காவிரி நதிநீர் உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சையில் காவிரி விவகாரத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,
இரட்டைக் குழல் துப்பாக்கி திமுக – திக கூட்டணி
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திமுகவும் திராவிடர் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல இணைந்து செயலாற்றி வருகின்றன. காவிரி உரிமையைப் மீட்டெடுக்கத் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மேகதாது அணையைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை தேவை
நாம் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை; நம்முடைய சட்டப்பூர்வ உரிமையை மட்டுமே கேட்கிறோம். எனவே, முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும். இக்கூட்டத்தில் காவிரி நதிநீர் உரிமை குறித்தும், கர்நாடகா மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்க வேண்டியது அவசியமாகும்.
சட்டத்தை மதிக்காத கர்நாடகா
கர்நாடக மாநிலத்தில் காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து கர்நாடகா நமக்குத் தண்ணீர் வழங்கவில்லை. தற்போது அங்கு பெய்து வரும் கனமழையின் காரணமாகவே தமிழகத்திற்குத் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நாம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மட்டுமே அமல்படுத்தக் கோருகிறோம்.
நீட் தேர்வுக்கு எதிராகப் பேரணி
மத்தியில் உள்ள ஆட்சி ஜனநாயக முறையில் செயல்படாமல் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளோம்; விரைவில் பேரணிக்கான அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளாா்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு!
