Homeசெய்திகள்தமிழ்நாடு‘எச்சரிக்கையாக இருங்க’ - பேரிடர் மேலாண்மை துறையின் குறுஞ்செய்தி அலெர்ட்..

‘எச்சரிக்கையாக இருங்க’ – பேரிடர் மேலாண்மை துறையின் குறுஞ்செய்தி அலெர்ட்..

-

மிக்ஜம் புயல்
‘மிக்ஜம்’ புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை செய்து வருகிறது.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் , தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் ( டிச.5) முற்பகலில் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்க உள்ளது. மணிக்கு 5 கி.மீ வேகத்தில் மெதுவாக நகர்வதால் புயல் தொடர்ந்து வலுப்பெற்று தீவிர புயலாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 – 100கி.மீ வேகத்திலும் , சில சமயங்களில் 110 கி.மீ வேகத்திலும் சூறாவளி வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் புயல் காரணமாக வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவை அதிக பாதிப்பை சந்திக்ககூடும் என்பதால் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் சேர்த்து பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மைத்துறை குறுஞ்செய்தி

இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கையாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

“1. பொதுமக்கள் மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்
2. கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும்.
3. ஆபத்தான இடங்களிலும், நீர் நிலைகளின் அருகிலும் மக்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
4. அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர், பால், மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும்.
5. மொட்டை மாடிகளில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம்.
6. பழைமையான கட்டிடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
7. தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்கள் அல்லது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.” என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ‘மிக்ஜம்’ புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை செய்து வருகிறது.

 

MUST READ