போரூர் மற்றும் பூந்தமல்லி ரயில் நிலையங்களில் ரயில்கள் உள்ளே வெளியே செல்லக்கூடிய பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரக்கூடிய நிலையில் 10 நாட்களில் பணிகள் நிறைவடைய உள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வரும் மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள வழித்தடம் 4- ல் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான சுமார் 10 கி மீ தொலைவிற்கு ஆளில்லா மெட்ரோ ரயில் சேவையானது டிசம்பர் மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் தொடர்ந்து ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே, பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு முன்பு, பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டப்பணிகள் RDSO கடந்த ஆகஸ்டு மாதம் நடந்தது. அப்போது, இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தி காண்பிக்கப்பட்டது.

குறைந்தபட்சம் 20- லிருந்து உச்சபட்ச வேகத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கி பயணிகளின் பயண வசதி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனையின் அடிப்படையில் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு உள்ளாக சான்றிதழ் வழங்கி இருக்க வேண்டும். அதனையும் கடந்து அக்டோபர் மாத இறுதிக்குள் பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்கும் என மெட்ரோ ரயில் நிறுவனம் எதிர்பார்த்தது. பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே இந்த வழித்தடத்தில் மெட்ரோ தொடங்க முடியும் என்ற நிலையில் இரண்டரை மாதங்கள் ஆகியும் சான்றிதழ் வழங்காமல் இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு இழுத்தடித்து வருகிறது.
மேலும் ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் அமைப்பது, லிஃப்ட் வசதி என பொதுமக்கள் எளிதாக ரயில் நிலையத்திற்கு வரும் வகையில் அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அதேபோல் ரயில் நிலையங்களுக்கு உள்ளே கழிப்பறை, பயணச்சீட்டு வழங்குமிடம், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து டிசம்பர் மாத தொடக்கத்தில் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் (CMRS) இறுதி கட்ட சோதனை நடைபெற்ற பின்பு டிசம்பர் மாத இறுதியில் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மக்கள் பயன்பாடுக்கு கொண்டு வரும். போரூர் மற்றும் பூந்தமல்லி ரயில் நிலையங்களில் ரயில்கள் உள்ளே வெளியே செல்லக்கூடிய பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரக்கூடிய நிலையில் 10 நாட்களில் பணிகள் நிறைவடைய உள்ளது என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேகதாது விவகாரம்: கேள்விக் குறியாகும் கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் – அன்புமணி கேள்வி?


