சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாஜக ஆதரவு தெரிவிக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


அரசுப் பள்ளிகளில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களைவிட அதன்பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.3,170 குறைவு. இந்த ஊதிய முரண்பாட்டை சரி செய்வோம் என திமுக 311-வது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் தங்கள் கோரிக்கை நிறைவேறாததால், சென்னை அன்பழகன் கல்வி வளாகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இன்று கல்வி அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால் ஆசிரியர்களின் உண்ணாவிரதம் நான்காவது நாளாக தொடர்கிறது.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டரில், “ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க திறனற்ற திமுக அரசு மறுக்கிறது. போராட்டம் தொடங்கி மூன்று நாட்கள் கடந்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் இடைநிலை ஆசிரியர்களை சந்திக்காமல் இருப்பது இந்த திறனற்ற திமுக அரசுடைய மெத்தனப் போக்கின் வெளிப்பாடு. பாஜக மாநில துணைத் தலைவ் அர்கள் துரைசாமி, நாராயணன் திருப்பதி மற்றும் மாநில செயலாளர் ஆகியோர் இன்று இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
