தமிழகச் சட்டமன்றத்தில் மறைந்த தலைவர் முரசொலி மாறன், மிசா சட்டம் மற்றும் சர்க்காரியா கமிஷன் குறித்தும், தற்போதைய ஆட்சி நிர்வாகம் குறித்தும் முதல்வர் விஜய் முன்வைத்த விமர்சனங்களுக்கு, திமுக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மிகக் கடுமையான கண்டனத்தையும் காரசாரமான பதிலடியையும் பதிவு செய்துள்ளார்.
“வருமான வரி வழக்கு இருந்தபோது விஜய்க்குப் பிரதமர் மேடையில் மரியாதை பெற்றுத் தந்தது முரசொலி மாறன் குடும்பம்தான்!”

ஊழல் குறித்தோ அல்லது மிசா சட்டம் குறித்தோ பேசுவதற்கு முதல்வர் விஜய்க்கு எந்தவிதமான அருகதையும் இல்லை என்று சாடியுள்ள தயாநிதி மாறன், கடந்த காலத்தில் நடந்த முக்கியச் சம்பவம் ஒன்றைச் சுட்டிக்காட்டி பகிரங்கக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
“விஜய்க்குப் பிரதமர் மேடையில் மரியாதை பெற்றுத் தந்தது யார்?”
தயாநிதி மாறன் எம்.பி. இது தொடர்பாக வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, “முரசொலி மாறனின் மகனான எனது அன்பான அழைப்பை ஏற்று, கடந்த 2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் பொங்கல் சிறப்புத் தபால் தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்தச் சமயத்தில், நடிகர் விஜய் மீது வருமான வரி வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தைக் காட்டி, அவரைப் பிரதமர் பங்கேற்கும் மேடையில் ஏற்றக் கூடாது என அன்றைய மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்.
ஆனால், அந்த ஆட்சேபனையைத் தகர்த்து, விஜய்யைப் பிரதமர் மேடையில் நிற்க வைத்து, தபால் தலையைப் பெற்றுக்கொள்வதற்கான உரிய மரியாதையை வாதாடிப் பெற்றுத் தந்தது இதே முரசொலி மாறனின் மகனான நான் தான் என்பது விஜய்க்கு இப்போது நினைவிருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் பழைய கதைகள்”
தொடர்ந்து மாநிலத்தில் நிலவும் சட்டஒழுங்கு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய தயாநிதி மாறன், “சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேட்ட நேரடி கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை என்றால், இப்படித்தான் ஆகஸ்ட் 2026-இல் நடைபெற்ற கொலைகள் மற்றும் சட்டஒழுங்கு பிரச்சனைகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், எமர்ஜென்சி காலத்தில் அமைக்கப்பட்ட பழைய சர்க்காரியா ஆணைய அறிக்கையில் போய் பதில் தேட வேண்டியிருக்கும்.

சொந்த மாநிலத்தில் உள்ள உள்ளூர் பத்திரிகையாளர்களை நேருக்கு நேராகச் சந்தித்து முறையான பேட்டி அளிக்கவே அஞ்சி நடுங்கும் ஒரு முதலமைச்சர், மறைந்த மூத்த தலைவர் முரசொலி மாறனைப் பற்றிப் பேசலாமா? முதலில் ஊழலைப் பற்றியோ அல்லது எமர்ஜென்சி கால மிசா சட்டத்தைப் பற்றியோ பேசுவதற்கு இந்த முதலமைச்சருக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா?” எனத் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், தயாநிதி மாறன் எம்.பி.யின் இந்த அதிரடி அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் சூட்டையும் கிளப்பியுள்ளது.
