ஓசூர் அருகே ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற கார் 25 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஒரு காரில் நான்கு பேர் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை வழியாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற கார் ஓசூர் அடுத்த அஞ்செட்டி காட்டுப்பகுதியில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி ஆழ பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் சென்ற நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று அஞ்செட்டி போலீசார் நான்கு பேரையும் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் நான்கு பேரும் பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து பள்ளத்தில் விழுந்து கிடந்த காரை கிரேன் வாகனம் உதவியுடன் போலீசார் மீட்டனர்.
அஞ்செட்டி காட்டு பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே காட்டுப்பகுதியில் உள்ள தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை அகலப்படுத்தி கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
