தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், தொழில்துறை, இயற்கை வளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, தவெக சட்டமன்ற உறுப்பினர் மதார் பதூருதீன் முஸ்தபா பேசிய கருத்துகளால் பேரவையில் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
தவெக எம்.எல்.ஏ மதார் பதூருதீன் முஸ்தபா பேச்சு
மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய மதுரை மத்தியத் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ மதார் பதூருதீன் முஸ்தபா, “தமிழக வெற்றி கழகம் தொடங்கப்படும் போது இந்தியா முழுவதும் என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ பிரச்சனைகள் எழுந்தன. அன்றைக்குத் தமிழ்நாட்டிலிருந்து முதலமைச்சர் அதற்கு எதிராகக் குரல் கொடுத்து இஸ்லாமிய மக்களின் பாதுகாவலராக இருந்தார்.

அதேபோல வக்ஃபு வாரியத்திற்கு எதிரான சட்டம் வந்தபோது கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடி இஸ்லாமிய மக்களைப் பாதுகாப்பார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். கடந்த காலத்தில் தங்களை இஸ்லாமியர்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொண்ட திமுகவினர், சட்டமன்றத்திலேயே இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகள் என்று ஐந்து முறை பேசியிருக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.
திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு – அவையில் அமளி
தவெக எம்.எல்.ஏ மதார் பதூருதீன் முஸ்தபா இவ்வாறு கூறியதும், அதிர்ச்சியடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாகத் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தவெக உறுப்பினருக்கு எதிராகக் குரல் எழுப்பிக் கூச்சலிட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
“ஆதாரத்துடன் தான் சொல்கிறேன்!” – எம்.எல்.ஏ உறுதியான பதில்
திமுக உறுப்பினர்களின் எதிர்ப்பிற்கு இடையே தொடர்ந்து பேசிய மதார் பதூருதீன் முஸ்தபா, “நான் பத்திரிகைகளில் வரக்கூடிய செய்திகளையோ அல்லது உண்மைக்குக் புறம்பான விஷயங்களையோ இங்குப் பேசவில்லை. முழுமையான ஆதாரத்துடன் தான் சொல்கிறேன். இந்த விவகாரத்தில் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன், நசுக்கப்பட்டிருக்கிறேன், கஷ்டப்பட்டிருக்கிறேன்” என்று உறுதியுடன் கூறினார். தவெக சட்டமன்ற உறுப்பினரின் இந்த நேரடி குற்றச்சாட்டாலும், திமுக உறுப்பினர்களின் தொடர் எதிர்ப்பாலும் சட்டமன்றப் பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
பரந்தூர் திட்டம் ரத்து & புதிய இடம்: மக்களின் இசைவோடு செயல்படுத்த திருமாவளவன் வலியுறுத்தல்!
