கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள் திமுக தரப்பு பதிலளிக்வில்லை என்றால் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவோம் என்று வேல்முருகன் கூறியுள்ளாா்.
தமிழக அரசியல் சூழல் தேர்தலை முன்னிட்டு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி, கூட்டணி அரசியலில் முக்கிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்வதா, இல்லையா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேல்முருகன், இந்த முறை தனிச்சின்னத்துடன் போட்டியிட வேண்டும் என்பதையும், குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறார். ஆனால் திமுக தரப்பில் “முன்னையபடி ஒரு தொகுதி மட்டுமே வழங்க முடியும்” என்ற நிலைப்பாடு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே கூட்டணிக்குள் அதிருப்தியை அதிகரித்துள்ளது.
இது தொகுதி பங்கீட்டில் மட்டும் நின்றுவிடவில்லை. வேல்முருகன் கொள்கை ரீதியாகவும் 10 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து திமுக மீது அழுத்தம் கொடுத்துள்ளார். வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு, தமிழக அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை, சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற கோரிக்கைகள் இதில் அடங்கும். இந்த கோரிக்கைகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் அல்லது அதற்கான உறுதியை அளிக்க வேண்டும் என அவர் நிபந்தனை விதித்துள்ளார். “எங்களது நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் கூட்டணியைத் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்” என்ற அவரது எச்சரிக்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் இணைந்துள்ளதால் கூடுதல் தொகுதிகளை வழங்குவது சாத்தியமில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இருப்பினும், வேல்முருகனை கூட்டணியில் தக்கவைக்க அமைச்சர் எ.வ. வேலு மூலம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இறுதி முடிவு முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகே எடுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அதிமுக தரப்பில் இருந்து வேல்முருகனுக்கு “பெரிய ஆஃபர்” வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மூன்று தொகுதிகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர் முன்வைத்த 10 கோரிக்கைகளையும் ஏற்கத் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அரசியல் கணக்குகள் மேலும் சிக்கலாகியுள்ளன.
மேலும், வட மாவட்டங்களில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருப்பதால், வேல்முருகனும் இணைந்தால் வன்னியர் சமூக வாக்குகள் ஒருங்கிணைய வாய்ப்பு அதிகம் என அதிமுக கணக்கிடுகிறது. இது வடதமிழகத்தில் தேர்தல் முடிவுகளை பெரிதும் பாதிக்கக்கூடிய காரணியாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், திமுகவுக்கு 24 மணி நேரக் கெடு விதித்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி, அந்த நேரத்திற்குள் சாதகமான பேச்சுவார்த்தை நடைபெறாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
அகில இந்திய பொதுச் செயலாளர் பேபியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வைகோ
