தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் பாஜகவும், தமிழ்நாட்டில் அதிமுகவும் தலைமை வகிக்கிறது என்றும், கூட்டணி பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றதாக கூறப்படும் தகவல்கள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளாா்.
சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியின் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றதாக கூறப்படும் தகவல்களை மறுத்துள்ளாா். இதுவரை எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை என்றும், டெல்லியில் எந்த அதிகாரப்பூர்வ ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளாா். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் டெல்லி சென்றதற்கான காரணம் தமக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

ஒன்றிய ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் அடுத்த நாள் சென்னை வர உள்ளதாகவும், அப்போது கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவித்தார். மாநிலத் தலைவரான தன்னுடைய முன்னிலையில் தான் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், அதிமுக தலைமையகத்தில் சந்திப்பு நடத்துவதிலும் தவறில்லை எனவும் கூறினார்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் பாஜகவும், தமிழ்நாட்டளவில் அதிமுகவும் தலைமை வகிக்கிறது என்றாா். இதேவேலை, தமிழ்நாட்டில் இன்னும் மொழியை பற்றி பேசிக் கொண்டிருக்காமல் தமிழ்நாட்டு மக்களுக்கான நன்மைகளை முதலமைச்சர் செய்ய வேண்டும் என்று முதலமைச்சருக்கு அறிவுறுத்தினாா். தமிழ்நாட்டில் பல மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். அவர்களை புறக்கணிக்கும் போக்கு இருக்கக் கூடாது என்றும் கூறினார்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் பரவல் குறித்து கவலை வெளியிட்ட அவர், இவ்விவகாரங்களில் அரசு தேவையான கவனம் செலுத்தவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்தத் தொகுதியிலும் போட்டிடாமலே தேர்தலை சந்திக்கட்டும் என்றார்.
