சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் அணி செயலாருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார்.
எல்லோரும் இவர் அமைச்சராவது குடும்ப அரசியல் என்ற கோணத்தில் பார்க்கலாம். ஆனால் அது தவறு. யார் ஒருவரும் உழைப்பு இல்லாமல் ஒரு துறையில் நீடிக்க முடியாது. அவரின் உழைப்பிற்கு கிடைத்த ஊதியம் தான் இந்த அமைச்சர் பதவி.
திமுக என்னும் கட்சி 1949 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் தோற்றுவிக்கப்பட்டது. அதில் கலைஞர் மட்டும் தான் உயர்நிலை கல்வியுடன் நின்றவர். ஆனால் கலைஞரின் பேச்சு, எழுத்து, திறமை மற்றும் அவரின் உழைப்பிற்கு முன்னால் யாராலும் நிற்க முடியவில்லை.
1956 ஆம் ஆண்டு திருச்சியில் திமுக சார்பில் மாநில மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்பது குறித்து பங்கேற்றவர்களின் வாக்கு எடுப்பு நடத்தினர். அந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானோர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தெரிவித்தனர்.
1957 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டமன்ற தொகுதிகளிலும் 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கட்சி தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளுக்குள் திமுக ஆட்சியை பிடித்தது. அப்போது அண்ணா முதலமைச்சராகவும் கலைஞர் பொதுபணித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். கலைஞர் 13 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் என்ற பெருமையை பெற்றவர்.
1969 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கலைஞர் அக்கட்சியின் தலைவராகவும், பேராசிரியர் க.அன்பழகன் பொதுச் செயலாளராகவும், பொறுப்பேற்று திமுகவை வழி நடத்தி வந்தனர்.
1965 ஆம் ஆண்டு திமுகவில் மாணவர் அமைப்பு தொடங்கப்பட்டது. அதில் ஸ்டாலின் தனது நண்பர்களுடன் சேர்ந்து அமைப்பை தொடங்கினார். கட்சிக்குள் படிப்படியாக முன்னேறிய ஸ்டாலினை திமுகவில் அதன் தலைவர் கருணாநிதி எளிதில் அங்கீகரிக்கவில்லை. 1967 ஆம் ஆண்டு ஸ்டாலின் தனது 14 அவது வயதில் தாய்மாமன் முரசொலி மாறனுக்காக தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்தார். பொதுக்குழு உறுப்பினராக மு.க.ஸ்டாலின் 1973 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1976 ஆம் ஆண்டு ஸ்டாலின் MISA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அது மு.க.ஸ்டாலின் தனது தீவிர அரசியல் வாழ்க்கையில் ஈடுப்பட செய்தது. சிறையில் இருந்தபோது அவர் கடுமையாக தாக்கப்பட்டார். மேலும் அவரோடு சிறையில் அடைக்கப்பட்டு இருந்து சி. சிட்டிபாபு காயங்களாலும், காவல் துறையின் சித்திரவதைகளாலும் ஸ்டாலினை பாதுகாக்கும் போது இறந்து போனார்.
1965-ல் கட்சிக்குள் வந்த ஸ்டாலின், 1975-ல் மிசாவில் ஓராண்டு சிறையில் கொடுமையை அனுபவித்தார். அதன் பிறகு தான் அவருக்கு 1984 சட்டப்பேரவை தேர்தலில் அங்கீகாரம் கிடைத்தது.
ஸ்டாலின் 1984 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். அதில் அவர் தோல்வியுற்றார். பின்னர் 1989 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை தேர்தலில் வென்றாலும் சாதாரண எம்.எல்.ஏவாக மட்டுமே இருந்தார். 1996 ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி அமைத்தாலும் ஸ்டாலினுக்கு அதில் எந்த பதவியும் வழங்கவில்லை.
அதன் பிறகு ஸ்டாலின் 1996 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். மேயராக இருந்தபோது வார்டு தோறும் ஸ்டாலின் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டம் சிறப்பாகப் பேசப்பட்டது. ஸ்டாலினுக்கு உரிய அங்கீகாரம் 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தான் கிடைத்தது. ஸ்டாலின் உள்ளாட்சி அமைச்சராகவும் பின்னர் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார்.
10 ஆண்டு காலம் எதிர்கட்சியாக இருந்தாலும் கட்சியை தன் பிடியில் வைத்திருந்தார் ஸ்டாலின். கலைஞர் மறைவுக்கு பிறகு ஸ்டாலின் திமுகவின் தலைவரானார். 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதில் “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” எனக் கூறி அவர் பதவியேற்று கொண்டார். மு.க.ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் திகழ்கிறார்.
முன்னாள் முதலமைச்சரான மு.கருணாநிதியின் பேரனும் மு.க.ஸ்டாலினின் மகனும் தான் உதயநிதி ஸ்டாலின். திரைப்படங்களில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசியலில் ஈடுப்பட உள்ளதாக அறிவித்தார். இளைஞரணிக்காகவும், கொரோனா காலத்தில் மக்கள் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கவர்ந்தார் உதயநிதி.
அதனை தொடாந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் தேர்தல் பரப்புரைகளில் ஈடுப்பட்டார். 2019 ஆம் ஆண்டு திமுக வின் இளைஞர் அணி செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதை திறமையாக பயன்படுத்தி கொண்ட உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியில் களத்தில் இறங்கி வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்ங்களுக்கும் சென்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அவருடைய முயற்சியும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்க காரணமாக அமைந்தது. அவரும் சேப்பாக்கம் தொகுயில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் தற்போது எம்.எல்.ஏ வாக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளார். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் டிசம்பர் 14 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் உதயநிதிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
கட்டுரை : ச. பிரித்தா