விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிப்பதில் தகராறு- இளைஞர் கொலை
செங்கல்பட்டு அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 18 ஆம் தேதி இரவு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பொத்தேரி விநாயகர் கோயில் தெருவில் வசிக்கும் ஹேமநாதன் என்பவரது வீட்டின் முன், அங்குள்ள இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்தனர். தனது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை ஆகவே சிறிதுதூரம் தள்ளி சென்று பட்டாசு வெடிக்குமாறு இளைஞர்களிடம் ஹேமநாதன் கூறியுள்ளார்.

இதனால் இளைஞர்களுக்கும் ஹேமநாதனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதனை நேரில் கண்ட அவரது உறவினர் கார்த்திக் வயது(24) என்பவர் அந்த இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள், கார்த்திக்கை கொடூரமாக தாக்கியதில், ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அங்கிருந்தவர்கள் மீட்டு, கார்த்திக்கை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.