நெல்லை அருகே தோட்டத்தில் வெண்டைக்காய் பறிக்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.`
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள தெற்கு கும்பிலாம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பாஜகவின் நெல்லை தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், செல்வகுமார் தனது தோட்டத்தில் காய்கறிகளை பயிரிட்டு சந்தையில் விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் தோட்டத்தில் விளைந்த வெண்டைக்காய் பறிக்கும் வேலைக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலரை செல்வகுமார் வேலைக்கு அழைத்துள்ளார். அதன் பேரில், அந்த பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவர் சமீபத்தில் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, செல்வகுமார் அவரை தனியே அழைத்து பாலியல் தொல்லை அளிக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு தப்பியோடினார்.
இதுகுறித்து சரஸ்வதி ராதாபுரம் காவல் நியைத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ராதாபுரம் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாஜக நிர்வாகி செல்வகுமாரை தேடி வருகின்றனர்.