தந்தை துப்புரவுப் பணியாளர்..
மகள் நகராட்சி ஆணையர்..
சாதித்துக் காட்டிய மகள் துர்கா…
நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றியவரின் மகள், நகராட்சி ஆணையராக பதவி ஏற்க இருக்கும் நிகழ்வு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி புதுப்பாலம் சத்தியமூர்த்தி மேட்டு தெருவை சேர்ந்தவர்கள் சேகர் – செல்வி தம்பதியர். இவர்களது ஒரே மகள் தான் துர்கா. இவரின் தந்தை சேகர் மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றியவர். தாய் செல்வி தங்கள் வீட்டு வறுமை அரக்கனை விரட்டவும் மகள் துர்காவை நன்கு படிக்க வைக்கவும் கணவர் சேகரின் வருமானம் மட்டும் போதாது என பல வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார்.
துர்கா மன்னார்குடியில் உள்ள தூய வளனார் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்துள்ளார். பின்பு மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பயின்றுள்ளார். “கொடிது கொடிது வறுமை கொடியது! அதனினும் கொடிது இளமையில் வறுமை!” எனும் அவ்வை மூதாட்டியின் வரிகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர் துர்கா.
சேகர், செல்வி தம்பதியர் தங்கள் மகளை நன்கு படிக்க வைத்து அரசு பணிக்கு அனுப்ப வேண்டும் என்கிற அதீத ஆசையும், லட்சியமும் அவர்களுக்குள் இருந்துள்ளது. இதனால் துர்காவை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் இளங்கலை வரை பட்டம் பயில வைத்துள்ளனர்.
இந்த நிலையில், தங்கள் மகள் துர்காவை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவருக்கு 2015 இல் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆயினும், இளங்கலை வரை கஷ்டப்பட்டு படிக்க வைத்தும் தங்கள் மகள் அரசு பணிக்கு செல்லவில்லையே என்கிற ஏக்கம் சேகர் – செல்வி தம்பதியருக்கு நெடு நாட்களாகவே இருந்துள்ளது. துர்காவின் தந்தை சேகர் கடந்த வருடம் பணியில் இருக்கும் காலத்திலே இறந்து விட்டார்.
திருமணம் ஆன பின்பும் தாய் – தந்தையரின் அரசு பணி ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்கிற ஏக்கம் மட்டும் மகள் துர்காவிற்கு இருந்துள்ளது. இதனை தனது கணவர் நிர்மல்குமாரிடம் சொல்லி உள்ளார். நிர்மல் குமாரும் தனது மனைவியின் கனவை நிறைவேற்ற, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத பல்வேறு வகைகளில் உதவிகள் புரிந்துள்ளார்.
இது குறித்து துர்கா தரப்பில் கூறியதாவது, சிறு வயதில் தன்னுடைய தாய் தந்தையர் தனக்காக பட்ட துயரங்களை எல்லாம் துர்கா கண்கூடாக கண்டு வளர்ந்தார். தன்னை ஒரு அதிகாரியாக்கி பார்க்க வேண்டும் என்பது அவர்களுடைய நீண்ட நெடுநாள் கனவு.
இந்த சூழலில் தான், கடந்த 2019 ல் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதத் தொடங்கிய துர்கா அந்த முயற்சியை தான் வெற்றி பெறும் வரை கைவிடவே இல்லை. முயற்சிகள் தவறலாம் முயற்சிக்க தவறலாமா? எனும் வாசகம் மட்டும் அவருக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு- 3 பேர் கைது (apcnewstamil.com)
2023 ல் டி.எஸ்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வு எழுதி 2024 ல் நேர்முகத் தேர்வில் 30 க்கு 30 மதிப்பெண்கள் பெற்றார். காவல்துறையின் முக்கிய பிரிவான எஸ்பிசிஐடியில் அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு வந்தும். என் தந்தை பணிபுரிந்த நகராட்சி துறையிலே பணிபுரிந்து அவருக்கு பேரும் புகழும் சேர்க்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. அதனால் தான் அவர் நகராட்சி ஆணையர் பதவிக்கு விருப்பம் தெரிவித்து அந்த துறையை தேர்வு செய்தார் என்றனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக போலிச் சான்றிதழ் – தீட்சிதருக்கு தொடர்பு (apcnewstamil.com)
நகராட்சியில் கடைநிலை ஊழியராக பணியாற்றிய ஒருவரின் மகள் நகராட்சியின் ஆணையராக பதவி ஏற்க இருப்பது, ஒருவருக்கு தாய் – தந்தையரின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற விடாமுயற்சியும், எந்த நிலையில் இருந்தாலும் கல்வியை விடாப்பிடியாக பற்றிக் கொண்டு அதனைப் பயின்று வந்தால் எந்த நிலைக்கு வேண்டுமானாலும் முன்னேறலாம் என்பதற்கு சாட்சியாகும். விரைவில் நகராட்சி ஆணையராக பதவியேற்க இருக்கும் துர்கா இளம் தலைமுறையினருக்கு ஒரு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு தான்!