மு.குணசேகரன்

ஆளுங்கட்சியாக இருக்கும்போது உயிர்ப்புடன் இயங்கும் பல அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சியாக மாறும்போது, கரைந்து காணாமல் போயிருக்கின்றன. ஆனால், ஆளுங்கட்சியாக அதிகாரத்தில் வீற்றிருக்கும்போது மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதுடன், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள் பிரச்சினைகளுக்காக சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என சாத்தியப்பட்ட களங்களில் எல்லாம் போராடி, பல சாதனைகளை நிகழ்த்துவது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனித்துவம்.

1949ல் தொடங்கப்பட்ட தி.மு.க. 1957 தேர்தலில்தான் முதன்முறை போட்டியிட்டது. ஆனால், 1952ல் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸை எதிர்த்த வேட்பாளர்களை ஆதரித்து, 43 பேரை வெற்றிபெற வைத்தது. தி.மு.க. இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சட்டம் திருத்தப்பட்டது, தந்தை பெரியாரின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. அதே நேரம் பெரியாரை விட்டுப் பிரிந்த பிறகும் தி.மு.கவும் அந்த சமூக நீதிக் கொள்கைக்காகப் போராடியது குறிப்பிடத்தக்கது.
குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம், கல்லக்குடி போராட்டம், நேருவுக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம், விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டம், நங்கவரம் விவசாயிகள் போராட்டம், மொழிவாரி மாகாணம் அமைந்தபிறகு எல்லைப் போராட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்று தி.மு.க. மேற்கொண்ட போராட்டங்களே 1967ல் மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர வழிவகுத்தது.
தி.மு.க. தமிழ்நாட்டில் ஆட்சியில் அமாவதற்கு முன்பே நாடாளுமன்றத்தில் அரசியல் போராட்டத்தைத் தொடங்கிவிட்டார் அறிஞர் அண்ணா
“நான் என்னைத் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளும்போது, திராவிடனிடம் இந்த உலகத்திற்கு வழங்க திட்டவட்டமான தெளிவான, மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில அம்சங்கள் இருக்கின்றன என்று கருதுகிறேன். அதனால், எங்களுக்குச் சுயநிர்ணய உரிமை தேவை என்று விரும்புகிறோம்” என்று நாடாளுமன்றத்தில் முதல் உரையில் (1962) முழங்கினார் அண்ணா. வேளாண் நிதி ஒதுக்கீட்டில் மதராஸ் மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டது எவ்வளவு? உத்தரப்பிரதேசத்துக்கு ஒதுக்கப்பட்டது எவ்வளவு? என்று இன்றைக்கும் பொருந்தும் கேள்வியை அன்றே அண்ணா எழுப்பினார்.
தி.மு.க.வைக் குறிவைத்து கொண்டுவரப்பட்ட பிரிவினைத் தடைச் சட்டத்தின் மீதான விவாதத்தில், “கூட்டாட்சி முறையை ஒற்றையாட்சி முறையாக்கும் முயற்சிக்குக் கிளம்பியுள்ள எதிர்ப்பின் ஈட்டிமுனைதான் தி.மு.க” என்று திட்டவட்டமாகவும் தொலைநோக்குடனும் சொன்னார் அண்ணா.
‘இந்தி பேசாத மாநிலங்களில், மக்கள் விரும்பும் வரை இந்தியைத் திணிக்க மாட்டோம்’ என்று அன்றைய பிரதமர் நேருவிடம் பெற்ற உறுதிமொழி, எதிர்க்கட்சியாகத் தி.மு.க. சாதித்ததுதான். தி.மு.க.வின் ஈ.வி.கே.சம்பத்துக்கு எழுதிய கடிதத்தில்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த உறுதிமொழியைத் தந்தார் நேரு. தமிழ்நாடு மட்டுமன்றி, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமையைப் பாதுகாத்தது. தி.மு.க. பெற்ற உறுதிமொழிதான்.
அண்ணாவின் வழியில் தொடர்ந்து எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் தி.மு.க. ஆற்றிவரும் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.
மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காகவும், இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரை அகற்றவும் பல்வேறு கட்டங்களில் தொடர்ச்சியாகத் தி.மு.க. எம்பி.கள் நாடாளுமன்றத்தில் குரல்கொடுத்து வந்துள்ளனர்.
இந்துத்துவ அமைப்புகளால் 1992 டிசம்பர் 6ஆம் தேதி 400 ஆண்டுக்கால வரலாற்றுச் சின்னம் பாபர் மசூதி அநீதியாகத் தகர்க்கப்பட்டபோது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது, தி.மு.க.
“துள்ளிவரும் வேலாக, ஆவேசத்தை அள்ளிவரும் வாளாக!” என்ற தலைப்பில் டிசம்பர் 5, 1992ல் முரசொலி’யில் கலைஞர் ஒரு கவிதை தீட்டினார். நீதிமன்றத்தில் வாக்குறுதிகளுக்கு மாறாக, பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிராகக் கொந்தளித்த தி.மு.க, சென்னை சூளைமேட்டில் கண்டனக் கூட்டத்தை நடத்தியது. தேசிய முன்னணி, இடதுசாரி கூட்டமைப்பின் சார்பில் 1992, டிசம்பர் 10ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தார் கலைஞர்.
ஒன்றிய அரசில் எந்த ஆட்சியாக இருந்தாலும் ஈழப் பிரச்சினை, தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினை, இந்தி திணிப்பு எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு, மாநில உரிமைகள், சமூக நீதி ஆகியவற்றுக்காகத் தி.மு.க.வின் குரல் தொடர்ந்து ஒலித்து வந்திருக்கிறது. சில சமீபத்திய உதாரணங்களைப் பார்ப்போம்.
உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மோடி அரசின் மசோதாவுக்கு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், மாயாவதி, ராம்விலாஸ் பாஸ்வான் போன்றோர் ஆதரவு தெரிவித்தபோதும்கூட, ‘இது சமூக அநீதி’ என்று உரத்துக் குரல்கொடுத்தார், கனிமொழி. எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பெருவாரியான கட்சிகள், 370-வது பிரிவு மற்றும் உயர்ஜாதியினருக்கான 10 சதவிகித ஒதுக்கீடு விவகாரத்தில், பா.ஜ.க. அரசை ஆதரித்த நிலையில், தி.மு.க.வின் குரல் தனித்து ஒலித்தது.’
2019-ஆம் ஆண்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை நீக்கி, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மோடி அரசு மாற்றியபோது, அதற்கு எதிராகக் குரல்கொடுக்க பல எதிர்க்கட்சிகள் தயங்கின. “மக்களவையில் மிருக பலம் இருப்பதால், காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறியாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டப்பேரவையின் பரிந்துரை இல்லாமல், 370-வது பிரிவை நீக்குவதும், யூனியன் பிரதேசமாக மாற்றுவதும் ஜனநாயகத்துக்கு எதிரானது. இதன்மூலம் நீங்கள் என்ன சாதிக்கப்போகிறீர்கள்?” என்று இடித்துரைத்தார், தி.மு.க. மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு. ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, முப்தி முகம்மது சையது சிறை வைக்கப்பட்டதற்கு எதிராகவும் தி.மு.க. கொந்தளித்தது.
பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலை அடுத்து, தேசிய உணர்வு மேலோங்கிய சூழலில் நாடாளுமன்றத்தில் நடந்த சிறப்பு விவாதத்தில், சிந்து நதி நீரைத் தடுத்து நிறுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முடிவை விமர்சித்தார் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா.மனிதாபிமானற்ற செயல் என்றதோடு, தீவிரவாதம் அதிகரிக்கவே இது வழிவகுக்கும் என்றும் வாதிட்டார் அவர்.
வெறுமனே எதிர்ப்புக்குரலைப் பதிவுசெய்வதோடு, திருநங்கைகள் மசோதா, நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது போன்ற சாதனைகளையும் நிகழ்த்தியிருக்கிறது. தி.மு.க. மோடியின் ஆட்சிக்காலத்தில் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதும் சிறுபான்மையினர் உரிமைகள் நசுக்கப்படுவதும் தொடர்கதையாகியுள்ள சூழலில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது மட்டுமல்லாது, பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தையும் தி.மு.க. மேற்கொள்கிறது.
‘மாநில அரசுகளால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கும் குடியரசுத்தலைவர்களுக்கும் காலக்கெடு விதிக்கும்’ உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, மாநில உரிமைகளுக்கான தி.மு.க.வின் போராட்டத்தில் ஒரு மைல்கல்; இந்திய அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சியாகத் தி.மு.க. பெற்ற பெரும் வெற்றி. அதே போல் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது தி.மு.க.
ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி காலம் வரை, நாடாளுமன்றத்தில் 75 ஆண்டுகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சியாகத் தி.மு.க. அமர்ந்துள்ளது. மாநில உரிமைகளுக்காக ஓயாது குரல்கொடுத்து, ஜனநாயகம் காக்கவும், சமூக நீதி தழைக்கவும், மதச்சார்பின்மை காக்கவும், மொழியுரிமையை வலியுறுத்தியும் ஒற்றைக் குரலாகத் தி.மு.க.வின் குரல் தனித்து ஒலித்துவருவதை நாடாளுமன்ற ஆவணங்கள் மெய்ப்பிக்கும்.
எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, ஆளுங்கட்சியாக இருக்கும்போதே இந்திய ஜனநாயகம் காக்க எமெர்ஜென்சிக்கு எதிராகக் குரல்கொடுத்து ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக மாறியதுடன், சிறைச்சாலை சித்ரவதைகளைச் சந்தித்த வரலாற்றுப் பெருமையும் தி.மு.க.வுக்கே உண்டு.
தமிழ்நாட்டில் அண்ணாவுக்குப் பிறகு தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பை ஏற்ற கலைஞர் சந்தித்த சவால்கள், நெருக்கடிகள், சோதனைகள், அடக்குமுறைகள் ஏராளம். இரண்டுமுறை ஆட்சி கலைக்கப்பட்டது மட்டுமல்ல, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் 13 ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாகவே தொடர்ந்தது தி.மு.க. ‘ராமருக்கு 14 ஆண்டுகள் வனவாசம் என்றால், தி.மு.க.வுக்கு 13 ஆண்டுகள் வனவாசம்’ என்று இலக்கிய நயத்துடன் குறிப்பிடுவார் கலைஞர். ஆனால், இந்த 13 ஆண்டுகளில் தி.மு.க.வை உயிர்ப்புடன் வைத்திருந்தது அதன் போர்க்குணம்தான்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு எதிராகக் கூர்மையான வாதங்களை முன்வைக்கும் எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் தி.மு.க. செயல்பட்டது. ஆளுங்கட்சியுடன் காரசாரமாக வாதிட்டுவந்த தி.மு.க. எம்எல்ஏக்கள் துரைமுருகன், ரகுமான் கான், கே.சுப்பு ஆகியோர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த மூன்று உறுப்பினர்களையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு நாட்கள் அழைத்துச்சென்று, சிறப்புக் கூட்டம் நடத்தி, மக்கள் மன்றத்தில் கருத்துகளை முன்வைத்தது, தி.மு.க. பிரச்சினை மக்கள் மன்றத்தில் வெகுவாக எதிரொலித்தது.
எதிர்க்கட்சி அரசியலில் இப்படிப்பட்ட புதுமையான பாணிகள், தி.மு.க.விடம் இருந்துதான் முளைத்தன. திருச்செந்தூர் முருகன் கோயில் இந்து சமய அறநிலையத் துறை பரிசோதனை அதிகாரி சுப்பிரமணியம் கொலையைக் கண்டித்து கலைஞர் நடத்திய ‘நீதி கேட்டு நெடும்பயணம் முதல் பல்வேறு போராட்டங்களைப் பட்டியலிடலாம்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை எம்.ஜி.ஆர்.அறிமுகப்படுத்தினார். இடஒதுக்கீடு பெறுவதற்கான ஆண்டு வருமானம் ரூ.9000 என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. பொருளாதார அளவுகோலைப் புகுத்துவது சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் செயல் என்று கூறி. அதற்கு எதிராகத் தொடர்ந்து போராடியது திராவிடர் கழகம். இரட்டைக்குழல் துப்பாக்கியாகத் திராவிடர் கழகத்துடன் இணைந்து போராடியது. தி.மு.க. மாபெரும் மக்கள் செல்வாக்கைக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், 1980 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து தனது முடிவில் இருந்து பின்வாங்கும் நிலை உருவானது.
சமூக நீதித் தளத்தில் மட்டுமன்றி, இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும் ஈழத் தமிழர் உரிமைகளுக்காகவும் எதிர்க்கட்சியாகத் தொடர் போராட்டங்களை நடத்தியது. டெசோ அமைப்பை உருவாக்கி, 1986 மே 4-ல் ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டை மதுரையில் என்டிஆர், வாஜ்பாய், பகுகுணா போன்றவர்களை அழைத்து பிரம்மாண்டமாக நடத்தியது. திமுக. சட்டமன்ற உறுப்பினர் பதவியை கலைஞரும் பேராசிரியர் அன்பழகனும் துறந்தனர். இந்தியா – இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டபோதும், அதன் அடிப்படையில் அமைதிப்படையை இந்தியா அனுப்பியபோதும் கண்டனத்தைப் பதிவு செய்தது. தி.மு.க.
எம்.ஜி ஆருக்குப் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்து பல்வேறு அடக்குமுறைகளைச் சந்தித்தது. தி.மு.க. கலைஞர், நள்ளிரவில் மனிதநேயமற்ற முறையில் கைதுசெய்யப்பட்டது, ஒரு கருப்பு உதாரணம். எத்தனை அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் ஓர் எதிர்க்கட்சியாகத் தி.மு.க. தன் கடமைகளைச் செய்யத் தவறியதில்லை.
ஜனநாயகத்தில் பிடிப்பு கொண்ட தி.மு.க., கருப்புச் சட்டங்களை எதிர்ப்பதிலும் முன்வரிசையில் நின்றது. 1991ல் அ.தி.மு.க. ஆட்சியில் தடா சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கு எதிராக மாபெரும் கண்டனப் பேரணியை ஆளுநர் மாளிகை நோக்கி நடத்தியது. பல்லாயிரம் பேர் பங்கேற்ற அந்தப் பேரணியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தனசேகரன் என்ற தொண்டர் பலியானார். ஆனால், தடா சட்டத்துக்கான எதிர்ப்பை தி.மு.க. தொடர்ந்தது.
பின்னர், தடா சட்டம் ரத்துசெய்யப்பட்டு, பொடா என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. வைகோ, பழ.நெடுமாறன் போன்றோரை பொடா சட்டத்தின்கீழ் கைது செய்தது, அ.தி.மு.க அரசு. 19 மாத காலம் வைகோ சிறையில் இருந்தார். வைகோ,நெடுமாறன் விடுதலை கோரியும், பொடா சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் 2003ல் அனைத்து கட்சி சார்பில் நடந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கிவைத்த கலைஞர், கையெழுத்து இயக்கத்துக்கும் ஆதரவு அளித்தார்.
2001 2006 காலகட்டத்தில் ஜெயலலிதா அரசு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், ஆடு கோழி பலியிடத் தடைச் சட்டத்தை எதிர்த்து மக்கள் மன்றத்தில் பெரும் இயக்கம் நடத்திய தி.மு.க. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் அ.தி.மு.க ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்டபோது, அவர்களுக்கு ஆதரவாக நின்றது.
ஜெயலலிதா டான்சி நிலத்தை முறைகேடாக வாங்கியதற்கு எதிராக ஆளுநர் மாளிகைக்குப் பேரணியாகச் சென்று மனு அளித்தார், கலைஞர். பின்னர் வழக்குத் தொடர்ந்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடந்தது. டான்சி நிலம் அரசுக்குத் திரும்பியது. சொத்துக் குவிப்பு வழக்கை வேகவேகமாக முடிக்க அதி.மு.க அரசு எடுத்த முயற்சிகளை முறியடிக்க உச்ச நீதிமன்றம் சென்று, வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற நீதிமன்ற ஆணைபெற்றது, தி.மு.க. பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இறுதியாக ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கியது. தி.மு.க. நடத்திய சட்டப்போராட்டம் வென்று, இந்திய அரசியல் வரலாற்றில் மகத்தான இடம்பிடித்தது.
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், கொள்கை சார்ந்த போராட்டங்கள் மட்டுமன்றி, பண்பாட்டுப் பிரச்சினைகளையும் எதிர்க்கட்சியாகத் தி.மு.க. கையிலெடுத்திருக்கிறது. உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, சென்னை கடற்கரையில் அமைக்கப்பட்ட கண்ணகி சிலை, அ.தி.மு.க ஆட்சியின்போது 2001 டிசம்பரில் திடீரென்று அங்கிருந்து அகற்றப்பட்டு, எழும்பூர் அருங்காட்சியகத்தில் கிடத்தப்பட்டது. லாரி மோதி பீடம் சிதைந்துவிட்டதாக அப்போது காரணம் கூறப்பட்டது. ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே கண்ணகி சிலை அகற்றப்பட்டதாக கலைஞர் குற்றஞ்சாட்டினார்.
தமிழர் பண்பாட்டுச் சின்னத்தை அகற்றியது, தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் என்று சூளுரைத்தார். சிலையை அகற்றியதைக் கண்டித்த எழுத்தாளர்கள், கவிஞர்களை அழைத்து – மெரினா கடற்கரை மணற்பரப்பில் கண்ணகி சிலையை மீண்டும் நிறுவுவதற்காக ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார். ஆட்சியாளர்கள் அசைந்து கொடுப்பதாக இல்லை. தி.மு.க. இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் கண்ணகி சிலையைத் திறந்துவைத்ததோடு, தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில் எல்லாம் கண்ணகி கட்அவுட் வைக்கப்பட வேண்டும் என்றார். மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அதே இடத்தில் கண்ணகி சிலையை நிறுவியும் காட்டினார்.
அண்ணாவின் வழியில் கலைஞர் எப்படி தி.மு.கவைப் போர்க்குணமிக்க எதிர்க்கட்சியாக வழிநடத்தினாரோ அதுபோல் இன்றைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் எதிர்க்கட்சியில் இருந்து நடத்திய போராட்டங்கள் ஏராளம்.
2003ல் ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு தலைமைச் செயலகம் கட்டுவதற்கு அ.தி.மு.க. அரசு முயன்றபோது, அதற்கு எதிராக மாணவிகள் கல்லூரி வளாகத்துக்குள் போராட்டம் நடத்திவந்தனர். மாணவிகள், முன்னாள் மாணவிகள், பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து, ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதன் உச்சகட்டமாக, உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்டத்தை ஒடுக்க குடிநீர் சப்ளையை நிறுத்தியதுடன், கழிப்பறைகளைப் பயன்படுத்தக்கூட தடை போடப்பட்டது. கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து, பேராசிரியைகளையெல்லாம் வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்தார்கள்.
உண்ணாவிரதப் போராட்டம் நடந்தபோது, நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் மு.க.ஸ்டாலின். ‘நியாயமான கோரிக்கைக்காகத் தொடர்ந்து போராடுங்கள், உங்களுடன் தி.மு.க. துணை நிற்கும்’ என்று உறுதிமொழி தந்தார். அன்று நள்ளிரவே, அத்துமீறி கல்லூரிக்குள் நுழைந்ததாகக் கூறி மு.க.ஸ்டாலினைக் கைதுசெய்தது, போலீஸ், சென்னைச் சிறையில் இடம் இல்லை என்று சொல்லி, இரவோடு இரவாக கடலூருக்கு அழைத்துச்சென்று சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாத கால சிறைவாசம், மாணவர் போராட்டத்துக்கு வலு சேர்ந்ததால், தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைக் கைவிட்டது, அ.தி.மு.க அரசு.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம், சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் படுகொலை, நெடுவாசல், கதிராமங்கலம் விவசாயிகள் போராட்டம், மின்கட்டண உயர்வு என்று தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்தார் மு.க.ஸ்டாலின்.
உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித ஒதுக்கீட்டை மோடி அரசு அமல்படுத்தியதையொட்டி, பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் மட்டுமன்றி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் 10 சதவிகித ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டிலும் அதற்கான முயற்சி, ஆளுநர் மாளிகை மூலமும் டெல்லி அதிகார மையத்தின் மூலமும் நடந்தது.10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால், தமிழக மருத்துவக் கல்லூரிகளின் இடங்களை 25 சதவிகிதம் உயர்த்திக்கொள்ளலாம் என்றும் ஆசைவார்த்தை காட்டப்பட்டது. 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த, அப்போதைய நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முனைப்பு காட்டினார்.
இதற்காக 2019 ஜூலையில் அனைத்துக் கட்சி கூட்டம் துணை முதலமைச்சர், பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, சமூக நீதிக்கு எதிரான இந்த முன்னெடுப்புக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.கூடுதல் இடங்கள் என டெல்லி விரிக்கும் வலைக்குள் சிக்கக் கூடாது என எச்சரித்தார். முயற்சியைக் கைவிட்டது, அ.தி.மு.க அரசு.
வெறுமனே ஆளுங்கட்சியை எதிர்த்துப் போராடி அரசியல் ஆதாயம் தேடக்கூடிய கட்சியில்லை, தி.மு.க. அது, தான் முன்வைக்கும் கொள்கைகளுக்கான போராட்டங்களையே தொடர்ந்து முன்வைத்திருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் ஒன்றிய அரசால் ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோகித், மாவட்டம்தோறும் ‘ஆய்வு செய்கிறேன்’ என்ற பெயரில் மாநில அரசின் உரிமைகளில் தலையிட்டார். ஆளுங்கட்சியான அ.தி.மு.க அமைதிகாத்தது. ஆனால் தி.மு.க.வோ, பன்வாரிலால் புரோகித் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி போராட்டங்களை நடத்தியது.
அதே போல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு பறிக்கப்பட்டது. பாதிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவுவதற்காக, மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டைக் கொண்டுவர அதி.மு.க அரசு சட்டம் இயற்றியது. ஆனால், அந்த மசோதாவுக்கு அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இசைவு தர மறுத்து வந்தார். கிளர்ந்தெழுந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகை எதிரே, அ.தி.மு.க அரசு இயற்றிய சட்டத்துக்கு உடனே ஒப்புதல் வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி முழங்கினார். சில நாட்களில் ஆளுநர் பணிந்தார். இப்படி ஆளுங்கட்சி செய்யவேண்டிய பணிகளையும் எதிர்க்கட்சியாகத் தி.மு.க. செய்ததுதான் வரலாறு.
இன்றளவும் இருமொழிக் கொள்கையை உறுதியாகப் பற்றி நிற்பதும், இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல்எழுப்பி வருவதும் தமிழ்நாடுதான். உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த மறுக்கிற மாநிலமும் தமிழ்நாடுதான். மாநில சுயாட்சி, மொழி உரிமை, சமூக நீதி, மதவெறி எதிர்ப்பு, அடித்தட்டு மக்களுக்கான அதிகாரம். எல்லார்க்கும் எல்லாம் என்ற விழுமியங்கள், தமிழ்நாட்டு அரசியலில் அடிநாதமாக இருக்கின்றன என்றால் அதற்கான முக்கிய காரணம், எதிர்க்கட்சியாகத் தி.மு.க. ஆற்றிய பணிகளே.
தமிழ் நிலப்பரப்பின் அரசியல் நீரோட்டம், தடம் புரளாமல், தனித்தன்மையோடு ஒரே அடிப்படையில் தொடர்வதற்கு எதிர்க்கட்சியாக விழிப்புடன் தி.மு.க. இயங்கியது, முக்கிய காரணம்!
பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் டிசம்பரில் ஓடுமா? பாதுகாப்பு சான்றிதழ் எப்போது?


