Homeசெய்திகள்அரசியல்"தேசிய கீதம் ஏன் 2 முறை? பதில் இல்லை" - 'சோபா மாடல்' அரசை சாடிய...

“தேசிய கீதம் ஏன் 2 முறை? பதில் இல்லை” – ‘சோபா மாடல்’ அரசை சாடிய உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

“தேசிய கீதத்தை ஏன் இரண்டு முறை பாடுகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு தற்போதைய முதலமைச்சரிடம் பதில் இல்லை. ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் அடிக்கும் கூத்துக்களை மக்கள் தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள், ஆனால் நாங்களோ சட்டமன்றத்தில் நேரில் பார்த்து வருகிறோம்” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரசாரமாகப் பேசியுள்ளார்.

தேசிய கீதம்

we-r-hiring

​புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன் விடுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்களுக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
திமுக முக்கிய தலைவர்கள் அனிவகுப்பு
​இந்த பிரம்மாண்ட நிகழ்வில் திமுகவின் முக்கிய தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் எஸ். ரகுபதி, கோவி. செழியன், மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வைத்தியலிங்கம் மற்றும் முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
​திருமண விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய உரையின் முழு விவரம்:

“சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டா?”
​”இந்த ‘சோபா மாடல்’ ஆட்சி அமைந்த பிறகு நாடு என்ன நிலைமையில் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியினர் செய்யும் கொடுமைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது.
​ஏற்கனவே இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற அவைக்கு வந்தவுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், பேரவைத் தலைவர் ஆகியோரைப் பார்த்து வணக்கம் வைப்பார். ஆனால், தற்போதுள்ள முதலமைச்சர் விஜய் அவைக்கு வந்தவுடனேயே எந்த ஆங்கிளில் எத்தனை கேமரா இருக்கிறது என்று பார்ப்பதைத்தான் முதல் வேலையாக வைத்திருக்கிறார்.

​இதனால், ‘இது சட்டமன்றமா, இல்லை சினிமா தியேட்டரா, அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டா?’ என்ற சந்தேகம் நமக்கே எழுகிறது. அந்த அளவுக்கு அவையை மாற்றி வைத்துள்ளனர். முதலமைச்சர் தொடர்ந்து தன் ‘ஆக்டிங் பெர்பார்மன்ஸை’ காட்டி, அவைக்குள் குட்டிக்கதை சொல்கிறேன் என்று உளறிக்கொண்டிருக்கிறார்.”

மக்களின் இதயத்தில் மு.க.ஸ்டாலின்
​”நம்முடைய திமுக தலைவரை (மு.க.ஸ்டாலின்) அவர் தேடிக்கொண்டிருக்கிறாராம். நம் தலைவர் என்றைக்குமே தேடிக் கண்டுபிடிக்கும் இடத்தில் இருந்தவர் இல்லை; எப்போதும் மக்களோடு மக்களாக வாழ்பவர். மிசா காலத்தில் போலீஸ் தேடியபோது, தானாகச் சென்று கைதானவர் நம் தலைவர்.
​தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தில்லாக, தெம்பாகத் தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி சொன்னவர் அவர். ஆனால், பெரம்பலூர் தொகுதியில் ஜெயித்தார்களே… இந்த முதலமைச்சர் இதுவரை ஒரு முறையாவது அங்குச் சென்று நன்றி சொன்னாரா? நிச்சயம் கிடையாது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களின் மூலம் நம் தலைவர் இன்றும் மக்கள் மத்தியில் இருக்கிறார்.”

​திட்டங்களை நிறுத்த பயப்படும் அரசு
​”இந்த மக்கள் நலத்திட்டங்களைத் தவிர்க்க முடியாமல், நிறுத்த முடியாமல் இந்த சோபா மாடல் அரசு தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த திட்டங்களில் கை வைக்க நினைத்தாலே இந்த அரசுக்கு ஒரு பயம் வரும். அந்த பயம் இருக்கிற வரைக்கும் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பது நம்முடைய தலைவர் முத்துவோல் கருணாநிதி ஸ்டாலின்தான். எனவே, இந்த குரளி வித்தை காட்டும் வேலையை நிறுத்திவிட்டு, முதலமைச்சரும் இந்த அரசும் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய வேண்டும்.”

எல்லாவற்றையும் மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்!
​”இந்த ஆட்சியில் மக்கள் இன்று மின்சாரம் (கரண்ட்) எங்கே என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். நல்லபடியாக இருந்த சட்ட ஒழுங்கு எங்கே போனது என்று தேடுகிறார்கள். கடந்த ஐந்து வருட திமுக ஆட்சியில் ஜூன் 12 அன்னைக்கு மேட்டூர் அணை சரியாகத் திறந்து விடப்பட்டது. ஆனால், இந்த ஆட்சியில் தண்ணீர் எங்கே என்று மக்கள் தேடுகிறார்கள். மொத்தத்தில், தமிழ்நாட்டில் ‘ஆட்சி’ என்று ஒன்று நடந்துச்சே… அது இப்போது எங்கே என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் தேட ஆரம்பித்துவிட்டார்கள்.”

திமுகவினரைக் குறிவைக்கும் அரசுக்கு எச்சரிக்கை
​”புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து ஒருவர் ஆளுங்கட்சியில் சேரப்போவதாகத் தினமும் செய்திகள் வருகின்றன. இவ்வளவு நாள் ஊழல் சக்தியாக இருந்தவர், ஆளுங்கட்சியில் சேர்ந்ததும் தூய சக்தி ஆகிவிடுவாராம். இதுதான் இந்த அரசின் ஊழல் ஒழிப்பு லட்சணம்!
​திமுகவினரை, குறிப்பாக ‘ஜென்சி’ (Gen-Z) திமுகவினரை குறிவைத்துச் சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சியாளர்களின் அநியாயங்களை உடன்பிறப்புகளாகிய நாம் ஒன்றிணைந்து தோல் உரித்துக் காட்ட வேண்டும். இந்த அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை அம்பலப்படுத்தி, கழக உடன்பிறப்புகள் தீவிரமாகக் களமாட வேண்டும்.”
​இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

MUST READ