ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை முகமது தஹிர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி, தனது குழந்தைக்கு உடல்நலக்குறைவு என ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு செவிலியர்கள் டிரிப்ஸ் போட்டுள்ளனர். இதனையடுத்து ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிய நிலையில், அந்த கையே அகற்றப்பட்டது. செவிலியர்களின் அலட்சியத்தால், குழந்தையின் கை அழுகியதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வலது கை அகற்றப்பட்டு சுமார் ஒரு மாதமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை முகமது தஹிர் உயிரிழந்தான். குழந்தை உயிரிழப்புக்கு எழும்பூர் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.