spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅமுல் நிறுவனத்திடம் ஆவின் வீழ்ந்து விடக்கூடாது- அன்புமணி ராமதாஸ்

அமுல் நிறுவனத்திடம் ஆவின் வீழ்ந்து விடக்கூடாது- அன்புமணி ராமதாஸ்

-

- Advertisement -

அமுல் நிறுவனத்திடம் ஆவின் வீழ்ந்து விடக்கூடாது- அன்புமணி ராமதாஸ்

அமுல் நிறுவனத்திடம் ஆவின் வீழ்ந்து விடக்கூடாது, போட்டியை சமாளிக்க கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Anbumani Ramadoss

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “ குஜராத் மாநில அரசின் பொதுத்துறை பால் நிறுவனமான அமுல் தமிழ்நாட்டில் பால் கொள்முதலை தீவிரப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. காஞ்சிபுரம், திருவள்ளுர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தினமும் 30 ஆயிரம் லிட்டர் பாலை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து அதற்காக சுய உதவிக் குழுக்களை உருவாக்கி வருகிறது. ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.32 முதல் ரூ.34 வரை மட்டுமே விலை வழங்கப்படும் நிலையில், அமுல் நிறுவனம் லிட்டருக்கு ரூ.36 வரை விலை வழங்குகிறது. இதனால் ஆவின் கொள்முதல் செய்யும் பாலின் அளவு வெகுவாக குறையும் நிலை உருவாகும்.

we-r-hiring

தமிழ்நாட்டில் சந்தை பங்கை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள அமுல் நிறுவனம், அதற்காக சென்னைக்கு மிக அருகில் உள்ள ஆந்திராவின் ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமுல் பால் பதப்படுத்தும் ஆலையை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் பால் கொள்முதல் செய்ய அமுல் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. அமுல் நிறுவனத்தின் இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால், கொள்முதலிலும், விற்பனையிலும் ஆவின் நிறுவனம் பெரும் பங்கை இழக்க நேரிடும்; அமுல் நிறுவனத்திடம் ஆவின் நிறுவனம் ஒருபோதும் வீழ்ந்து விடக் கூடாது.

aavin

தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கு வெறும் 16% மட்டுமே. இதை 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் திறன் இப்போது 40 லட்சம் லிட்டராக உள்ளது. இதை 70 லட்சம் லிட்டராக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக பால்வளத்துறையின் புதிய அமைச்சர் அறிவித்திருக்கிறார். ஆவின் நிறுவனத்தின் சந்தைப் பங்கை 50% ஆக அதிகரிக்க இது போதுமானதல்ல. ஆனால், அமுல் நிறுவனத்தின் அதிரடி நுழைவால் இருக்கும் சந்தைப் பங்கையும் அமுலிடம் ஆவின் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இதை தடுப்பதற்கான திட்டங்களை வகுத்து தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டின் பால் விற்பனைச் சந்தையில் ஆவின் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கொள்முதல் வீழ்ச்சியைத் தடுக்க வேண்டியது தான் தலையாயக் கடமை ஆகும். அதற்கான ஒரே தீர்வு பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தான். எனவே, பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42 , எருமைப்பாலுக்கு ரூ.51 என்ற விலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அத்துடன் கொள்முதல் மையங்களை அதிகரிக்கவும், கொள்முதல் நடைமுறைகளை எளிதாக்கவும் ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ