வக்ஃபு திருத்த மசோதா என்பது இந்திய அ ரசியலமைப்புச்சட்டத்தின் மீதான தாக்குதல், இந்த மசோதா என்பது நூற்றாண்டுகாலமாக நிலவும் சமூகஒற்றுமை மீது பாஜக நடத்திவரும் தொடர் தாக்குதலின் ஒருபகுதி என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், தலைமைச் செய்தித்தொடர்பாளருமான ஜெய்ரமேஷ் வெளியிட்ட அறிவிப்பில், ”மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு திருத்த மசோதா ஆழமான தவறுகளைக் கொண்டது. வகஃபு மசோதா 2024 என்பது பாஜகவின் திட்டங்களில் ஒன்று, நூற்றாண்டுகளாக தனித்துவமாக பல மதங்கள் கொண்ட நம்முடைய சமூகத்தில் நிலவிவரும் சமூக ஒற்றுமையை சேதப்படுத்தும் பாஜகவின் தொடர் முயற்சியின் ஒருபகுதி.
தவறான கருத்துக்களைப் பரப்புவதன் மூலமும், தவறான எண்ணங்களை உருவாக்கி சிறுபான்மை சமூகங்களை கெட்டவர்களாகச் சித்தரிக்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதி. இந்த மசோதாவின் நோக்கமே, அரசியலமைப்பு அம்சங்களான அனைவருக்கும் சமஉரிமை, அனைத்து மதம்சார்ந்த குடிமக்களுக்கும் பாதுகாப்பு என்ற அம்சத்தை நீர்த்துப்போகச் செய்வதுதான்.
5 விதமான காரணங்களுக்காக இந்த மசோதா மிகவும் குறைபாடுடையது. வக்ஃபுகளை நிர்வகிப்பதற்காக முந்தைய சட்டங்களால் உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளின் அந்தஸ்து, அமைப்பு மற்றும் அதிகாரம் ஆகியவற்றைக் குறைக்க தீவிரமாக முயற்சி செய்யப்பட்டது. இதன் மூலம், மத மரபுகள் மற்றும் விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையை வேண்டுமென்றே பறிக்கப்பட்டது. வக்ஃபு நோக்கங்களுக்காக யாரேனும் ஒருவர் நிலத்தை தானம் செய்யலாம் என்பதை தீர்மானிப்பதில் தெளிவின்மையாக இருக்கிறது.
வக்ஃபு நிர்வாகத்தை பலமிழக்கச் செய்யும் நோக்கத்துக்காகவே ஏற்கெனவே இருந்த சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. வக்ஃபு சொத்துக்களை ஆக்கிரமித்து இருப்போரை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன
வக்ஃபு வாரிய சொத்துக்கள் தொடர்பான விவகாரங்கள், பிரச்சினைகள், சிக்கல்கள், பதிவு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர், உள்ளிட்ட அதற்கு மாநில அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
யாருடைய புகாரின் பேரிலோ அல்லது வக்ஃபு சொத்து, அரசாங்கச் சொத்து என்ற வெறும் குற்றச்சாட்டினால் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, எந்தவொரு வக்ஃபு அங்கீகாரத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசு அதிகாரிகளுக்கு இருக்கும்.
வக்ஃபு மசோதா குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அளித்த 428 பக்க அறிக்கை வார்த்தைகளால் அழிக்கும் தன்மை கொண்டது. எந்தவிதமான ஆழமான ஆலோசனைகளும், விவாதங்களும் இல்லாமல் அறிக்கை அளிக்கப்பட்டது. இது நாடாளுமன்ற நடைமுறைகளை மீறியது. ஒட்டு மொத்தத்தில் வக்ஃபு மசோதா அரசியலப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்” என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.