உதயநிதி ஸ்டாலினுக்கு Geometry, Trigonometry தெரியுமா?- அண்ணாமலை
திமுக அரசுக்கும் ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கும் தொடர்பிருக்கிறதா? என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பாஜகவும், அதிமுகவும் அவரவர் கட்சி வளரவேண்டும் என நினைக்கும்போது, கூட்டணிக்குள் சில சிராய்ப்புகள் வருவது சகஜம்தான். பாஜக தலைவர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட கருத்து மோதல் எதுவும் கிடையாது. அதேபோல் கூட்டணியில் கூச்சலோ, குழப்பமோ இல்லை. கூட்டணியை பொறுத்தவரை பாராளுமன்ற குழு தான் முடிவெடுக்கும். பாஜகவுக்கு எந்த கட்சியின் மீதும் கோபம் இல்லை. கட்சியை வலுப்படுத்துவது, தமிழக மக்களின் அன்பை பெறுவது, ஆளும் கட்சியாக மாறுவது என்பதுதான் பாஜகவின் குறிக்கோள்.
உதயநிதி ஸ்டாலினை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவரோடு தகுதி என்ன? படிப்பு என்ன? அவர் திறமைக்கா மக்கள் வாக்களித்தனர்? சேப்பாக்கம் தொகுதியில் யாரை நிறுத்தினாலும் அங்கு மக்கள் திமுகவுக்கு வாக்களிப்பர். நீட் தேர்வில் உள்ள ஒரு கணக்கை அவரால் போடமுடியுமா? Geometry, Trigonometry எல்லாம் தெரியுமா? நீட் தேர்வு பற்றி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதியே இல்லை. திமுக அரசுக்கும் ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கும் தொடர்பிருக்கிறதா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.கிளிப்பிள்ளைக்கு சொல்வதை போல் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவில் உள்ள தவறுகளை ஆளுநர் சுட்டிக்காட்டியும், அதனை திருத்தாமல் அப்படியே மீண்டும் ஆளுநருக்கு அனுப்புவது கண்டிக்கதக்கது” எனக் கூறினார்.