உறியடிக்கும் நிகழ்வின் போது மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் பலி
பரமக்குடி அருகே மேலாய்க்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற உறியடிக்கும் நிகழ்வின் போது மின்சாரம் தாக்கி ஏழு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலாய்க்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உறியடிப்பதற்காக மூன்று கம்பிகள் கட்டப்பட்டு, அதில் பானை தொங்கவிடப்பட்டுள்ளது. பானையை உடைத்த பின்பு பானையில் இருந்த பணத்தை எடுக்க அருகில் இருந்த சிறுவர்கள் ஓடிச் சென்றுள்ளனர். அப்போது பானை தொங்குவதற்காக கட்டப்பட்டிருந்த கம்பிகளில் ஒரு கம்பி திடீரென சாய்ந்து அருகில் இருந்த மின்கம்பிகள் மீது உரசி உள்ளது. அப்போது அந்த கம்பியை தொட்டதில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் முருகன் கபினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இவரது சகோதரர் கோகுல ராகுல் காயமடைந்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த மேலும் 4 நபர்களுக்கு மின்சாரம் தாக்கி உள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடிக்கும் நிகழ்வின் போது மின்சாரம் தாக்கியதில் 7 வயது சிறுவன் உயிர் இழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து எமனேஸ்வரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.