விடுதலைப் போராட்ட வீரர் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் வரலாற்றை ஆய்வு செய்ய தனியாக ஒரு ஆராய்ச்சி அமைப்பை உருவாக்கி, அதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலைப்போரட்ட வீரர் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் 224 வது நினைவு நாளை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அவருடைய முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இந்திய அளவில் போற்றக்கூடிய மாவீரர்களில் ஒருவர்தான் கோபால் நாயக்கர். 1857 ஆம் ஆண்டுநடைபெற்ற போராட்டத்தை முதலாம் சுதந்திரப்பெரும் போர் என்று சொல்கிறார்கள். அதை மாற்றி முதலாம் சுதந்திரப் பெரும்போரை 72 பாளையகாரர்கள் 1800 ஆம் ஆண்டிலேயே நடத்தினார்கள். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பிறகு; நடத்தப்பட்ட ஒரு வரலாற்றுப் போராட்டம். அது வரலாற்றில் முழுமையாக இடம் பெறவில்லை. அதை ஒன்றிய அரசும் மாநில அரசும் வலுவாக பதிய வேண்டும். அதை முன்னெடுக்க வேண்டும் என்பதை கேட்டு கொள்கிறோம்.
அதேபோல தமிழ்நாட்டில் உள்ள பாடப்புத்தகங்களில் சுதந்திரப் போராட்ட வரலாறுகள் என்று வருகின்ற போது அதில் முதலிடம் தரக்கூடியவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், கோபால் நாயக்கர், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் இவர்கள்தான். இவர்களைப் பற்றிய பாடங்களை பாட புத்தகங்களை வைக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் கோபால் நாயக்கர் உடைய வரலாற்றை பற்றி ஆய்வு செய்வதற்கு தனியாக ஒரு ஆராய்ச்சி அமைப்பை உருவாக்கி அதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் அரசு அலுவலர்கள் அல்லாமல் பொது முறையில் பல பேராசிரியர்கள் பல கல்வெட்டு ஆய்வாளர்கள் அந்த மாவீரனை பற்றிய வரலாற்றுச் செய்திகளை எடுத்துள்ளனர். அவர்களை எல்லாம் இணைத்து ஒரு ஆய்வு மையம் ஒன்றை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்த மண்டபத்தில் தமிழகம் தழுவிய முறையில் இருக்கக்கூடிய தகவல்களை திரட்டக்கூடிய அளவில் அந்த ஆய்வை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.