20 வயது இளைஞரின் வயிற்றில் இருந்த 5 ரேஸர் பிளேடுகள், 13 ஹேர் பின்கள், 5 ஊக்குகள்
புதுச்சேரியில் 20 வயது இளைஞரின் வயிற்றில் இருந்த 5-ரேஸர் பிளேடுகள், 13-ஹேர் பின்கள் மற்றும் 5 ஊக்குகளை வெற்றிகரமாக அகற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் கடந்த சில வாரங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சிறுவயதிலிருந்தே மனநல நோயால் பாதிக்கப்பட்டிருந்த இந்த இளைஞர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜெம் மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் குழு, வயிற்றில் ஹேர் பின்கள் மற்றும் ஊக்குகள் மற்றும் ரேஸர் பிளேடுகள், இருப்பதை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து எண்டோஸ்கோப்பிக் மூலம் அகற்ற முடிவு செய்த மருத்துவர்கள் இளைஞரின் வயிற்றில் இருந்த 13 ஹேர் பின்கள், 5 ஊக்குகள் மற்றும் 5 ரேஸர் பிளேடுகள் உட்பட அனைத்து இரும்பு பொருட்களும் அகற்றினர். தற்போது சிகிச்சை முடிந்து இளைஞர் வழக்கமான உணவை எடுக்கத் தொடங்கி நலமுடன் உள்ளார்.
இது குறித்து ஜெம் மருத்துவமனையின் காஸ்ட்ரோ என்டரோலஜிஸ்ட் அறுவைசிகிச்சை மருத்துவர் சசிகுமார் கூறுகையில், “நோயாளியை மதிப்பீடு செய்த பிறகு, அவரது வயிற்றில் சில இரும்பு பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தோம். அவர் சிறுவயதிலிருந்தே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது வயிற்றில் இருந்த அனைத்து பொருட்களும் அகற்றப்பட்டு அந்த இளைஞர் நலமுடன் இருக்கிறார்” என்றார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து இருப்பதாக தெரிவித்த அவர், அவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.