Homeசெய்திகள்தமிழ்நாடுசீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா

சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா

-

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை 9:40 மணியளவில் இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஏர் லங்கா விமானத்தில் 70 பயணிகள் வந்தனர். அவர்களுள், சீனாவில் இருந்து இலங்கை மூலம் மதுரை வந்த பயணிகளிடம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 6 வயது மகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவரது கணவர் சுப்பிரமணியம் சீனாவில் வேலை செய்து வந்துள்ளார். அவருடன் மனைவி மற்றும் மகள் தங்கியிருந்துள்ளனர். வேலையை முன்னிட்டு சுப்பிரமணியம் ஜெர்மனி சென்ற நிலையில், மனைவி மற்றும் மகள் தமிழகம் திரும்பியுள்ளனர். தொடர்ந்து, இருவருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களது ஊரான இளந்தைகுளம் கிராமத்தில் அவர்களது வீட்டில் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலந்தைகுளம் கிராமத்தில் சிவகாசி துணை இயக்குனர் கழுசிவலிங்கம் தலைமையில் மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் வேறு ஏதும் தொந்தரவு இருக்கிறதா என்று விசாரணை நடத்திய நிலையில் கொரோனா பாதித்தவர்களின் உறவினர்களிடமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் சிவகாசி துணை இயக்குனர் கழுசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களுக்கு உருமாறிய பிஎஃப்7 கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய தாய் மற்றும் மகளின் பரிசோதனை மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

MUST READ