2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு கூடுதல் துணை ராணுவப் படைகளை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தலை எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகத்திற்கு கூடுதல் துணை ராணுவப் படைகளை ஒதுக்கியுள்ளது.

ஏற்கனவே முதற்கட்டமாக 50 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் 10-ம் தேதி தமிழகம் வந்தடைந்தனர். தற்போது கூடுதலாக 250 கம்பெனிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 300 கம்பெனிகள் (தோராயமாக 30,000 வீரர்கள்) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த கூடுதல் படைகள் வரும் ஏப்ரல் 6 மற்றும் ஏப்ரல் 13 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தமிழகம் வர உள்ளனர்.
இவர்கள் பதற்றமான வாக்குச் சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் முக்கிய நகரங்களில் கொடி அணிவகுப்பு (Flag March) நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்பு:
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையிலான குழுவினர், பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த ஏற்கனவே 4,200-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகளை அமைத்துள்ளனர். துணை ராணுவத்தினர் வருகைக்குப் பின், வாகன சோதனைகள் மற்றும் ரோந்துப் பணிகள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
”மக்களாட்சி கடமையை மக்கள் அச்சமின்றி ஆற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு
