சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பை வென்றது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. துபாயில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்சல் 63 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 53 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் வெற்றி பெற 252 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 49-வது ஓவரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை வென்று இந்திய அணி அசத்தியது. ஒட்டு மொத்தத்தில் 3வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் கேப்டன் சான்ட்னர், பிரேஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.19.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.