என்எல்சி நிறுவனத்திற்கு திமுக துணை நிற்கிறது- எடப்பாடி பழனிசாமி
விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவன முயற்சிக்கு திமுக அரசு துணை நிற்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்.எல்.சி. நிறுவனம் தனது 2-ம் சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சியில் இருந்தவரை விவசாயிகளின் நியாயமான கோரிக்கையினை என்.எல்.சி. ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, மக்கள் விரோத விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு விவசாயிகளையும், அப்பகுதி மக்களையும் இந்த அரசு கைவிட்டு விட்டு, என்.எல்.சி-யின் நில எடுப்புக்கு காவலர்களின் உதவியுடன் துணை நிற்கிறது.
விளைநிலத்தில் நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டும் என்எல்சியின் போக்கு கண்டிக்கத்தக்கது. காவல்துறை துணையுடன் மக்களை முடக்கி அவர்களை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது என்எல்சி. நிலம் அளித்தவர்களுக்கு நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை என்எல்சி நிறைவேற்றவில்லை. முழு இழப்பீடு வழங்காத நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயிகளின் கோரிக்கையான மறு சீரமைப்பு, மற்றும் மறுகுடி அமர்வு, சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு, வீட்டிற்கு ஒருவர் நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை ஆகியவற்றிற்கு நிரந்தரமான முடிவை எடுத்துவிட்டு நில எடுப்பில் இறங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.