சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து இருக்கிறது.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த ஆண்டுதான். விழாக்காலமான அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் தங்க விற்பனை அதிகரித்ததும் ஆர்பிஐ கொள்முதலில் இறங்கியதுமே தங்கத்தின் தேவை அதிகரித்ததற்கு காரணம் என தெரிகிறது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 320 அதிகரித்து ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.5,290-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 71.80 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 71,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பட்ஜெட் எதிரொலியாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தங்கம், வெள்ளி, வைரம் மீதான சுங்கவரியை உயர்த்தி ஒன்றிய பட்ஜெட்டில் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் தங்கம் சவரன் 43 ஆயிரத்தை நெருங்குகிறது. ஆனால் சென்னையில் கடந்த ஒரு வாரமாக குறைந்திருந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
