பெரம்பலூர் அருகே பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாநிலத் தலைவர் வீடு மற்றும் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே திருமாந்துறை கை காட்டி பகுதியில் வசித்து வருபவர் பா.ஜ.க-வின் பட்டியல் அணி மாநிலத்தலைவர் தடாபெரியசாமி. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை பகுதியிலுள்ள சுங்கச்சாவடியின் கீழ்புறம் நோவா நகரில் உள்ளது இவரது வீடு. இந்நிலையில் நேற்றிரவு காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கிச் சென்று நோவா நகரிலுள்ள தடா பெரியசாமி வீட்டு முன் நின்ற இனோவா காரையும், இரண்டு இருசக்கர வாகனங்களையும் கல்வீசியும் கட்டைகளாலும் தாக்கி அடித்து நொறுக்கியதுடன் வீச்சரிவாளால் கார் சக்கரத்தின் டயர்களையும் குத்தி கிழித்தது. மேலும் அவரது வீட்டின் மேல் மாடியிலுள்ள படுக்கை அறை ஜன்னல் கண்ணாடியை கல்வீசி தாக்கிய கும்பல் மாடியில் நின்ற பெரியசாமியின் மகன் மீது கட்டையை வீசி தாக்கமுற்பட்டதாக தெரிகிறது.

இச்சம்பவத்தின்போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் எழுந்து வரவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இது குறித்து தடாபெரியசாமி மங்களமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குபதிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
நேற்று இரவு வீட்டை உட்புறம் பூட்டிவிட்டு குடும்பத்தார் அனைவருடனும் உறங்க சென்ற நிலையில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்த தடா பெரியசாமி வெளியில் வந்திருந்தால் கொலை செய்திருப்பார்கள் என்று அச்சத்துடன் தெரிவித்தார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் திருவாரூர் பகுதியில் நடந்த மோதல் சம்பவத்தில் வி.சி.க தொண்டர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பேசிய திருமாவளவன் பாரத பிரதமரையும், தன்னையும் தரக்குறைவாக பேசியதால் தனக்கும் அவருக்குமிடையே விரோதம் ஏற்பட்டதின் எதிரொலியாக தான் இச்சம்பவம் நடந்துள்ளது என்றும் மர்மநபர்கள் வந்த கார் பாண்டிச்சேரி பதிவெண் கொண்டது என்பதால் கடலூர் மாவட்டத்திலிருந்து திருமாவளவன் ஆதரவாளர்கள் வந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் குற்றம் சாட்டினார் .
இதனிடையே தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீஸார் ஆய்வு மேற்கொண்டு தப்பியோடிய மர்மகும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
