Homeசெய்திகள்தமிழ்நாடுஅருள்வாக்கு கேட்க சென்ற பெண்ணிடம் பணம் பறித்த போலி சாமியார்

அருள்வாக்கு கேட்க சென்ற பெண்ணிடம் பணம் பறித்த போலி சாமியார்

-

அருள் வாக்கு கேட்க சென்ற பெண்ணிடம் பங்குச்சந்தையில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பணம் பறித்த சாமியார்.பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புவேன் என மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சத்யா என்ற பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார்.சத்யா தனது கணவன் மற்றும் மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், தனது கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் யூடியூபில் மாந்திரீகம் தொடர்பான வீடியோக்களை பார்த்துள்ளார்.

போலி சாமியார் அர்ஜுன் கிருஷ்ணன்

அப்போது கேரள மாந்திரீகம் என்ற யூடியூப் சேனலில் பல்லடம் அருகே பணிக்கம்பட்டியில் உள்ள அர்ஜுன் கிருஷ்ணன் என்ற சாமியாரின் வீடியோக்களை பார்த்துள்ளார்.அதனை தொடர்ந்து அர்ஜுன் கிருஷ்ணனின் வராகி அம்மன் கோவிலுக்கு சென்று மாந்திரீக முறையில் தனது கணவன் மற்றும் மகனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

அதற்கு பரிகாரங்கள் செய்ய முன் பணமாக பத்தாயிரம் ரூபாய் கட்டுமாறு அர்ஜுன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பணத்தை கட்டிய பின்,சிறிது நாட்கள் கழித்து பரிகாரம் செய்வதற்கு அதிக செலவாகும் எனவும் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் பரிகார பூஜைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் சாமியார் அர்ஜுன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கணவனுடன் சேர வேண்டும் என்ற ஆசையில் தனது சக ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை சாமியாரிடம் சத்யா கொடுத்துள்ளார். பணத்தை கொடுத்தும் சாமியார் எந்த பூஜைகளையும் செய்யாமல்  தாமதித்து வந்த நிலையில் பணத்தை திருப்பித் தருமாறு சத்யா கேட்டுள்ளார்.

பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து அதனை இரட்டிப்பாக்கி தருவதாக சாமியார் கூறிய நிலையில் நீண்ட நாட்களாக பணம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.இன்னிலையில் தனது வீட்டிற்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு சாமியார் கூறியதை அடுத்து வீட்டுக்கு சென்ற சத்யாவை கட்டாயப்படுத்தி வீட்டு கதவுகளை மூடிவிட்டு சத்யாவின் ஆடைகளை அகற்றி வீடியோ எடுத்ததாகவும்  அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதேபோன்று இரண்டு மூன்று முறை வீட்டுக்கு வரவழைத்து தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், ஒப்புக் கொள்ளாவிட்டால் வீடியோவை YOU TUBE சேனலில் வெளியிடுவேன் என்று சாமியார் மிரட்டியதாகவும், பாதிக்கப்பட்ட சத்யா திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் தன்னைப் போன்று 50க்கும் மேற்பட்டோர் சாமியார் அர்ஜுன் கிருஷ்ணனால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். சாமியார் தலைமுறைவாகி உள்ளார் எனவும் , இதனால் தனது குடும்பத்தில் அவமானப்படும் நிலையில் உள்ளதால் தன் பணத்தை திரும்ப தராவிட்டால் சாமியாரின் கோயில் முன்பு தீக்குளித்து உயிரை விடுவதை விட வேறு வழியில்லை என கூறியுள்ளார்.

மேலும் தனது பணத்தை மீட்டுத் தருமாறும் மற்றும் சாமியாரின் மொபைல் போனில் உள்ள தனது அந்தரங்க வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும், தன்னைப் போன்று மாந்திரீகத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என பாதிக்கப்பட்ட பெண் சத்யா கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சாமியாரின் கோவில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டு உள்ளதாக அறியப்படுகிறது. மேலும் போலி சாமியார் அர்ஜுன் கிருஷ்ணன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ