Homeசெய்திகள்விளையாட்டுகுவியல் குவியலாக பதக்கங்களை குவிக்கும் காங்கேயம் மாரத்தான் மாணவி சஷ்மிதா

குவியல் குவியலாக பதக்கங்களை குவிக்கும் காங்கேயம் மாரத்தான் மாணவி சஷ்மிதா

-

குவியல் குவியலாக பதக்கங்களை குவிக்கும் காங்கேயம் மாரத்தான் மாணவி சஷ்மிதா

விளையாட்டு விளையாட்டுனு இருந்தா படிப்பு என்ன ஆகுறது, விளையாட்டுதுறையில் சாதிக்க நினைக்கும் அனைவரின் வீட்டிலும் கேட்கும் குரல்தான் இது.

தனக்கு கிடைக்காத கல்வியை, தான் அதில் எட்டி பிடிக்க முடியாத உயரங்களை தனது குழந்தைகள் அடைந்துவிட வேண்டும் என கனவு கண்டு அதற்காக காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் பெற்றோரில் நாமும் ஒருவராய் இருக்கலாம் அல்லது நம்மில் ஒருவராய் இருக்கலாம்.

உயர் நடுத்தட்டு, நடுத்தட்டு, நடுத்தட்டை எட்டிபிடிக்க போராடும் அனைவரின் நம்பிக்கையாய் கல்வி இருக்கிறது. மகனோ, மகளோ விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டும் போது அதை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர் எண்ணிக்கை மிக சொற்பமே.

குவியல் குவியலாக பதக்கங்களை குவிக்கும் காங்கேயம் மாரத்தான் மாணவி சஷ்மிதா
மாணவி சஷ்மிதா (பழைய படம் )

அதிலும் குறிப்பாக காங்கேயம் போன்ற கிராமப்புறங்கள் நிறைந்த சிறுநகரங்களில் அது அரிதினும் அரிது. அதுவும் குறிப்பாய் பெண் குழந்தைகளுக்கு. கிரிக்கெட், கால்பந்து போன்ற வெகுஜன பரப்பை அடைந்த விளையாட்டுகள் விளையாட கூட பொது மைதானங்கள் இல்லாத ஊரில் தடகளம்,மாரத்தான், ஹாக்கி, கபடி போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சி வாய்ப்புகளும், வரவேற்பும் எட்டாக்கனியே.

இதுபோன்ற ஒரு சூழலில் வளர்ந்து மாநில, தேசிய போட்டிகளில் முத்திரை பதிப்பது மிகச் சாதாரணமல்ல. இதை மாநில, தேசிய அளவிலான மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து மாணவி சஷ்மிதா சாத்தியப்படுத்தி இருக்கிறார். அதற்கு உறுதுணையாய் இருந்தது கார் ஓட்டுநரான அவரது தந்தை மூர்த்தியும், தாய் சசீலாவும் தான்.

குவியல் குவியலாக பதக்கங்களை குவிக்கும் காங்கேயம் மாரத்தான் மாணவி சஷ்மிதா

அடுக்கி வைக்க இடமில்லாமல் பரண்மேல் கிடந்த கோப்பைகளையும், பதக்கங்களையும் எண்ணினால் 300ஐ தாண்டும். அதுவரை மௌனமாய் நின்றிருந்த மாணவி சஷ்மிதா தனது மாரத்தான் அனுபவங்களை பற்றி கூறியதாவது,

நான் காங்கேயம் குளோபல் மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு உயிரியல் பிரிவில் படிக்கிறேன். சிறு வயது முதலே எனக்கு ஒட்ட பந்தயங்களில் குறிப்பாக நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொள்வது விருப்பம். எனது 8 வயதில் நான் முதல் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டேன்.

3,5,10,15,21 கி.மீ தூரங்கள் என படிப்படியாக பங்கேற்று தற்போது 42.95 கி.மீ  முழு மாரத்தான் தூரத்தை இரண்டு முறை நிறைவு செய்து பரிசு பெற்றுள்ளேள். துவக்கத்தில், தற்போது உள்ளது போல் அடிக்கடி மாரத்தான் போட்டிகள் நடக்காது.

அங்கொன்றும், இங்கொன்றுமாக தொலைதூர நகரங்களில் தான் நடக்கும். எங்கு நடந்தாலும் அது எத்தனை ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் என்றாலும் என் தந்தை என்னை அழைத்து சென்று பங்கேற்க வைப்பார்.

 

கேரளா, கர்நாடகா, கோவா, டெல்லி என பல்வேறு மாநிலங்களில் நடந்த தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன். இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.

குவியல் குவியலாக பதக்கங்களை குவிக்கும் காங்கேயம் மாரத்தான் மாணவி சஷ்மிதா

ஆரம்பத்தில் எந்தவித பயிற்சியோ, பயிற்சியாளரோ இல்லாமல் தான் போட்டிகளில் கலந்துகொண்டேன். தற்போது பள்ளியில் பயிற்சியையும் ஊக்கத்தையும் வழங்குகின்றனர். எனது தாய், தந்தை, ஆசிரியர்கள் தந்த ஊக்கமும், நம்பிக்கையும் தான் நூற்றுக்கணக்கான வெற்றிகளை பெற வைத்தது என்றார்.

சமீப காலங்களில் மாரத்தான் போட்டிகள் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வுக்காக சிறு,சிறு பந்தய தூரங்களில் நடத்தப்படுகிறது. நூற்றுக்கணக்காக பொதுமக்கள், வீரர்கள் இதில் கலந்துகொண்டு முக்கிய சாலைகள் வழியே செல்கின்றனர். மற்ற விளையாட்டுகளில் வெற்றி, தோல்வி என்பதே முடிவாக இருக்கிறது. ஆனால் மாரத்தானில் பங்கேற்பதும், பந்தைய தூரத்தை நிறைவு செய்வதும் தான் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

பாரசீகத்துடனான போரில் கிரேக்கத்தின் வெற்றியை ஏதென்சில் சொல்வதற்காக துவங்கியது இந்த மாரத்தான் ஓட்டம். இன்று சஷ்மிதா போன்று பலரின் வெற்றியை அறிவிப்பதாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பள்ளி படிப்பிற்கு பின் விவசாய பட்ட படிப்பு பின்னர் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற மாணவியின் கனவை நிறைவேற்ற பள்ளி நிர்வாகம் மட்டுமல்லாது அரசும் போதிய உதவி செய்து உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது  சஷ்மிதா போன்ற பல கிராமப்புற மாணவிகளின் கோரிக்கையாக உள்ளது.

MUST READ