இந்தக் கூப்பாட்டை நம்பவில்லை என்பது புரிந்ததால், பழிகளையும் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்பினர். இன்னமும் அதையே செய்துவருகின்றனர். “தி.மு.க. பாஷாணத்தில் புழுத்த புழு” என்கிற அண்ணாவின் சொற்கள்தான், இந்த இடத்தில் நினைவுக்கு வருகின்றன. விஷத்தை உணவாகக் கொள்ளவேண்டிய உயிர்போல, தி.மு.க. தன் மீதான காலம் காலமான விமர்சனங்களையும் அவதூறுகளையும் பொய் பரப்புரைகளையும் எதிர்கொண்டுவருகிறது.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சவால்களைச் சந்தித்த எதிர்ப்பின் இயக்கம்!தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, கலகக்காரர்கள் – அடாவடி செய்பவர்கள் கூத்தாடிகள் என்றும், ஆளுங்கட்சியான பிறகு இலஞ்ச ஊழல்வாதிகள் என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மஞ்சள் பையுடன் கலைஞர் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தார் என்கிற வன்மம் நிறைந்த பொய்யில் தொடங்கி, சர்க்காரியா தலைமையிலான விசாரணை கமிஷனை பத்திரிகைகள் வாயிலாக மட்டுமின்றி வானொலி-தொலைக்காட்சி உள்ளிட்ட அரசின் ஊடகங்கள் மூலமாகவும் நாள்தோறும் பரப்பினார்கள். அந்த பொய்ப் பரப்புரைகளைத் தன் இயக்கக் கட்டமைப்பாலும், சொந்த ஊடகத்தைப் பயன்படுத்தியும், உணர்வுமிக்க தொண்டர்களின் உறுதிமிக்க ஒருங்கிணைப்பாலும் நொறுக்கித்தள்ளி, 13 ஆண்டுகள் கழித்து 1989ல் ஆட்சிக்கு வந்தது தி.மு.க.

‘தீவிரவாதிகளை ஆதரிக்கிறது தி.மு.க. அரசு’ என்று விடுதலைப்புலிகளுக்கு தகவல்களைப் பகிர்ந்ததாகச் சொல்லி, இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைக் கவிழ்த்ததுடன், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அந்தக் கொலைப்பழியும் தி.மு.க. மீது போடப்பட்டது. நள்ளிரவில் தி.மு.க.வினர் குறிவைத்து தாக்கப்பட்டனர். தி.மு.க.வினரின் சொத்துகள் அழிக்கப்பட்டன. தேர்தலில் தி.மு.க. படுதோல்வியைச் சந்தித்தது.

1991 மே 21 அன்று, திருப்பெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் திரு ராஜீவ் காந்தி பலியானதைத் தொடர்ந்து வெளியான புகைப்படங்களில், மனிதவெடிகுண்டாகச் செயல்பட்டவர், ராஜீவ் வருகைக்கு முன்பு அந்த இடத்தில் நிற்பதும், அவருக்கு இருபுறமும் இரு பெண்கள் இருப்பதுமான புகைப்படம், விசாரணை அதிகாரிகளால் பத்திரிகைகளுக்குக் கொடுக்கப்பட்டு, மே 25ஆம் தேதி நாளிதழ்களில் வெளியானது. அது முழுப் புகைப்படமல்ல என்பதை தி.மு.க.வின் ஏடான கலைஞரின் ‘முரசொலி’தான் உரக்கச் சொன்னது. அந்த மூன்று பெண்களுக்குப் பக்கத்தில் ஓர் ஆண் இருக்கிறார் என்ற சந்தேகத்துடன், கோட்டோவியமாக ஒருவரை வரைந்து காட்டி முரசொலி வெளியிட்டது.

‘முரசொலி’ எழுப்பிய சந்தேகத்திற்குப் பிறகுதான், முழுமையான படம் விசாரணை அதிகாரிகளால் பத்திரிகைகளுக்குத் தரப்பட்டது. அதில் மனிதவெடிகுண்டாகச் செயல்பட்டவர் உள்ளிட்ட அந்தப் பெண்களுக்குப் பக்கத்தில் ஜிப்பா அணிந்த ஓர் ஆண் இருந்தார். அவர் பெயர் சிவராசன். அவரைப் பற்றிய விவரம் வெளியான பிறகுதான், ராஜீவ் காந்தி படுகொலையின் ‘ஸ்கெட்ச்’ பற்றி தெரியவந்தது. சிவராசனுடன் சுபா என்பவரும் இந்தக் கொலையில் தொடர்புடைய விவரம் வெளியானது. ராஜீவ் காந்தி படுகொலையின் முதல் ஐந்து குற்றவாளிகளில் சிவராசனும் சுபாவும் அடங்குவர். ராஜீவ் காந்தி படுகொலையில் தி.மு.க.வுக்குத் துளியளவும் தொடர்பில்லை என்பதை தி.மு.க.வேதான் நிரூபிக்கவேண்டியிருந்தது. அதை நிரூபித்து, மீண்டும் அரசியல் களத்தில் பீனிக்ஸ் பறவையாக எழுந்தது.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டாலும் தி.மு.க. மீதுதான் பழி என்பதும், ராஜீவ் படுகொலையில் இந்தியாவின் சிபிஐயால் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தலைமையிலான இயக்கத்தினர் கொல்லப்பட்டாலும் தி.மு.க. மீதுதான் பழி என்பதும் வேறெங்கும் நடந்திராத அரசியல் விசித்திரம்.

இலங்கை ராணுவத்தால் கொத்துக் கொத்தாகத் தமிழர்கள் கொல்லப்பட்ட நேரத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் நினைத்திருந்தால் இந்திய அரசை வலியுறுத்தி போரை நிறுத்தியிருக்கலாம் என்றும், அவர் பெயரளவுக்கு சில மணி நேரங்கள் உண்ணாவிரதம் மட்டுமே இருந்து, போர் நின்றுவிட்டதாக அறிவித்ததால், அதை நம்பிய ஈழ மக்கள் வெளியே வந்ததால்தான் கொல்லப்பட்டார்கள் என்றும் தி.மு.க. மீது சுமத்தப்பட்ட பழி என்பது, 1956 முதல் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அக்கறை செலுத்திய ஒரு தலைவரின் மீதான ஜென்ம வன்மத்துடன்கூடிய பழியாகும்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சவால்களைச் சந்தித்த எதிர்ப்பின் இயக்கம்!

2009ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று, இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அப்பாவி மக்கள் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி, அதிகாலை 6 மணிக்கு சென்னைக் கடற்கரையில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் 85 வயது முதலமைச்சரான கலைஞர். அவர், கடற்கரையில் உட்கார்ந்த பிறகுதான் அவரது குடும்பத்தினர். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் விவரம் அறிந்து அங்கே வந்தனர். டெல்லிக்கும் தகவல் எட்டியது. கலைஞரிடம் டெல்லியிலிருந்து பேசினர்.

ஒன்றிய அரசின் மூலம் போர் நிறுத்தத்தை கலைஞர் வலியுறுத்தினார். அன்று காலை 10மணிக்கு இலங்கை அரசு மற்றும் இலங்கை ராணுவத்தின் உயரதிகாரிகள் கூட்டம் நடந்தது. இலங்கையின் வடக்குப் பகுதியில் (ஈழத்தில்) இனி கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று ராணுவத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்து குண்டுகள் வீசுவது நிறுத்தப்படும் என்றும், பொதுமக்களைப் பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, அது இந்திய அரசுக்கும் தெரிவிக்கப்பட்டது. பகல் 12.30 மணியளவில் இந்திய அரசின் மூலம் கலைஞரிடம் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டதையடுத்து, தனது உண்ணாவிரதத்தை கலைஞர் முடித்துக்கொண்டார்.

இலங்கை அரசும் அதன் ராணுவமும் எடுத்த முடிவை இலங்கை ராணுவ இணையதளம் www.defence.lk வெளியிட்டது. The Guardian இணையதளத்திலும் பதிவானது. The government issued a statement in which is said combat operations had reached their conclusion and that it would now concentrate on rescuing civilians. “our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian casualities” it said.

கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் போராட்டத்தை முடித்துக்கொள்வதுதான் உலக நடைமுறை. முயற்சி எடுத்த கலைஞர் மீது பழிபோட்டவர்கள், “விடுதலைப்புலிகள்தான் தமிழர்களைப் பிடித்துவைத்துக்கொண்டு ராணுவத்திற்கு முன் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள்” என்று சொன்ன ஜெயலலிதாவைக் கொண்டாடினார்கள் என்பதிலிருந்து, தி.மு.க. எப்படிப்பட்ட நபர்களுக்கு நடுவே அரசியல் சவால்களை எதிர்கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இத்தகைய பெரும்பழிகளை எதிர்கொண்டு மீண்ட இயக்கம், தன் மீது இட்டுக்கட்டப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளையும் முறியடித்தது.

சர்க்காரியா கமிஷன் விசாரணையை சர்க்காரியா ஊழல் என்று அர்த்தம் தெரியாமல் இன்றளவும் உச்சரிக்கச் செய்யும் பிரச்சாரம் தி.மு.க.வுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. மீது ஊழல் பட்டியல் கொடுத்த எம்.ஜி.ஆர், அந்த சர்க்காரியா கமிஷன் விசாரணையில் தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று பின்வாங்கியதைப் பற்றி பெரிதாகப் பேச மாட்டார்கள். ‘விஞ்ஞான ஊழல்’ என்று சர்க்காரியா கமிஷன் சொன்னதாக ஓர் அண்டப்புளுகு அரை நூற்றாண்டுக் காலமாகச் சொல்லப்படுகிறது. அந்தச் சொல், விசாரணை கமிஷன் அறிக்கையில் எங்கே இருக்கிறது என்று தி.மு.க. தரப்பில் கேட்டால், அறத்துடனோ அறிவுநாணயத்துடனோ தி.மு.கவின் எதிரிகளிடமிருந்து பதில் வராது.

இணையதளங்கள் செல்போன்கள் வளர்ச்சி பெற்றுவிட்ட காலத்தில் திமு.க. மீது சுமத்தப்பட்ட 2ஜி ஊழல் குற்றச்சாட்டும் அது பற்றிய தாறுமாறான பரப்புரையும் இந்திய அளவில் இயக்கத்தின் மீதான அவதூறாகவும் நெருக்கடியாகவும், தி.மு.க.வை அரசியலில் இருந்தே தனிமைப்படுத்தும் முயற்சியாகவும் பெரியளவில் முன்னெடுக்கப்பட்டது. ஒரு இலட்சத்து எழுபத்தாறு ஆயிரம் கோடி ரூபாய் என்கிற பிரம்மாண்ட எண்ணிக்கையை முன்வைத்து தேர்தல் களத்தில் பழிவாங்கப்பட்ட தி.மு.க. தன்னந்தனியாக சட்டப் போராட்டத்தை நடத்தியே, தன்னை நிரபராதி என்று நீதிமன்றத்தில் நிரூபித்தது. விடுதலைத் தீர்ப்பைப் பெற்றது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சவால்களைச் சந்தித்த எதிர்ப்பின் இயக்கம்!

ஊழல் வழக்கிற்காகப் பதவியில் இருக்கும்போதே தண்டிக்கப்பட்டு சிறை சென்ற முதல் முதலமைச்சர் என்ற ‘பெருமைக்குரிய’ ஜெயலலிதா பற்றி பேசுவதற்கு ஊடகங்கள் யோசிக்கும். அரசியல் கட்சிகள் அடக்கி வாசிக்கும். எம்.ஜி.ஆரின் புகாரின் பேரில் அப்போதைய ஒன்றிய அரசு நியமித்த சர்க்காரியா கமிஷன் பற்றி அலசுபவர்கள் யாரும், அதே ஒன்றிய அரசு எம்.ஜி.ஆர். அரசின் எரிசாராய ஊழல் தொடர்பாக நியமித்த ‘ரே கமிஷன் பற்றி எவருக்கும் நினைவு வந்துவிடக் கூடாது என்று ரகசியம் காப்பார்கள்.

ராஜாஜி தயவால்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது என்று அதில் தன்னை ஒரு பங்குதாரராகக் காட்டிக்கொள்ளும் மாம்பலம் பெரியவர் உள்பட யாரும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தயவில்தான் எம்.ஜி.ஆரின் அதி.மு.க. அரசியல் நடத்தி, ஆட்சிக்கு வந்தது என்று சொல்ல மாட்டார்கள். ராஜீவ் காந்தி படுகொலையின் அனுதாப அலையால் மிருக பல மெஜாரிட்டியுடன் ஜெயலலிதா முதல்வரானார் என்று சொல்ல மாட்டார்கள். தி.மு.க.வும் முதலமைச்சரும் ஏன் தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வதில்லை என்று கேட்பவர்கள், எம்.ஜி.ஆர் மூன்று முறை முதலமைச்சரானபோது, எத்தனை தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்தார் என்று கேட்க மாட்டார்கள். தி.முகவுக்கு எதிராக யார் கிளம்பினாலும் அவர்களை ஆயுதமாக்கிப் பயன்படுத்தி, தி.மு.க.வை அழிக்க முடியுமா என்பதுதான் அவர்களின் நோக்கம். பெரியாரை எதிர்க்கும் சீமானை மாம்பலத்துப் பெரியவர் புகழ்ந்ததற்கும் அதுதான் காரணம்.

பெரியாரை எவரும் எதிர்க்கலாம். தி.மு.க.வை எதிர்க்கலாம். ஆதரவும் கிடைக்கும். சனாதனத்தை எதிர்த்து நிற்பதுதான் கடினம். சமூக நீதியை ஆயுதமாக ஏந்தி சனாதனத்திற்கு எதிராக நிற்கிற ஒரே அரசியல் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். அந்த எதிர்ப்புதான் பெரும்பான்மை மக்களின் உரிமைகளை மீட்டு, சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கிறது. அதனால் தி.மு.க.வை, ஆரியத்தின் கூலிகளாக நேற்று இருந்தவர்களும் நாளை வருபவர்களும் எதிர்ப்பார்கள்.

‘எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று தி.மு.க.வினருக்கு அறிவுறுத்தியிருக்கிறார், பேரறிஞர் அண்ணா. எதிர்க்க எதிர்க்க வளர்ந்து கொண்டே இருக்கும் தி.மு.கழகம்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மாநில சுயாட்சியின் முன்னணிப் படைவீரன்!

MUST READ