நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்வதாக மத்திய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.


கடந்த 2023ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளின் விவரங்களை மத்திய குற்ற ஆவணக் காப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடைபெறும் இடமாக தலைநகர் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. டெல்லியை பொறுத்தவரை 75 லட்சம் பெண்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 2023ஆம் ஆண்டில் 13,439 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சம் பெண்களில் 133.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 23,678 வழக்குகளுடன் தெலுங்கானா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரு லட்சம் பெண்களில் 124.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது இடம் பிடித்துள்ள ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 46,450 வழக்குகளும், 26,000க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் ஒடிசா நான்காவது இடத்திலும், ஹரியானா 5ஆவது இடத்திலும் உள்ளன.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதங்கள் மிகக் குறைவாக உள்ள மாநிலங்களில், தமிழ்நாடு மீண்டும் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது. மத்திய குற்ற ஆவணக் காப்பகம் 2023 தரவுகளின்படி, தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான 8,943 குற்றங்கள் பதிவாகியுள்ளன, இது கடந்த 2022ஆம் ஆண்டில் 9,207 வழக்குகளில் இருந்து 3 சதவீதம் குறைவு ஆகும். தமிழகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன. இந்த சூழலில் மத்திய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


