விழுப்புரத்தில் கிணறு வெட்டும் பணியின் போது கயிறு அறுந்து விபத்து ஏற்பட்டதில் 3 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கண்ணன். இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள பெருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம் (48) , நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் ( 40) ,உளுந்தூர்பேட்டை வட்டம், நெய்வணை கிராமத்தைச் சேர்ந்த முருகன் (38) ஆகியோர் திங்கள்கிழமை இரவு பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கிணற்றை ஆழ்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொக்லைன் இயந்திரத்தில் கட்டப்பட்டிருந்த ரோப் அறுந்து கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதில், தணிகாசலம், ஹரிகிருஷ்ணன், முருகன் ஆகிய மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு கிணற்றுக்குள்ளேயே பலியாகினர்.
திருவெண்ணெய்நல்லூர் போலீசார் தகவலறிந்து நிகழ்விடம் சென்று 3 பேர்களின் சடலங்களையும் கைப்பற்றி, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தின் உரிமையாளர் கண்ணனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.