ஈஷா யோகா மையத்தில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வழக்குகளின் நிலை குறித்து பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வாஞ்சிநாதன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ” கடந்தாண்டு அக்டோபர் 18ஆம் தேதி நாளிதழில், ஈஷா யோகா மையத்தில் நடந்த குற்றங்கள் குறித்த நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் கோவை மாவட்ட காவல்துறையினர் தாக்கல் செய்த அறிக்கை தொடர்பான செய்தி வெளியாகியது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஈஷா யோக மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் அதற்கான மனு ரசீதும் வழங்கப்படவில்லை, நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
லலிதா குமாரி- உத்தரப்பிரதேச அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக தகவல் தெரிந்த நபர் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் அதன் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே எனது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவும், தமிழக காவல்துறை தலைவர் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து ஈஷா யோக மையத்தில் நடைபெற்று வரும் பாலியல் குற்றங்கள் விதிமீறல்கள் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க குறிப்பிட்ட காலத்தில் நிர்ணயம் செய்தும் உத்தரவிட வேண்டும்” கூறியிருந்தார்.
நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ” மனுதாரர் ஜனவரி மாதம் புகார் அளித்துள்ளார். இந்த வழக்குகளை பொருத்தவரை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வழக்கு பதிவு செய்யவே இவ்வளவு காலதாமதம் ஆகிறது” என வாதிட்டார்.
காவல்துறை தரப்பில், ” 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்திற்காக தற்போது புகார் அளிக்கப்படுகிறது. ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. மனுதாரர் மதுரையில் புகார் அளித்தால் அடிப்படையில் மதுரையில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, வழக்குகளின் நிலை குறித்து தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
நான் சொன்ன தம்பி ஞானசேகரன் இவர்தான் – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!