கடலூர் அருகே நடுக்கடலில் மீனவர்கள் விரித்த வலையில் சுமார் 150 டன் அளவிலான பெரும்பாறை மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு கடந்த 2 நாட்களாக அதிகளவில் ‘பெரும்பாறை’ எனப்படும் பெரிய வகை மீன்கள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை கடலூர் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில் சுமார் 150 டன் அளவிலான பெரும்பாறை மீன்கள் சிக்கியுள்ளது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தபோதும், அந்த மீன்களை கரைக்கு கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
இதனை அடுத்து,சக மீனவர்களுக்கு தகவல் அளித்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய பைபர் படகுகள் நடுக்கடலுக்கு வர வழைக்கப்பட்டன. அதில் வலையில் மீன்கள் பகுதியாக அனுப்பப்பட்டன. ஒரு மீன் 8 கிலோ முதல் 80 கிலோ வரை எடையிலான 150 டன் மீன்கள் படகுகள் முலம் கரைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே, பெரும்பாறை மீன்கள் அதிகளவில் கிடைத்துள்ளதால் கடலூரில் மீன்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. வழக்கமாக கிலோ 400 ரூபாய் வரை விற்கப்படும் இந்த மீன்கள் இன்று 100 ரூபாயாக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றை ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகளும், உள்ளூர் மக்களும் ஆர்வமுடன் மீன்களை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக இந்த வலைகளில் 10 முதல் 15 டன் மீன்கள் கிடைப்பதே அரிதான நிலையில் 150 டன் அளவிலான பெரும்பாறை மீன்கள் கிடைத்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.