திருச்சியில் தனியாருக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்ய முயன்ற பாஜக விவசாய அணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம் பகுதியில் ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான 18 ஏக்கர் பரப்பளவிலான தென்னை நாற்றங்கால் உள்ளது. ரங்கசாமி, ஸ்ரீரங்கத்தை பாஜக விவசாய அணி மாநில நிர்வாகி கோவிந்தன் என்பவருக்கு, தனது நிலத்தை குத்தகைக்கு விட்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இடத்தின் உரிமையாளர் ரெங்கசாமி கையெழுத்தை கோவிந்தன் போலியாக போட்டு ஆவணங்கள் தயாரித்து, தேவராஜன் என்பவருக்கு 19 கோடி ரூபாய்க்கு விலை பேசி ஒப்பந்தம் போட்டுள்ளார். தேவராஜனிடம் அதற்கு முன் பணமாக 5 கோடி ரூபாய் கோவிந்தன் வாங்கி உள்ளார்.
ஆனால், கூறியபடி கோவிந்தனா இடத்தை பதிவு செய்து தர வில்லை. மேலும் தேவராஜன் பணத்தை கேட்டபோது தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜன் இது தொடர்பாக திருச்சி மாநகர குற்ற பிரிவு -2ல் புகார் அளித்தார். அதன் பேரில் மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி கோவிந்தனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.