
குதிரை பேர ஆட்சியை நடத்தும் முதலமைச்சர் விஜய் தான் முதல் குற்றவாளி எனவும், அதிமுகவிலிருந்து ஓடியவர்கள் திரும்பி வரத் தயார் என்றால் இபிஎஸ்ஸிடம் பேசத் தயார் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், தற்போதைய அரசியல் சூழல், கார் திருட்டுப் புகார் விவகாரங்கள் மற்றும் த.வெ.க. அமைச்சர்களின் பேச்சுகள் குறித்து அதிரடியாகவும் விமர்சன ரீதியாகவும் பேட்டியளித்தார். அவரது பேட்டியின் விரிவான விபரம் வருமாறு:

“அர்த்தராத்திரியில் குடை பிடிக்கும் த.வெ.க. அமைச்சர்கள்!”
”50 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கும் ஒரு மூத்த தலைவரைப் பார்த்து, நேற்று வந்த சின்னப் பையன் நிர்மல் குமார் அரசியலை விட்டு விலக வேண்டும் என்று பேசுகிறார். ‘அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான்’ என்ற பழமொழிக்கு ஏற்பத்தான் தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் எவ்வளவு பேச வேண்டுமோ பேசட்டும், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.”
குதிரை பேர அரசு: முதலமைச்சர் விஜய் தான் முதல் குற்றவாளி!
தமிழகத்தில் தற்போது விசித்திரமான, பொருந்தாத ஒரு ஆட்சி நடைபெற்று வருவதாகச் சாடிய தினகரன், தேர்தல் முடிந்த உடனேயே குதிரை பேரம் நடந்துள்ளது என்று தான் தான் முதலில் அம்பலப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
”திருட்டுத்தனமாக அமமுக சட்டமன்ற உறுப்பினரிடம் கையெழுத்து வாங்கி ஆதரவு பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட முதலமைச்சர் விஜயைத்தான் இந்த குதிரை பேர புகாரில் முதல் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும். 126 சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்களுக்கு எதிராகத்தான் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்ற எதார்த்தத்தை த.வெ.க-வினர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில்தான் அவசர அவசரமாகப் பல வேலைகளை இந்த அரசு செய்து வருகிறது” என்றார்.

திமுக கூட்டணியின் ‘இரவல்’ ஆதரவு; வைகோ முதுகில் குத்தினார்!
”2006-ல் கலைஞர் அமைத்த சிறுபான்மை ஆட்சி போல விஜய் இந்த ஆட்சியை அமைக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணியில் இருந்த தோழமைக் கட்சிகளுக்காக திமுகவினர் களத்தில் வேலை செய்து அவர்களை வெற்றி பெற வைத்தனர். அப்படி ஜெயித்த கட்சிகளின் இரவல் ஆதரவில்தான் த.வெ.க ஆட்சி நடக்கிறது.
’தூய சக்தி’ என்று தம்பட்டம் அடித்த விஜய், ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு ஒவ்வொரு கட்சி அலுவலகத்தின் கதவுகளையும், வீடுகளையும் தேடி ஓடினார். தமிழக வெற்றிக் கழகம் ஒன்றும் தூய சக்தி கிடையாது, அது ஒரு நாச சக்தி; 2024 நாடாளுமன்றத் தேர்தலில் துரை வைகோ வென்றதே திமுகவின் ஆதரவில்தான். ஆனால், இன்று மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் சுயலாபத்திற்காக திமுக பக்கம் நிற்கிறார்கள். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுகவை முதுகில் குத்தியுள்ளார். இந்த வயதான காலத்தில் வைகோ இப்படித் தடுமாறி வருவதைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது” என விமர்சித்தார்.
”சரத்குமாரிடம் தோற்றுப்போன விஜய்” – பவுடர் விவகாரம்!
ஊழல் வழக்கு உள்ள முன்னாள் அமைச்சர்களை எல்லாம் கட்சியில் சேர்த்துக் கொண்டு, தங்களை எப்படித் தூய சக்தி என்று த.வெ.க சொல்லிக் கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பிய தினகரன், “(சரத்குமார்) பவுடர் அமைச்சரிடம் விஜய் தோல்வி அடைந்துவிட்டார்” என்று சாடினார். மேலும், சர்ச்சைக்குரிய “வெள்ளை பவுடர் அமைச்சர்” விவகாரத்தில் காவல்துறை அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் சவால் விடுத்தார்.
இபிஎஸ்ஸுடன் பேசத் தயார்; துரோகிகளுக்குக் கறுப்பு எழுத்துக்கள்!
”அம்மாவால் (ஜெயலலிதா) அடையாளம் காட்டப்பட்டு அமைச்சர்களாக இருந்தவர்கள், தலைமை மீதான கருத்து வேறுபாட்டால் வேறு கட்சிக்கு மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சியின் நிலைப்பாட்டை மீறி ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ-க்களை ஒன்றுதிரட்டியதே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்தான். தங்களின் அப்பட்டமான சுயநலத்திற்காக அதிமுகவை விட்டுச் சென்றவர்களின் பெயர்கள், வரலாற்றில் கறுப்பு எழுத்துக்களால் பொறிக்கப்படும்.
இருப்பினும், அம்மாவின் தொண்டன் என்ற அடிப்படையில் அமமுக என்றும் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது; அது தொடரும். கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் தாய் உறைவிடமான அதிமுகவிற்கே வர விரும்பினால், அவர்கள் மீண்டும் இணைவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் நேரில் பேச நான் தயாராக இருக்கிறேன்” என்று புதிய அரசியல் திருப்பமாகத் தெரிவித்தார்.
