வீ.மா.ச.சுபகுணராஜன்

இந்தியத் தேர்தல் ஆணையத் தளத்தில் தேடினால், 1949ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு இன்று வரை ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் தொடரும் ஒரே அரசியல் கட்சி தி.மு.க.தான் என்பது செய்தி இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனசங்கம் (ஹிந்து மஹா சபா) இந்திய முஸ்லிம் லீக் ஆகியவை ‘சுதந்திரத்திற்கு’ முன்பிருந்து தொடர்பவை. பல் மாநில இருப்பு அவற்றை தேசியக் கட்சிகளாகவும், தி.மு.க. போன்றவற்றை மாநிலக் கட்சி எனவும் வகைப்படுத்துகிறது.

முதலில், ‘தேசியக் கட்சி’, ‘மாநிலக் கட்சி’ என்ற வகைமை. சரியா? மாநிலக் கட்சிகள் ‘தேசியத்திற்கு’ எதிரானவை என்ற கருத்து இதன் பொருளா? இந்தியா, ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என வரையறுக்கும் அரசியலமைப்புச் சட்டம் கொண்ட நாட்டில், ‘ஒன்றியம்’ என்ற விளிப்பு ‘பிரிவினைவாதமாகி’ நடுங்கவைப்பது இதனால்தானே..
‘பெடரல் இந்தியா’ என்ற அரசியல் சொல்லாடலை இங்கு தொடர்ந்து தி.மு.க. முன்னெடுப்பது கூடுதல் அச்சம். அது, அரசியல் அறியாமையின் வெளிப்பாடு. பெரியார், அண்ணா சிந்தனைகளின் ‘மக்கள் மைய நாடு’ மற்றும் ‘மக்களே இறையாண்மையின் ஆதாரம்’ எனும் கொள்கை இன்றளவும் புரிந்துகொள்ளப்படவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் அதன் தோற்றுவாயிலேயே, இந்துத்துவ பெரும்பான்மைவாதத்தை எதிர்கொள்ள உருவான இந்தியாவின் முதல் கூட்டாட்சிக் கட்சி (The Federal Party) என்பதை விளங்கிக்கொள்ள முயல்வோம்.
பெரியாரிடமிருந்து பிரிந்து, தனி அமைப்பு காணும் அழுத்தம் உருவானது. இந்திய அண்ணாவின் அரசியல் சிந்தனைகளின்வழி மட்டுமே அரசியலமைப்புச் சட்ட வரையறை உருவாக்க நாட்களிலேயே, அண்ணா தொடர்ந்து தனது ‘திராவிட நாடு’ இதழின் தலையங்கம் மற்றும் கட்டுரைகளில் அது குறித்த சிந்தனைகளை எழுதியபடியே இருந்தார். ‘திராவிட நாடு’ கட்டமைப்பு பற்றி மேலதிகமான சிந்தனைகளை வளர்த்தெடுத்தபடி இருந்தார். அதனை ‘திராவிடக் கூட்டாட்சிக் குடியரசு’ என அழுத்தமாகப் பதிவுசெய்தவர், அந்தக் கூட்டாட்சிக் குடியரசின் அடிப்படைகளில் ‘பிரிந்துசெல்லும் உரிமை’ என்ற கோட்பாட்டை முன்மொழிந்தார். இந்த ‘உரிமை’ குடியாட்சியின் மிக வலுவான அடிப்படை என்றுணர்ந்து, அதைச் சொன்னார்.
இந்த அரசியல் பார்வை ‘தேசம்’ என்ற உருவாக்கத்தில் அறவே இல்லை. அதிலும் இந்திய உபகண்டம் ‘வலுக்கட்டாயமாக’ இரு தேசங்களாக இறுகப் பிணைக்கப்பட்ட ‘மதம்’ எனும் வெறி தூண்டப்பட்டது. ஜின்னா ஒரு இஸ்லாமிய பாகிஸ்தானையும், நேரு மையத்தில் அதிகாரம் குவிக்கப்பட்ட ‘இந்தியா’வையும் உருவாக்கியது இந்தக் ‘கூட்டாட்சி’ என்ற அரசியல் சிந்தனையின் அடிப்படையான பண்பைக் காண மறுத்ததே.
இந்தியத் துணைக்கண்டத்தின் நாடுகள் உருவாக்கக் காதையில் பலரும் ‘மறதியில்’ தொலைத்துவிடும் ஒரு மிக முக்கியமான வரலாற்றுத் தரவு ஒன்று உள்ளது. ஆம், 1946ஆம் ஆண்டு இந்தியாவுக்கான அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்திற்கான ஒப்பந்தம், இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடு கொள்கையை உத்தேசிக்கவே இல்லை.
இந்த துணைக்கண்டம் ஏராளமான அதிகாரம் மிக்க மாநில அரசுகளையும், அவற்றை ஒன்றிணைத்து வழிநடத்த ஐந்து ஒருங்கிணைக்கும் பிரதேச அரசுகளையும், தில்லியில் இந்தப் பிரதேச அரசுகளை ஒருங்கிணைத்து நிர்வகிக்க ஒரு ‘பலவீனமான’ அரசு எனவுமே முன்மொழிந்தது.
இந்த மைய அரசு பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி போன்றவற்றை மட்டுமே நிர்வகிக்குமென உத்தேசிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை ‘கூட்டாட்சி’ என்பதைக் காண பெரிய அரசியல் ஞானம் தேவையில்லை. அதற்கான அரசியலமைப்புச் சட்ட வரையறை உருவாக்கவே பிரதிநிதிகள் தேர்வாகினர். அரசியலமைப்புச் சட்ட வரையறை உருவாக்க நாடாளுமன்றக் குழுவின் முதல் அமர்விற்கு முன்னரே நேரு அவர்கள் பம்பாயில் அளித்த நேர்காணலில், இந்த மாநில அரசுகள், பிரதேச அரசுகள், மைய அரசு என்ற முன் தீர்மானங்களை காங்கிரஸ் நாடாளுமன்ற அவையில் மறுபரிசிலனை செய்யும் எனத் தெரிவிக்க மறுகணம், இந்த மொத்த ஒப்பந்தமும் சிதறிச் சின்னாபின்னமாகியது.
மதக் கலவரத்திலும், ரத்தக் களறியிலும் இந்தியா, பாகிஸ்தான் எனும் ‘எதிரி’ தேசங்கள் உருவாகின. இந்தியாவிற்கான அரசியலமைப்புச் சட்டம் ‘மாநிலம்’ என்ற அரசு அலகை முடிந்தவரை குரல்வளையை நெரித்தே’ உருவாக்கியது. இந்தியா எனும் தேசம் ‘ஊனமுற்ற கூட்டாட்சியாக’ (Quasi Federal) பிறந்தது. நேரு அவர்கள் தயவில் ‘ஹிந்து தேசம் என்ற ஒற்றை அறிவிப்பு மட்டுமே தவிர்க்கப்பட்டது.

‘கூட்டாட்சி’ என்ற சொல், அதன் பொருள் இந்திய தேசியவாதிகளின் கொடுங்கனவாகி, தூக்கத்தைக் கெடுத்ததற்குக் காரணமில்லாமலில்லை. பார்ப்பனரல்லாதார் அறிக்கை (Non-Brahamin Manifesto) உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவரும், நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவருமான டாக்டர். டி.எம்.நாயர், அவரது ஆசிரியத்துவத்தில் வெளிவந்த ‘ஜஸ்டிஸ்’ ஆங்கில நாளேட்டில் தொடர்ந்து ‘கூட்டாட்சி’ எனும் சிந்தனையை இந்திய தேச உருவாக்கத்தின் அடிப்படையாகக் கொள்ளவேண்டியதை வலியுறுத்திவந்தார். குறிப்பாக, அன்னி பெசன்ட் அம்மையாரின் ‘ஹோம் ரூல்’ எனும் கோட்பாட்டை கடுமையாகச் சாடிக் களமாடினார்.
‘திராவிடம்’ என்ற கொள்கைவழி நின்று இந்து மகா சபாவின் ‘ஹிந்து ராஷ்ட்ரம்’, காந்தியாரின் ‘ராம ராஜ்யம்’ ஆகியவற்றை நிராகரித்தார். அயர்லாந்து அம்மணியும், மைலாப்பூர் பார்ப்பனர்களும் கட்டியெழுப்பிய ‘ஹோம் ரூல்’ இந்தியாவின் எளிய குடிமகனின் நலனைக் கருதாதது எனக் கடுமையாகக் கண்டித்தார். குறிப்பாக, அயர்லாந்து எனும் நாடு ஏற்கெனவே இருப்பில் இருந்த ஒன்று, பிரிட்டிஷ் மேலாதிக்கம் அதனை இல்லாமலாக்கியபோது, அதனை மீட்டெடுக்க உருவான இயக்கம், ‘ஹோம் ரூல்’. ஆனால் இங்கோ, அப்படியொரு தேசம் என்ற அமைப்பு ஒருபோதும் இருந்ததே இல்லை. நம்மிடம் நிர்வாக அலகு என்ற வகையில் எஞ்சியிருப்பது ‘கிராமம்’ என்ற அமைப்பு மட்டுமே என்றார்.
அந்தக் ‘கிராமமும்’ ஜாதி எனும் வன்முறை வடிவத்தால் நோயுற்று இருப்பதே மெய். எனவே, உடனடியான ஆட்சியதிகாரம் என்பது ஏற்கெனவே ஆதிக்கச் சாதிகளாக இருக்கும் பார்ப்பனர், உயர்ஜாதியினருக்கே இன்னும் மேலதிகமான அதிகாரம் வழங்குவதாக அமையும். எனவே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மேம்பட்டு அதிகாரத்தில் தன் தீர்மானங்களின்படி’ பங்கேற்கும் நிலை பெறும் வரை பிரிட்டிஷ் ஆட்சி தொடர வேண்டும். அதேபோல இந்தியத் துணைக்கண்டம் தேசம் எனும் அமைப்பை உருவாக்கும்போது, அது உறுதியாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்றவற்றை மாதிரியாகக் கொண்டு, இந்தியாவிற்கான கூட்டாட்சி வடிவையே உருவாக்கிக்கொள்ள வேண்டுமென விரிவாக எழுதினார்.
பேரறிஞர் அண்ணா உருவாக்கிய அரசியல் கட்சியின் ‘திராவிட நாடு, அதன் அடிப்படைகளை டி.எம்.நாயர் மற்றும் பெரியார் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டது. பெரியாரின் ‘தேசம்’ என்பதே ஏமாற்றுவேலை; ‘மக்களே தேசியத்தின் இருப்பு’ மற்றும் ‘எல்லைகளற்ற தேசம்’ எனும் கோட்பாட்டுச் சட்டகங்களையும் டி.எம்.நாயர் அவர்களின் எளிய மக்கள் அதிகாரம் பெறும் கூட்டாட்சி எனும் சிந்தனையையும் இணைத்தே கூட்டாட்சிக் குடியரசு எனும் கோட்பாட்டை அண்ணா உருவாக்கினார்.
தனி அமைப்பு காணும் தீர்மானம் வலுப்பெற்றதும், பல விதமான பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதியாக ‘திராவிடர் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரைப் பல தோழர்கள் முன்மொழிந்தனர். அண்ணா அதனை ‘திராவிடர்’ எனும் இன வடிவத்திற்குள் குறுக்கிவிட வேண்டாம்; அந்த நில எல்லைக்குள் வாழும் அனைத்து மக்களுக்குமான இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம்’ என இருக்கட்டுமென மொழிந்து. ஆங்கிலத்தில் அதை ‘Dravidian Progressive Federation எனக எழுதிக் காட்டினார் என்பர் வரலாற்றறிஞர். ஆம் ‘பெடரேஷன்’ என்ற கருத்தாக்கம் அதன் உருவாக்க நாளிலேயே அதனோடு இணைக்கப்பட்டது.
தேசம் உருவாகிவிட்ட பிறகு, அதை நிராகரித்துவிட்டு செயல்படுவதில் பொருளில்லை. ஆட்சியிலுள்ளவர்களை ‘சமூக மாற்றத்திற்கானவர்களாக மாற்றுவதைவிட, ஆட்சியைக் கைப்பற்றுவதன் வழி இன்னும் வலுவாகச் செய்ய இயலுமெனக் கருதினார், அண்ணா. இந்த வகையில் நீதிக்கட்சி ஆட்சி அதன் பலவீனங்களையும், சமரசங்களையும் கடந்து வென்றெடுத்த சமூக மாற்றத்திற்கான அரசாணைகளையும், செயல் திட்டங்களையும் சீர்தூக்கித் தொகுத்துக்கொண்டார். ஆனால், இதையும் கடந்து மாபெரும் சவால்கள் எதிர் நின்றதை அவர் அறியாமல் இல்லை. முதலாவது, இந்தியா என்ற கட்டமைந்துவிட்ட ஒரு தேசத்திடம் சமாதானமாக தனித் ‘திராவிட நாடு’ என்ற ஒன்றை எப்படி வென்றெடுப்பது என்பது. பெரும்பாலும் மக்கள் புரட்சிப் போராட்டங்களின் ஆதிக்கவாத ஆட்சியாளர்களுக்கெதிரான வன்முறை என்ற வடிவத்தைத் தவிர்த்து, வன்முறையற்ற அதே வேளை, மாற்றத்தைச் செயல்படுத்தும் வகையிலான அமைப்பை எப்படிக் கட்டியெழுப்புவது என்பதே அது.
தி.மு.க. எனும் சாமானியர் அரசியல் கட்சி
இந்திய சுதந்திரம் என்ற கருத்தாக்கம் பெருமிதமிக்க இந்திய தேசியம் என்பதை அரசியல் களத்தின் ஆன்மா ஆக்கிவிட்டிருந்தது. அநேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும், மார்க்சியம் உள்ளிட்டவையும் தேசியம் எனும் ஜோதியில் ஐக்கியமாவதைத் தவிர்க்க முடியவில்லை. இரு நாடுகள் உருவாக்கம், காந்தியார் படுகொலை ஆகியவை ‘தேசியம்’ எனும் உன்னதம் பற்றிய மாற்றுச் சிந்தனைகளை முதன்மை பெறச் செய்ய முடியவில்லை. காந்தியாரின் கொடு மரணம் எனும் ‘தியாகம்’ தேசியத்தின் ‘கிரீடமாக’ மாற்றப்பட்டது. தேசம், தேசியம் என்பவற்றின் ஆதாரத் தேவையான ‘மாற்று எதிரியை’ உறுதிசெய்வதில் துணை நின்று நீர்த்துப்போனது. ‘தேசியத்தின்’ பின்னால் ஒளிந்துகொண்ட மதத் தீவிரவாத ‘அசல் எதிரி’ சிறிது காலத்தில் ‘ஹிந்து என வலிய தொகுக்கப்பட்ட’ மக்கள் தொகுப்பின் ஆதர்சமாக முனைகிறது.
இந்த சுதந்திர ஜோதியின் பிரகாசம் படாத வெளியின் சாமானியர்களின் குரலாக மாறியது தி.மு.க. அமைப்புரீதியாக நாற்பது வயதைக்கூட கடக்காத இளைஞர்களின் வழிகாட்டி ஆனார் அண்ணா. அண்ணாவின் ‘திராவிட நாடு இதழ் கட்டுரைகள் இதற்கான தளத்தை ஏற்கெனவே கட்டியெழுப்பியிருந்தது. இஸ்லாமிய பாகிஸ்தான் எனும் கோரிக்கையால் ‘ஹிந்து ராஷ்ட்ரா’ (பாரத்) எனும் சாவர்க்கரின் பெரும்பான்மைவாத மதவெறிக்கான களம் வலுவானது. அதற்கெதிரான, முற்றிலும் மாற்றான வாதத்தை முன்வைத்தவர் அண்ணா என்பதுதான் அவரை இந்திய அரசியலின் தீர்க்கமான மாற்று அரசியல் சிந்தனையாளர் ஆக்குகிறது. ஆம், அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ அந்த வகையில் மாபெரும் கலகக்குரல் என்பேன். எதனை, யாரை ஹிந்து ராஷ்ட்ரத்துக்கான அடையாளமாக்கி முழங்கியதோ ஹிந்துத்துவம், அதற்கு முற்றிலும் மாற்றாக ‘சிவாஜி’ எனும் மாவீரனின் ‘சுயமரியாதையை’ சிதைத்தது ஆரியப் பார்ப்பன ஹிந்துமதம் என்றார் அண்ணா.

மராட்டிய வீர சிவாஜி, தமது மண்ணைக் காக்க களத்தில் வென்றுவிட்டு, மன்னனாக மகுடம் சூட்ட முனைந்தபோது, அவனது ‘சூத்திரப் பிறப்பைக்’ காட்டி, ‘ஷத்திரியர்’ உரிமையான ‘அரியணை’ ஏறும் அதிகாரத்தை அனுமதிக்க மறுத்தது ‘ஆரியப் பார்ப்பன’ மனு தர்ம சாஸ்திர விதிகள். சிவாஜி அந்த ‘பிராமண அங்கீகாரம்’ காசியின் உயர் அதிகாரம் பெற்ற ‘பிராமணர்’ முன் மண்டியிட்டு, அவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்து, அவர்களது தயவில் ‘பிறப்பு எனும் தடை’ நீங்கி மகுடம் சூட்டிக்கொண்டான். இந்தச் சதி ‘சிவாஜியை’ மகுடத்திற்காக மண்டியிடச் செய்ததோடு அல்லாமல், மராட்டிய வீரம் என்பதைக் களவாடி, இந்தியாவின் முதலாவது பார்ப்பன பேஷ்வா ‘திருட்டு’ ஆட்சியை பூனாவில் நிறுவியது.
‘ஆட்சித் திருட்டை’ இன்றும் தொடரவே, அதையே ‘ஹிந்து ராஷ்ட்ரா எனப் புனைகிறது ஆர்.எஸ்.எஸ்.
அண்ணா ‘பெடால்’ உள்ளொழுங்கு குறித்த சிந்தனைகளை விரித்தபடி இருந்தார். ஐரோப்பிய நாடுகள், கத்தோலிக்கக் கிறித்துவம் என்ற ஒரே மதம் சார்ந்து ஏன் ‘ஒற்றையாக’ இருப்புக்கொள்ளவில்லை என்பதை ‘ஹிந்து பாரத்திற்கு எதிராக வைத்தவர், அதேவேளை, அந்த நாடுகள் இரண்டு உலகப் போர்களின் களமாக மாறியதன் அடிப்படைகளைப் பரிசீலிக்கத் தவறவில்லை. ஹிட்லரின் ‘உலகை ஆளப் பிறந்த ஆரிய இனம்’ எனும் கொக்கரிப்பு, ‘தேசம்’ எனும் ஆபத்தின் எச்சரிக்கை மணி என்றார். தேசம் என்பதே ஒரு நாஜி பாசிச நோய்க்கூறு என விளக்கினார்.
எனவே, கூட்டாட்சி எனும் வடிவின் மாதிரிகளை அவர் தொடர்ந்து சிந்தித்து பரிசீலித்துவந்தார். 1940ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர். தேர்தலில், ரிபப்ளிகன் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, ரூஸ்வெல்ட்டிடம் (Rooswelt) தோற்ற வெண்டால் வில்கி (Wendell Wilkie) அவர்களின் ‘ஒரு உலகம் (One Globe) கொள்கையையும், அகில உலகக் காமன்வெல்த் எனும் கருத்தாக்கத்தையும் ‘திராவிட நாடு’ சிந்தனையில் இணைத்தார்.
இந்திய காமன்வெல்த், ஆசியா காமன்வெல்த் என உலகையே எல்லைகள் அற்ற கூட்டாட்சிகளின் கூட்டமைப்பாக உருவாக்க முடியுமென அறிவித்தார். இந்திய தேசம் உருவான ரத்தம் தோய்ந்த வரலாறு தவிர்க்கப்பட்டிருக்க முடியுமென உறுதிபடச் சொன்னார்.
தி.மு.க. தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் கழித்தே ‘பிரிவினைத் தடைச் சட்டம்’ வந்தது. அதுவரையான காலவெளியில், இந்திய அரசியலின் பல்வேறு நிகழ்வுகள் குறித்துப் பேசியும் எழுதியும் வந்தார் அண்ணா. அவற்றின் அடிப்படைகள் ‘மாகாணவுரிமை’ என்பதையே கொண்டிருந்தது. தனிநாடு கோரிக்கை ‘தன்னாட்சி’ என்ற நோக்கம் கொண்டது மட்டுமே. அண்ணாவின் நாடாளுமன்ற உரையின் ‘தன்னாட்சி உரிமை’ (Self Determination) குரலே கூட்டாட்சிக்கான அழைப்புதான். அண்ணாவின் வழிநடந்து, ஆட்சியில் உன்னதங்களை நிகழ்த்திக் காட்டிய கலைஞர் அவர்களின் முன்னெடுப்பான ‘மாநில சுயாட்சி; ராஜமன்னார் குழு அறிக்கை இன்றும் உயிர்ப்புடன் அதன் பக்கங்களில் ‘இந்தியக் கூட்டாட்சிக்கான’ வரைபடத்தைக் கொண்டிருக்கிறது. அது ஒருநாள் செயல்பாடு காணும் நாள் வந்தால், தி.மு.க. இந்தியக் கூட்டாட்சிக்கு கருத்தியல் தளம் அமைத்துக்கொடுத்த அறிவியக்கம் என்பது துலங்கும்.
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சவால்களைச் சந்தித்த எதிர்ப்பின் இயக்கம்!


