”திமுகவிற்கு எதிராக பொங்கும்போது மட்டன் பிரியாணி போல மாஸ் காட்டும் விஜய் அம்மா உணவகத்தின் வெஜ் குஸ்காதான்” என திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன் கிழித்துத் தொங்கவிட்டுள்ளார்.
திமுகவிற்கு எதிராக பொங்கும்போது மட்டன் பிரியாணி போல மாஸ் காட்டும் விஜய், அதிமுகவை பற்றி இதுவரை ஒருவார்த்தை கூட பேசாத, ஆறிப்போன குஸ்கா போல இருக்கிறார். கேட்டால், ஆளுங்கட்சியை எதிர்ப்பது தான் வீரம் எனும் மொக்கை லாஜிக் வேறு. நாட்டை ஆளும் பாஜகவிற்கு எதிராக அரசியல் செய்து அறுத்து தள்ளிட்ட மாதிரி.
ஆளும் திமுக அரசை விமர்சிக்க வேண்டும் என்பது முற்றிலும் சரி. ஆனால் அதிமுக தமிழ்நாட்டை ஆண்டு 50 ஆண்டுகளா ஆகிவிட்டது? 2021 வரை, 10 வருடங்களாக அவர்களின் ஆட்சிதானே? ஊழல், லஞ்சம் பற்றி வாய் கிழிய பேசும் நீங்கள்..ஏ1 என குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற ஜெயலலிதாவை பறறி பேசாமல் பம்முவது ஏன்? எடப்பாடி ஆட்சியில் எந்த தவறும் நடக்கவில்லையா? ஜெ.வை விமர்சித்தால் பெண்களின் வாக்குகள் கிடைக்காது எனும் பீதியா? தேர்தல் சமயத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த அமைதியா?
ஒரு சாமான்ய மனிதரை கேட்டால் கூட, திமுகவும், அதிமுகவும் எங்களை ஆண்டதுபோதும். புதிதாய் வரும் நேர்மையான தலைவரின் கட்சிக்கு இம்முறை வாய்ப்பு அளிப்போம் என ஒவ்வொரு முறையும் கூறுவதுண்டு. ஆனால் நீங்கள் அந்த சாமான்யருக்கு உள்ள புரிதல் கூட இல்லாமல், திமுகவை மட்டும் கடித்து வைத்து, அதிமுகவின் மறைமுக சொம்பு போல செயல்படுவது முதுகெலும்பற்ற செயல். உங்கள் சாயம் வேகமாக வெளுத்து வருகிறது.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று வீராப்பாக சொன்னால் மட்டும் போதாது. செயலிலும் காட்ட வேண்டும் என புலி போல கர்ஜித்தார் விஜய். அவருடைய பெயரை அவர் கூறுகிறார். இதில் என்ன வீராப்பு இருக்கிறது? இதை நக்கலடித்த அதே வாய்.. மோடியையும் நக்கலடித்து இருந்தால்.. தைரியத்தை பாராட்டி இருக்கலாம்.
ஆனால் இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்து வணங்கி.. மோடி சார்.. தமிழ்நாட்டுக்கு ஏதாவது பாத்து செய்யுங்க சார் என மண்டி போட்டுள்ளார் விஜய். நமது பாநில உரிமையை வீராப்பாக கேட்க வேண்டும் விஜய். பாத்து செய்யுங்க என பூனை போல கெஞ்சுவது ஏன்? விஸ்வகுரு மோடி, இரும்பு மனிதர் அமித் ஷா என வீராப்பாக சொன்னால் மட்டும் போதாது. தமிழ்நாட்டின் உரிமையை பறிக்க கூடாது என சவுண்ட் விட்டிருந்தால், நீங்கள் மானத்தமிழன்.
அப்படி செய்யாததால்தான் சொல்கிறோம் உங்களை ‘பி’ டீம் என்று. பாஜகவிற்கு எதிராக நீங்கள் ஆயிரம் மேடைகளில் கூவி, நாடகம் ஆடினாலும் நீங்கள் ‘பி’ டீம்தான். திமுக, விசிக வாக்குகளை பிரிக்க பெரியார், அம்பேத்கர் முகமூடிகளை அணிந்து வந்தாலும், பருப்பு வேகாது. வரும் தேர்தலில், வாக்குகளை பிரிக்கும் அசைன்மென்ட்டை முடித்துவிட்டு, பழையபடி சினிமாவில் நடிக்க கிளம்புங்கள். அதுதானே உங்கள் திட்டம்? பிறகு எதற்கு இங்கே வெஜ் மட்டன் பிரியாணி மற்றும் கருவாட்டு சாம்பார் அரசியல் செய்து காமடி செய்கிறீர்கள்? எனக் கேட்டுள்ளார்.