கோவையில் தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய வழக்கியல் பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை, அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிங்காய் சூர்யா என்பவர் பிக் டாடி என்ற நிகழ்வு மற்றும் விருந்து நிகழ்ச்சியை கடந்த 20ஆம் தேதி அன்று நடத்தினார். இதில் கலந்து கொண்ட பா.ஜ.க ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரகு சூர்யா, உதய தீபன், சூரியகுமார், அபிஷேக் மற்றும் அவர்களது நண்பர்கள் மது போதையில் நடனமாடும்போது அருகில் உள்ள நபர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் நிகழ்ச்சியை நடத்திய சூர்யா மற்றும் அவரது நண்பர்கள், அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிக் டாடி நிறுவனத்தினர் பீளமேடு பகுதியில் உள்ள விஜய் எலன்சா நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தனர். அதனை இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்த பாஜக நிர்வாகி ரகு சூர்யா உள்ளிட்டோர் ஹோட்டலுக்கு வெளியே காத்து இருந்தனர். சூர்யா, தேவராஜ் ஆகியோர் வெளியே வந்தபோது அவர்கள் மீது, பாஜக நிர்வாகி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கத்தி, பாட்டில்கள் மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், அவர்கள் பயணித்த காரையும் உடைத்து சேதப்படுத்தினர். இதில் சூர்யா, தேவராஜின் கைகள் மற்றும் தோள்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் சம்பவம் குறித்து சிங்காய் சூர்யா மற்றும் தேவராஜ் அளித்த புகாரின் பேரில் பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பா.ஜ.க ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரகு சூர்யா, ரிச்சர்ட், ஸ்ரீமன் தீபக் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். மேலும் தாக்குதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கத்திகள் மற்றும் 2 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


