கார் மோதி 3 மாணவர்கள் பலி – முதல்வர் ஸ்டாலின் நிவாரணம்..
வாணியம்பாடி அருகே கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் , சாலையை கடக்க முயன்றபோது 2 சைக்கிள்களில் வந்த 3 மாணவர்கள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.கஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில், “திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வளையாம்பட்டு கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிரிசமுத்திரம் அரசுப் பள்ளிக்கு இன்று காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்த வளையாம்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த ரபிக், த/பெ.சாமுவேல் (வயது 13), விஜய், த/பெ.ராஜி (வயது12), மற்றும் சூர்யா, த/பெ.ராஜி (வயது 10) ஆகிய மூன்று மாணவர்கள் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி மூவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடைய நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.


